அதிதி தேவோ பவ – பகுதி 5

பக்கத்திலிருந்த ஆம்லெட் கடையில் உட்கார்ந்துகொண்டும், அவ்வப்போது பார்க்கிங் செய்ய வரும் வாகனங்களுக்கு “ஸாரா ஆகே லே ஜாவோ” என்று குரல் கொடுத்துக்கொண்டும் இருந்தேன்.

“இப்படி அங்கும் இங்கும் ஓடி ஓடி தகவல் சொல்லிக்கொண்டிருந்தால் என் தாவு தீர்ந்து விடும். ஆகவே ஏதாவதொரு உபாயம் செய்தாக வேண்டும்! என்ன செய்யலாம்?” என்று யோசித்ததில், சட்டென ஒரு யோசனை வந்தது.

ஹனோகி பாலத்திற்கு வருவதற்கு முன்னர், சற்றுத் தூரத்தில் பியாஸ் நதிக்கரையில் கொட்டுவதற்காக சதுர வடிவத்தில் வெட்டப்பட்டிருந்த மலைக்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கவனித்திருந்தேன். நடைக்கு இரண்டு கற்கள் வீதம், நான்கு கற்களை கொண்டு வந்து காரின் முன்னும் பின்னும் போட்டேன்.

அதற்குள், மானஸா ஹோட்டல் ஊழியக்காரன் ஒருவன் கையில் மஞ்சள் நிற கொடியுடன் வந்து நின்றான். ரோட்டில் போகும் வாகனங்களுக்கு கொடியசைத்து சாப்பிட அழைப்பவன் அவன். அநேகமாக இந்தியா முழுவதும், ரோட்டோரங்களில் கொடியசைத்து கஸ்டமர்களை அழைக்கும் பழக்கம் எல்லா ஹோட்டல்காரர்களிடமும் இருக்கிறது என நினைக்கிறேன்.

நான் அவனை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம்—ஏதாவது செய்து, இது ப்ரேக்டவுன் ஆன வண்டி என்று இங்கு நிறுத்த வருகிற வாகன ஓட்டிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால், வாகனத்தைச் சுற்றி நான் வைத்திருந்த நான்கு கற்கள் அதற்குப் போதுமா என்று தோன்றவில்லை.

ஏதேனும் மரக்கிளையை வைத்து ஜோடனை செய்யலாம் என்று யோசித்தேன். லாரி டிரைவர்கள் ரோட்டில் எச்சரிக்கை செய்ய மரக்கிளையை வைப்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். என்னெதிரே சாலையைத் தாண்டி மலைமேல் செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதை இருந்தது. அங்கே எங்காவது முறிந்த மரக்கிளையோ, அல்லது ஒடிப்பதற்கு இலகுவான சிறியவகை மரமோ கிடைக்குமாவென தேடிக்கொண்டே, அந்தப் பாதையில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சென்றிருப்பேன்.

என்னைச் சுற்றி, சிறிய வகை மரவள்ளிக்கிழங்கு போல இலையுடைய செடிகள் நிறைய வளர்ந்திருந்தன. மரத்தைத் தேடி இன்னும் ஒரு கிலோமீட்டர் மலைமேல் ஏற நான் தயாராக இல்லை. எனவே, இருப்பதிலேயே பெரிதாய் இருந்த ஒரு செடியைத் தேர்ந்தெடுத்து வேரோடு பிடுங்கிக்கொண்டு கீழிறங்கி வந்தேன்.

காரின் மீது பக்கவாட்டில் அந்தச் செடியைச் சாய்த்துவைத்தேன். தூரத்திலிருந்து பார்த்தால், இது ப்ரேக்டவுன் ஆன கார் என்பது நன்கு தெரியும்படி இருந்தது. ஒரு உபாயம் செய்துவிட்ட திருப்தியில் திரும்பிப் பார்த்தால், இப்போது கொடிய அசைப்பவன் அருகே—“காரை தூக்கி ஆற்றுக்குள் வீசி விடுவேன்” என்று மிரட்டிச் சென்ற அந்த ஆஜானுபாகுவான ஊழியர்—என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“டிரைவர் கார் மெக்கானிக்கை கூட்டிக்கொண்டு வர சென்றிருக்கிறார்; விரைவில் நாங்கள் காரை எடுத்துவிடுவோம்,” என்று அந்த ஊழியருக்கு விவரம் தந்துவிட்டு, பார்வையை ரோட்டில் செலுத்தினேன்.

இதற்கு முன்பு கூட கார்கள் அங்கே நிறுத்த முயற்சி செய்தன. அப்போது “ஸாரா ஆகே ஜாவோ” என்று சொல்லி பார்க்கிங்குக்கு வழிகாட்டி வந்தேன். ஆனால் இப்போது அதற்கு தேவையே இல்லாமல் போயிற்று. ப்ரேக்டவுன் ஆகியிருக்கும் வாகனத்தைப் பார்த்ததும், கார்கள் நிற்காமல் நேராகச் சென்று கொண்டிருந்தன.

ஆஜானுபாகுவான ஊழியர், இன்றைக்கு வியாபாரம் கோவிந்தாதான் என்று நினைத்திருப்பார் போல. “அபி தேக்குங்கா, தும் கெய்சே காடி யஹான்ஸே நிக்கலத்தே ஹே!” என்று என்னைப் பார்த்து கத்தினார்.

கொடியசைப்பவனிடம், “இவனை எக்காரணத்தைக் கொண்டும் காரை எடுக்க விடாதே,” என்று உத்தரவு போட்டுவிட்டு, “சாலே! நே யே கஞ்சாகி பவுதே ரக்தியா,” என்று முனகிக்கொண்டே ஹோட்டலை நோக்கிச் சென்றார்.

கொடியசைப்பவன், ஆம்லெட் கடையருகே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை தரதரவென இழுத்துவந்து, கார் அருகே போட்டு உட்கார்ந்தான். அவ்வப்போது, ஈ ஓடுவது போல கொடியை அங்கும் இங்கும் அசைத்தான்.

ரோட்டில் போகும் கார்களைப் பற்றியோ, வாடிக்கையாளர்களை அழைக்க ரோட்டில் வந்து கொடியசைக்க வேண்டும் என்பதையோ அவன் கிஞ்சித்தும் கவலைப்படாதவனாகத் தெரிந்தான்.

கமலுக்கு போன் செய்தேன். “எங்க இருக்கீங்க கமல்? குல்லு போயாச்சா?”

“நடந்து போயிருந்தாலே இந்நேரம் குல்லுவுக்கு போயிருக்கலாம் ஜி! இந்த மினிபஸ்க்காரன் அவ்வளோ மெதுவா ஓட்டிட்டு போறான். அங்க ஹோட்டல்காரன் ஏதாவது பிரச்சனை பண்ணானா?”

“ச்ச, ச்ச… அதெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க மெக்கானிக்கை கண்டுபிடித்ததும் எனக்கு போன் பண்ணுங்க.”

நான் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், இரண்டு மூன்று கார்கள் எங்களை கடந்து போயிருந்தன. கொடியசைப்பவன், தொந்தி மேல் கொடிக்கம்பைச் சாய்த்துவைத்துக்கொண்டு, மத்திய வெளியில் இதமாய் குளிர் காய்ந்துகொண்டிருந்தான்.

தூரத்தில் ஒரு பஸ் மலைமேல் ஏறி வந்து கொண்டிருந்தது. கொடியசைப்பவனிடம், “வா, வந்து அந்த பஸ்ஸுக்கு கொடியசைத்து அவர்களை கூப்பிடு,” என்றேன். இடத்தை அடைத்துக்கொண்டு நிற்கும் எங்கள் காரை காரணம் காட்டி, “பிரயோஜனமில்லை; ஒருவரும் நிற்க மாட்டார்கள்,” என்றான்.

நான் அவன் தொந்தி மீது வைத்திருந்த கொடிக்கம்பை பற்றியெடுத்து, ஓடி போய் ரோட்டில் நின்று கொண்டு அந்த மஞ்சள் நிற கொடியை இடமும் வலமும் ஆட்டினேன். சூரிய வெயிலில் அந்த மஞ்சள் நிற வெல்வெட் துணி தகதகவென மின்னியது.

என்ன ஆச்சரியம்! பஸ் டிரைவர் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து என்னருகே நிறுத்தினான். நான் நேராக ஓடிச்சென்று, “மதிய உணவு தயாராக இருக்கிறது! சுத்தமான ரெஸ்ட் ரூம் இருக்கிறது! ஹோட்டலின் பால்கனியிலிருந்து பியாஸ் நதியை பார்த்துக்கொண்டே சாப்பிடலாம்!” என்றேன். நான் பேசியது அரைகுறை இந்திதான் என்றாலும், பஸ்ஸினுள் இருந்தவர்கள் புரிந்துகொண்டார்கள்.

“அதெல்லாம் சரி; பேருந்தை நிறுத்த எங்கே இடம் இருக்கிறது?” என்றான் டிரைவர்.

ஓடிச்சென்று, இரண்டு கடைகள் தாண்டி, ஒரு பேருந்து நிறுத்தும் அளவிற்கு இருந்த இடத்தை காட்டினேன். அவன் யோசிப்பதற்கெல்லாம் நான் நேரம் தரவில்லை. மலையிலிருந்து எதிர்புறமாக இறங்கி வந்து கொண்டிருந்த வாகனங்களை இடைமறித்து, ரோட்டின் நடுவே நின்றுகொண்டேன்.

பஸ்ஸிற்கு பின்னால் இருந்த கார் ஓட்டிகளும், என்னுடைய செயலுக்கு ஒத்துழைப்பு தந்து அங்கேயே நின்றுகொண்டார்கள்.

பேருந்தின் டிரைவர் மெல்ல மெல்ல வலது புறமாக, நான் காட்டிய இடத்திலே நிறுத்தினார். பஸ்ஸிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் கொண்ட குழுவொன்று இறங்கியது. உட்கார்ந்திருந்த கொடியசைப்பவன் சடாரென எழுந்து நின்றான்.

“நார்த் இண்டியன், சவுத் இந்தியன், அராபிக் அவுர் சைனீஸ் கானா மிலேகா. புல் கே ஆக்ர் மேன் ஹோட்டல் ஹே!” என்று வேகமாகவும், அதேசமயம் கணீரென்ற குரலுடனும், மீண்டும் மீண்டும் அந்தக் குழுவின் மத்தியில் சொல்லிக்கொண்டிருந்தான்.

நான் குஷியாகிவிட்டேன்—என்னுடைய முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி. கொடியை தூக்கிக்கொண்டு ரோட்டில் வந்து நின்று, கண்ணில் பட்ட வாகனங்களை எல்லாம் பார்த்து கன்னாபின்னாவென கொடியசைத்தேன்.

ஒன்றன் பின் ஒன்றாக வந்த இரண்டு கார்கள், இங்கே எங்கு நிறுத்துவது என்று வழியறியாமல் தயங்கிக்கொண்டிருந்தன. “கவலை வேண்டாம்; என்னைப் பின்தொடருங்கள்,” என்று சைகை கொடுத்துவிட்டு, இரண்டு கடைகளைத் தாண்டி பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு முன்பாக இருந்த இடத்தில், ஒரு காரை கிடைமட்டமாக நிறுத்தச் சொன்னேன்.

இன்னொரு கார், கொஞ்சம் தூரம் முன்னால் சென்று, அதுவாகவே ஒரு இடத்தை கண்டுபிடித்து நிறுத்திக்கொண்டது.

பிற மாநிலத்தவர்கள் தான் சுற்றுலா பயணிகளாக வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், மற்ற மாநில வாகனங்களை நம்பர் பிளேட்டில் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களுக்கு கொடியசைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினேன். இதற்கு முன்பு நான் கற்களைத் தூக்கிக்கொண்டு வந்த இடத்தில், ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு இடம் இருந்தது. மலையிலிருந்து கீழே இறங்கி வரும் கார்களில் ஒன்றுக்கு அந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்தேன்.

அவ்வளவுதான். அதற்கு பின்னர் நான் அங்கு ஓடியாடி கொடியசைப்பதை விட்டுவிட்டேன். அங்கங்கே கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்ததும், இப்போது தானாகவே நிற்கக் கூடிய கார்களின் எண்ணிக்கை அதிகமானது. அவரவர்களாகவே ஒரு இடத்தை எங்கேனும் கண்டுபிடித்து காரை பார்க்கிங் செய்து விட்டு, ஹனோகி பாலத்தை நோக்கி வந்தனர்.

எங்களது வேலை சுற்றுலா பயணிகளை கூவி வரவழைப்பது மட்டும் தான். மற்றபடி அவர்கள் அங்கு உணவருந்துவதும், உணவருந்தாமல் செல்வதும் எங்கள் வேலை வரம்புக்குள் வருவதில்லை.

ஆனால் மானஸா ஹோட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு இடம் கிடைக்காத சிலர் ரோட்டு கடைக்கு வந்து பிரெட் ஆம்லெட்டும் மேகி நூடுல்ஸும் உண்டு பசியாற்றிக் கொண்டிருந்தனர்.

ஆஜானுபாகுவான மனிதன் விறுவிறுப்பாக ரோட்டிற்கு நடந்து வந்து, பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்த கொடியசைப்பவனை பார்த்து, “ஹேய்! கொடியசைப்பதை ஒரு அரைமணிநேரம் நிறுத்தி வை! ஹோட்டலில் இடம் இல்லை,” என்றான்.

ஆனால் கொடியோ கொடிவீரன் கையில் இல்லை. அதை நான் என் தோளில் சுமந்து கொண்டு, மானஸா ஹோட்டலுக்காக அங்கே ரோட்டில் உழைத்துக் கொண்டிருந்தேன். பார்க்கிங்கை அடைத்துக்கொண்டு காரை நிறுத்தியதற்காக, பிராயச்சித்தம் தேடுகிறான் என என்னை பார்த்து அந்த ஆஜானுபாகுவானவன் நினைத்திருக்க கூடும்.

“ஜி! உதர் ஹவுஸ் ஃபுல்… ஆதே கண்டேக் பாத் காம் கரோ, ப்ளீஸ்!” என்று என்னிடம் கெஞ்சலாய் கூறிவிட்டு, மீண்டும் ஹோட்டலுக்குள் திரும்பினான்.

“ம்ம்… அப்படி வாடா தடியா வழிக்கு. ஜப்பான்காரனாக்கும் நான்! வேலை நிறுத்தத்துக்கு பதிலாக ஓவர் புரொடக்ஷன் செய்து கம்பெனியை காலி செய்வதை போல, இந்த மானஸா ஹோட்டலையும் கஸ்டமர்களை அனுப்பி துவம்சம் செய்து விடுவேன். ஜாக்கிரதை!” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

அரை மணி நேர ஓய்வுக்குப் பின், மீண்டும் ஓடியாடி கொடியசைத்தேன். இப்போது ஹோட்டல் ஊழியரும் என்னோடு சேர்ந்து உற்சாகமாக ஓடியாடி வேலை செய்தார். மானஸாவில் கூட்டம் நிரம்பியதாக தெரிந்ததும், நாங்களாகவே ஓய்வு எடுத்துக்கொண்டோம்.

இப்படி இடைவெளி விடுவதும், பின்னர் வாடிக்கையாளர்களை அழைப்பதுமாக எங்கள் பணி தொடர்ந்தது. நேரம் செல்ல செல்ல, ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. மணி நான்கை தொடுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

ஹனோகி பாலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மதிய உணவை ஏற்கனவே முடித்திருந்தார்கள். அந்த மூன்று மணி நேரத்தில், நான் பசியில் இருக்கும் ஒருவனை பார்த்த மாத்திரத்தில் கண்டறியும் திறமையில் நிபுணத்துவம் பெற்றிருந்தேன்.

இடையிடையே கமலுக்கு போன் செய்து, குல்லுவில் அவர்களின் நிலைமையை அறிந்து கொண்டேன். அவர்கள் கடைசியாக கொடுத்த தகவலின் படி, மெக்கானிக் கிடைத்துவிட்டாராம். ஆனால் ஆறு மணிக்கு மேல் வேலை முடிந்து கடையை பூட்டிய பிறகுதான் வர முடியும் என கறாராக சொல்லிவிட்டாராம்.

நானும் இப்போது மானஸா ஊழியர்களில் ஒருவனாகி விட்டேன். அந்த உரிமையில், அவர்களைப் போலவே பிரெட் ஆம்லெட் கடையிலிருந்து பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டேன்.

என்னுடைய உத்தேசக் கணக்குப்படி, குறைந்தபட்சம் ஐநூறு பேர்களாவது மானஸா ஹோட்டலுக்குள் சென்றிருப்பார்கள். நானே ஒரு பகல் கொள்ளைக்காரனைப் போல, ஐந்து பேருந்துகளை ரோட்டின் குறுக்கே சென்று தடுத்து நிறுத்தி, மதிய உணவை மானஸாவில் முடிக்க வைத்து அனுப்பியிருந்தேன்.

சுதந்திர தின விடுமுறை நாள் என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று வழக்கத்தை விட கொஞ்சம் அதிகம் என்று கொடியசைப்பவன் சொல்லியிருந்தான். தானாக வந்து நின்ற பேருந்துகள் வேறு மூன்று இருக்கும்.

தற்போது ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்கள் வரத்து முற்றிலும் குறைந்து போயிருந்தது. ஆஜானுபாகுவானவர் மறுபடியும் நடந்து வந்து, “பஸ்… தோனோ கானா கானே ஆஜாவோ!” என்று எங்களிருவரையும் சாப்பிட அழைத்தார்.

பாவம், கொடியசைப்பவன் நன்கு பசியில் இருந்திருப்பான் போல. டக்கென பிளாஸ்டிக் நாற்காலியிலிருந்து எழுந்து, தளர்ந்திருந்த தன்னுடைய பேன்ட்டை இழுத்து தொந்தி மேல் போட்டுக்கொண்டு, கண்ணியம் தோய்ந்த குரலில் என்னிடம், “வாருங்கள், சாப்பிட போகலாம்,” என்று அழைத்தான். நான் அவனிடம் பசியில்லை என்று மறுத்துவிட்டேன்.

ஆஜானுபாகுவானவன், “நீங்கள் வரவில்லையென்றால் எங்கள் மேனேஜர் உங்களை அழைக்க வந்துவிடுவார். ஹோட்டல் ஊழியர்கள் எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் அவர் சாப்பிடுவார்,” என்றார்.

அவன் எனக்காக ஏதோ அடித்து விடுகிறான் என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும் இந்த மாமிச மலைக்குள் இப்படி ஒரு மனசு இருக்கிறது என்பது எனக்கு வியப்பாக இருந்தது. உண்மையில் நான் உணவருந்தும் மனநிலையில் இல்லை. கமலும் சரணும் எப்போது மெக்கானிக்கை கூட்டிக்கொண்டு வருவார்கள் என, வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தேன்.

அதுவுமில்லாமல், அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் உணவருந்துவது அறமாகாது. மானஸா  ஊழியர்கள் அதை புரிந்துகொண்டு, அதற்கு மேல் என்னை நச்சரிக்காமல் ஹோட்டலுக்குள் சென்றனர்.

Leave a Comment