முருகன் அவன் அழகன்

எனக்கு தெரிந்து வாழ்நாளில் இப்போதுதான் வராஹமூர்த்தியின் காலசந்தி பூஜைக்கு முதல் ஆளாக வந்திருக்கிறேன். எப்போதும் எனக்கு முன் இருபத்தைந்து நபர்களாவது வந்துவிடுவது வழக்கம். அதிலும் பெரும்பாலோனோர் திருமண பிரார்த்தனைக்காக வந்திருப்பவர்களாய் இருப்பார்கள். அவ்வப்போது திவ்யதேச சுற்றலாவில் இங்கு வருபவர்களும் உண்டு. என்னை போல இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு இங்கு வருவோரும் சிலர் உண்டு. அதிசய திருநாளாக இன்று காலை இந்த அடியேனையும் கோவில் அர்ச்சர்களையும் தவிர பக்தர்கள் எவரும் இல்லை.

கோவிலின் வாயிற்படியை தாண்டி உள்ளே நுழைந்ததும் வரும் புல்வெளி மைதானமெங்கும் பனித்துளி படர்ந்திருந்தது. சூர்யோதய நேரமென்பதால் கார்த்திகை மாத குளிரையும் தாண்டி  காற்றில் ஒரு இளஞ்சூடு இருப்பதையும் உணர்ந்தேன். “நாழியாகும், ஸ்வாமிக்கு அலங்காரம் போயிண்டு இருக்கு!” என்றபடி அர்ச்சகரொருவர் என்னை கடந்து இடப்பக்கம் இருந்த அலங்கார மண்டபத்தை நோக்கி சென்றார்.

நான் சமத்தாக புல்வெளி மைதானத்தை தாண்டி இருந்த நெய்வேத்திய கடை அருகே அமர்ந்து கொண்டேன். கடைக்கு கண்ணைப்பறிக்கும் ஃப்ளோரசண்ட் ஆரஞ்சு நிறம் அடித்திருந்தார்கள். பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்யும் கடை. நான் கோவிலின் துளசி தீர்த்தம் வாங்காமல் சென்ற நாட்கள் கூட உண்டு ஆனால் இக்கடையில் விற்கப்படும் நெய்வேத்திய தட்டை வாங்காமல் ஒருநாளும் இக்கோவிலின் படி தாண்டி வெளியே சென்றதில்லை.

“இந்த குருக்கள் வெறும் நாழியாகும்னு சொன்னாரே தவிர, எவ்வளவு நாழியாகும்னு சொல்லவே இல்லையே! யாரேனும் வருவதற்கு முன்பு இப்போதே போய் வரிசையில் நின்று கொண்டால் என்ன?” என்று சமயோஜிதமாக யோசித்தேன்.

“ச்சே யாரும் இல்லாத நேரத்திலும் எதற்காக அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவனை போல வீம்பாக போய் நிற்க வேண்டும்! எதற்கும் நுழை வாயிலில் யாரேனும் வருகிறார்களா?” என அவ்வப்போது எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அப்போதைய எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நான்தான் முதலில் வந்தேன் ஆகையால் முதல் தரிசனம் எனக்குதான். எனக்கு பின் வந்தவர் எக்காரணம் கொண்டும் எனக்கு முன்பாக சன்னதிக்குள் சென்று விடக்கூடாது. ஒருவேளை அப்படி யாரேனும் வந்தால் நானே “நாழியாகும். ஸ்வாமிக்கு அலங்காரம் போயிண்டு இருக்கு. இங்க உக்காருங்கோ” என எனக்கு அருகே ஒரு இடத்தை காட்டிவிட வேண்டியதுதான் என்ற முடிவோடு அமர்ந்திருந்தேன்.

நுழைவாயிலின் முன் இருந்த கல்மண்டபத்தில் சிறுவன் ஒருவன் மயில் தோகை கட்டொன்றை கட்டியணையத்தபடி அமர்ந்திருந்தான். அவன் வைத்திருந்த மயில் தோகை கட்டில் குறைந்தது இருநூறு தோகைகளாவது இருக்க வேண்டும். அவனிடம் போகும்போது நிச்சயம் பத்து தொகைகளாவது வாங்கி செல்லவேண்டும் என நினைத்துக் கொண்டேன். காடு மேடென தேடியலைந்து மயில் தோகை சேகரித்ததால் வந்த சோம்பலோ என்னவோ தெரியவில்லை அவன் பார்ப்பதற்கு சற்று சோர்வுடன் இருந்தான்.

சென்ற முறை மயில் தோகை விற்கும் சிறுவனொருவன் நான் நூறு ரூபாய்க்கு மயில் தோகை வாங்கியதற்காக ஒரு தோகையை இனாமாக கொடுத்திருந்தான். நிச்சயம் அவன் இவனாகத்தான் இருக்க வேண்டும். அதே கருத்த முகம். அதே பரட்டை தலை. அநேகமாக சட்டைகூட அவன் அன்று அணிந்திருந்த அழுக்கு சட்டைதான். ஒருவேளை இவன் அவன் இல்லை என்றாலும். அவனை உதாரணம் காட்டியாவது ஒரு தோகையை இலவசமாக வாங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன்.

அப்போது கோவிலினுள் இருந்தபடியே ஒருவர் “வர்லாம் வாங்கோ” என்றார்.  புல்வெளி மைதானத்தில் என்னைத்தவிர வேறெவரும் இல்லை எனவே அது சாட்சாத் எனக்கான அழைப்புதான். இனாம் தோகை கிடைக்கப்பெறுவதும் கிடைக்காமல் போவதும் எல்லாம் அந்த பெருமாளின் கையில் உள்ளது. வேண்டிக்கொண்டே எழுந்தேன்.

ஆட்கள் யாரும் இல்லாத நிலையிலும் ஆங்காங்கே தடுப்பை ஏற்படுத்தி கருவறைக்கு செல்லும் வழியை வளைந்து வளைந்து செல்லுமாறு அமைத்திருந்தார்கள். முதல் வளைவில் அமர்ந்திருந்த வைணவப் பெரியவர் ஒருவரிடம் தேங்காய் உடைத்து வாங்கிக்கொண்டேன்.

மூன்றாவது வளைவில் அமர்ந்திருந்தவரிடம் அர்ச்சனை டோக்கன் வாங்க ஐந்து ரூபாய் நீட்டியதும் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சார் சில்லறை இல்லை நீங்கதான் முதல் ஆள் என்றார். “பரவாயில்லை மிச்சத்தை நீங்களே வச்சுக்கோங்க! என்றோ அல்லது பரவாயில்லை உங்ககிட்ட இருக்கிற சில்லறையை கொடுங்க” என்ற வார்த்தையைதான் எதிர்பார்த்திருந்திருப்பார்.

ஆனால் கெடுவாய்ப்பாக நான் கொடுத்திருந்தது ஐந்தே ஐந்து ரூபாய்தான்.

“நல்ல பாருங்க அது அஞ்சிரூவாதான்”

ஹிஹி என அசடு வழிந்தவரிடமிருந்து ரசீதை பெற்றுக்கொண்டு சன்னதிக்குள் நுழைந்தேன். லட்சுமி தேவி தாயாருடன் வராஹமூர்த்தி மங்களகரமாக வீற்றிருந்தார். குருக்களிடம் நான் கொண்டுவந்த அர்ச்சனை பொருட்களை ஒப்படைத்தேன். இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் வழிபட்ட இவ்வைணவ தலத்தில் இந்த அடியேனும் வழிபட ஒரு பிறவி கிடைத்திருப்பதை விட பெரும்பேறு வேறு என்ன எனக்கு  வேண்டும் என கைகளை கூப்பி வணங்கினேன்.

ஆயிரம் வருட பழமை கொண்ட இத்திருக்கோவில் எத்தனை அரசர்களை அரசாங்கங்களை பார்த்திருக்கும். குருக்கள் தந்த துளசி தீர்த்தத்தில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை தலையில் தடவிக்கொண்டேன். அப்படியே அர்ச்சனை மாலையை வாங்கிக்கொண்டு பகவானை புறமுதுகிடாமல் சிரத்தையோடு நகர்ந்தேன். போகும்வழியில் பெரியாழ்வார் சிலை அருகே குவிக்கப்பட்டிருந்த துளசி குவியலிலிருந்து சில இலைகளை கிள்ளியெடுத்து கையில் கொஞ்சம் வைத்தபடியும் வாயில் கொஞ்சம் மென்றபடியுமாக வராஹர் சன்னதியை விட்டு வெளியில் வந்தேன்.

புல்வெளி மைதானத்தை தாண்டி இருந்த நெய்வேத்திய கடை இப்போது திறந்திருந்தது. ஆஹா இதல்லவோ எனது பாக்கியம். கோவிலின் விற்பனை பிரிவு நிர்வாகி யாரோ ஒருவர் காலையிலேயே கடை திறந்திருந்தார். ஆசை ஆசையாய் வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்த நான்கு தட்டைகளை வாங்கிக்கொண்டு புல்வெளி மைதானத்தில் மதிற் சுவற்றை ஒட்டி அமர்ந்து கொண்டேன்.

அதிகாலையில் வெறும் வயிற்றுடன் வீட்டிலிருந்து கிளம்பி இருந்தபடியால் எனக்கு எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டும் என்பது போலிருந்தது. தற்போது கையில் இருப்பதோ என் பிரியத்திற்கு பாத்திரமான தட்டை. அதுவும் பகவானுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட தட்டை. நன்கு காய்ந்து போய்  உடைப்பதற்கு கடிமாய் இருந்தது அது.

தட்டையின் சுவையின் சூழ்ச்சுமமே அதன் கெட்டித்தன்மையில் தான் இருக்கிறது. எந்த அளவிற்கு கடினமோ இருக்கின்றதோ, அந்த அளவிற்கு நீடித்த மென்று விழுங்கள் தேவைப்படும். சமீப காலமாக நான் எதையாவது மென்று விழுங்குகிறேன் என்றால் அது இந்த பகவானுக்கு படைக்கப்பட்ட தட்டையன்றி வேறு அல்ல.

நான் அன்றாடம் உண்ணும் சாதம், இட்லி, தோசை வகையறாக்களுக்கு எல்லாம் பற்களே தேவைப்படாது நுனி நாக்கால் மேல் அன்னத்தில் வைத்து அழுத்தினாலே போதுமானது. தின்பதற்கு முன் தட்டையின் நடுவே ஓட்டை இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்வது எனது வழக்கம். இது மாலையாய் கோர்த்து பகவானுக்கு படைக்கப்பட்டது என்பதாலேயே சற்று கூடுதல் சுவை வந்துவிடுகிறது என்பது என் எண்ணம். 

இருப்பதிலேயே சற்று வெண்மையானதொன்றை எடுத்தேன். சணல் கயிறு போகும் அளவிற்கு நடுவில் ஓட்டை இருந்தது. எவ்வளவு பெரிய பாக்கியவான் நான் வராக மூர்த்திக்கு படையலிடப்பட்ட தட்டை எனக்கும் அருளப்பட்டிருக்கிறதே என்று இருகைகளாலும் உடைத்து அதிலிருந்து ஒரு சில்லுவை வாயில் போட்டு மென்றேன்.

குழலினிது யாழினிது என்பார் இந்த தட்டையை வாயில் போட்டு மெல்லாதவர். இந்த தட்டையின் செய்முறை பற்றியெல்லாம் எனக்கு எந்தஞானமும் கிடையாது. ஆனால் தட்டையை வாயில் போட்டு மெல்ல மெல்ல அதிலிருந்து நெய்யில் வறுத்து அரைத்த உளுத்தம்பருப்பின் சுவை வந்து கொண்டேயிருக்கும். இருகைகளால் அழுத்திப்பிடித்து உடைத்திருந்தபோதும் என் கையில் ஒரு எண்ணெய் பிசுக்கை காணமுடியவில்லை. எண்ணையில்லாமல் சூரிய வெய்யிலில் பண்டம் பொரிக்கும் வித்தை கற்றவர்கள்தான் இந்த எண்ணைப்பிசுக்கில்லாத தட்டையை செய்திருக்க முடியும் என தோன்றியது எனக்கு. போகிற போக்கில் பசிக்கு ஒன்று ருசிக்கு ஒன்று என் இரண்டு தட்டைகளை தின்றிருந்தேன்.

கோவில் வாயிலின் வெளிப்புறத்தில் செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது மயில் தொகை நினைவிற்கு வந்தது. எங்கே அந்த மயில் தொகையை கட்டியணைத்திருந்த சிறுவன் என கல் மண்டபத்தினுள் தேடினேன். சிறுவனை காணவில்லை. இடது புறம் அமைந்த வாகன நிறுத்துமிடத்தில் போய் தேடிப்பார்த்தேன். அங்கே நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய காரை தவிர வேறு யாரையும் காணவில்லை. 

ஒருவேளை வீதியில் நின்று யாரிடமாவது சிறுவன் தொகை விற்று கொண்டிருக்கலாம். கல் மண்டபத்தை தாண்டி விறுவிறு வென நடந்து பொய் வீதியில் பார்த்தேன். ஹூஹூம் அங்கும் அந்த சிறுவன் இல்லை. இறைவா இதென்ன சித்து விளையாட்டு. அரை மணி நேரத்திற்கு முன்புதான் அந்த மயில் தொகை சிறுவனை மயில்மேல் அமர்ந்த முருகனை போல இந்த கல் மண்டபத்தில் பார்த்திருந்தேன். இப்படி அவன் காணாமல் போனால் நான் மயில் தொகையை வேறு எங்கு போய் வாங்குவேன். நூறு ரூபாய்க்கு மயில் தொகை வாங்கினால் இனாமாக ஒன்று கொடுப்பவனை நான் எங்கு பொய் தேடுவேன் என நொந்து கொண்டே கார் பார்க்கிங் நோக்கி திரும்பி நடந்தேன்.

வழியில் அகத்திக்கீரை விற்கும் பெண்ணொருத்தி “யாரை தேடறீங்க?” என்றாள். “கொஞ்ச நேரத்திற்கு முன்பு இங்கமர்ந்திருந்த மயில் தோகை விற்கும் சிறுவனை” என்றேன். அதற்குள் மயில் தோகை என்ற சொல் கேட்டு கல் மண்டபத்தினருகே கடை போட்டிருந்த இளநீர் வியாபாரி ஒருவர் “சார் மயிலிறகா வேணும்? எத்தன?” என்று கேட்டுக்கொண்டே ஒரு பைக்குள் முடக்கி வைக்கப் பட்டிருந்த மயில் தோகை கட்டை எடுத்து தன்முன் இருந்த மரமேசையின் மேல் வைத்தார். எனக்கு எனோ அந்த இளநீர் வியாபாரியிடமிருந்து மயில் தோகை வாங்க மனம் வரவில்லை. அவரிடம்  கூடுதல் விலையாக இருக்கலாம் என்பது மட்டுமில்லாமல் அவரிடம் இனாம் தோகை ஏதும் பெற முடியாது என்பதும் ஒரு காரணம்தான். நான் நாசூக்காக இல்லை இருக்கட்டுமென மறுத்துவிட்டேன்.

“இதோ இருக்கு சார். எத்தன வேணும் ஒங்களுக்கு?”

இளநீர் கடைக்காரர் என்னை துரிதப்படுத்தினார். நான் தயங்கியதை புரிந்து கொண்ட அகத்திக்கீரை பெண்மணி “அந்த பையனுக்கு ஏதாவது குடுக்கணும்னு நெனைக்றாப்ல!” என்று நிலைமையை விளக்கினார். கருத்தை கச்சிதமாக கவ்வுகிறீர்கள் போங்கள் என்று அதையே நானும் ஆமோதித்துவிட்டு கார் பார்க்கிங்கை நோக்கி நடையை கட்டினேன். காரில் ஏறியமர்ந்த என்னை நோக்கி மூச்சிரைக்க சிறுவன் ஒருவன் ஓடிவந்தான். அவன் கையில் மூன்று அல்லது நன்கு மயில் தோகைகள் இருக்கும். 

“அண்ணா மயில் தொகையா வேணும் இந்தாங்க”

அவன் கையில் வைத்திருந்த தோகையை என் முகத்திற்கு நேராக நீட்டினான். அவன் நீட்டிய தொகையோ இழைகள் எல்லாம் கொட்டிப்போய் பரிதாபமாக காட்சியளித்தது. இவன் நான் பார்த்த மயில் தோகை சிறுவன் அல்ல. யாரேனும் இவனுக்கு என்னை பற்றி தகவல் தந்திருக்கக்கூடும். அதனால்தான் எங்கிருந்தோ மூன்று மயில் இறகுகளை பிய்த்து கொண்டு ஓடி வந்திருக்கிறான். ஒருவன் காடு மேடு என மயில் செல்லும் தடங்களிலெல்லாம் சென்று மயிலிறகு சேகரித்து கோவிலில் விற்று பிழைப்பு நடத்துகிறான். இவன் என்னவென்றால் எதோ மூலையில் கிடந்த முடியுதிர்ந்த இறகினை கொண்டுவந்து நாடகமாடுகிறான்.

“தம்பி இதுல முடியெல்லாம் கொட்டிப்போச்சு. எனக்கு வேணாம். எடுத்துட்டுப்போயிரு”

சொன்ன மாத்திரத்தில் மயில் தொகையை வீசியெறிந்தான் சிறுவன். சட்டென கையை நீட்டி “அண்ணா! ஏதாவது காசு கொடுங்கண்ணா!” வென்று கெஞ்ச ஆரம்பித்தான்.

இது நான் எதிர்பார்த்ததுதான். “காசெல்லாம் கொடுக்க முடியாது! வண்டியை ரிவர்ஸ் எடுக்க வேண்டும் கொஞ்சம் தள்ளி நில்!” என்பது போல் அந்த சிறுவனை முறைத்துப் பார்த்தேன்.

சிறுவன் என் கோவத்தை கண்டு கொண்டதாக தெரியவில்லை. காரில் மேல் கிட்டதட்ட இப்போது சாய்ந்து கொண்டான்.

“அண்ணா ஏதாச்சும் காசு கொடுங்கண்ணா” சிறுவனின் கெஞ்சல் அதிகமானது.

“இங்க மயில் தோகை விப்பானே ஒரு பையன் அவன உனக்கு தெரியுமா”

“தெரியும்னா”

“அவன மாதிரியே நீயும் மயில் தோக விக்கலாம் இல்ல எதுக்கு இப்படி பிச்சை எடுக்குற”

“அண்ணா அவங்க மயில் தோக விக்கலாம்னா. நாங்க விக்க கூடாது”

“அது என்ன? நீங்க ஏன் விக்கமாட்டீங்க”

“அவங்க பூம்பூம் மாட்டுக்காரங்க”

முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை பிறகு நான் இது தொகுதி பங்கீடு போல ஒரு வித தொழில் பங்கீடு என புரிந்து கொண்டேன்.

“ஏன் அவங்க மட்டும்தான் மயிலிறகு எடுப்பாங்களா”

“இல்லண்ணா அவங்க மட்டும் தான் பாரீஸ்ல இருந்து வாங்கிட்டு வந்து விப்பாங்க”

“என்னது பாரீஸ்ல இருந்து வாங்கிட்டு வந்து விப்பாங்களா!”

“ஆமாண்ணா”

மயிலிறகு விற்பது பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு மட்டுமான தொழில் என்று அவன் சொன்னதைவிட மயிலிறகு சென்னை பாரிமுனையிலிருந்து ஹோல்சேலில் வாங்கப்பட்டது என்பது எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. வீட்டில் பூஜை அறையில் நான் மாட்டிவைத்திருக்கும் அத்தனை மயில் தொகையும் ஹேண்ட் பிக்டு என்றுதான் இதுநாள் வரை நினைத்திருந்தேன். 

“ஏன் நீங்களும் பாரீஸிலிருந்து வாங்கி விக்கலாம் இல்ல?”

“ஹூஹூம் நாங்க குறுக்கர். நாங்கெல்லாம் மயிலிறகு விக்கமாட்டோம்”

 “எனக்கு புரியல யாரு நீங்க?”

“கொறவங்லேயே நாங்க குறுக்கர் அவங்க பூம்பூம் மாட்டுக்காரங்க”

சிறுவனுடைய பேச்சு தொனி குறுக்கர் சாதிகாரங்க பூம்பூம் மாட்டுக்காரர்களை விட ஒசத்தி என்பது போலிருந்தது.

“அண்ணா ஏதாச்சும் காசு குடுங்கண்ணா” சிறுவன் மீண்டும் கெஞ்சலை ஆரம்பித்தான்.

பர்ஸினுள் ஏதேனும் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் தாள் தென்படுகிறதாவென தேடினேன். சில நூறு ரூபாய் தாள்களை தவிர எதுவும் இல்லை. ஐம்பது ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் நூறு ரூபாய் என்பது எனக்கு பெரிய தொகைதான்.

சிறுவன் தற்போது அவன் வயிற்றில் கைவைத்து கொண்டே “காசு குடுங்கண்ணா! ஏதாச்சும் சாப்பாடு வாங்கிக்கிறேன்!” என்றான்.

வேறுவழியின்றி நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன் “யாரிடம் இப்படி பிச்சை எடுக்காதே!” என்று முணுமுணுத்தபடி.

வாஞ்சையுடன் காசை வாங்கிக்கொண்ட சிறுவன் என்ன நினைதானோ என தெரியவில்லை “இருங்க, உங்களுக்கு நான் எளனி கடைலேர்ந்து இறகு வாங்கிட்டு வரேன்!” என்றான்.

“இருக்கட்டும் வேண்டாம். நான் அடுத்தமுறை அந்த பூம்பூம் மாட்டுக்காரனிடமே வாங்கிக்கிறேன். பத்துக்கு ஒன்று இனாமாக கொடுக்கும் அவன் அழகன் முருகன்”

நான் சொல்வதேதும் புரியாமல் காருக்கு வழிவிட்டு சிறுவன் தள்ளி நின்று கொண்டான்.

— ரா. சிவராமன்

Leave a Comment