நான் எதிர்மறையாகப் பேசியதால்தான் இப்படி நடந்துவிட்டது என்று தோன்றிற்று எனக்கு. ச்சே! என்ன ஒரு சனி நாக்கு எனக்கு. ஓராயிரம் முறை நேர்மறையாகப் பேசியிருப்பேன்; ஆனால் அப்போதெல்லாம் கம்மென்று இருக்கும் இந்தப் பிரபஞ்ச ஈர்ப்பு விதி, இந்த சாவி விவகாரத்தில் டக்கென தன் கடமையை செய்து முடித்துவிட்டது.
கமலக்கண்ணன் சகட்டுமேனிக்கு தமிழிலும், தனக்குத் தெரிந்த இந்தியிலும் சரணை திட்ட ஆரம்பித்தான். எனக்கும் கோபம் தலைக்கு ஏறி இருந்தது.
சரியான மடையன்! முழங்காலில் மூளை இருப்பவன் கூட இம்மாதிரி செய்யத் துணிய மாட்டான். சுவற்றில் மாட்டியிருக்கும் கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகில் தேய்த்துப் பார்த்தவன் போல இருந்தது சரண் சிங்கின் செயல். ஏற்கனவே கமல் திட்டிக்கொண்டிருந்ததால், அதற்கு மேல் என் பங்கிற்கு திட்ட மனம் வரவில்லை.
அருகே சென்ற நாங்கள் இருவரும் பாலத்தின் இடைவெளி வழியாக கீழே பார்த்தோம். பியாஸ் நதி, முன்பு பார்த்த அதே சீற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. எனக்குத் தெரியும்—அந்தச் சாவியின் கதை முடிந்துவிட்டது. அது கடலில் கரைத்துவிடப்பட்ட பெருங்காயம்தான்.
சரணுக்கு குற்ற உணர்ச்சியிலும், நாங்கள் மேலும் அதிகமாகத் திட்டிவிடப் போகிறோம் என்ற பயத்திலும் முகம் சிறுத்துவிட்டது.
“அபி மேன் கியா கரு, பையா?” என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு.
“நீயும் ஆத்துலயே குதிச்சிருக்க வேண்டியதுதானே! எனக்கு தெரியாது. ஒன்னு நீ இந்த ஆத்துல குதிச்சாவது சாவிய தேடி எடுத்துட்டு வா! இல்ல கார் கதவை உடைச்சாச்சு காரை ஸ்டார்ட் பண்ணு!” என்று கத்திவிட்டு, விறுவிறுவென பாலத்தின் மறுமுனைக்கு சென்றுவிட்டான் கமல்.
நான் சாவி ஏதாவது கரை ஒதுங்கி இருக்கிறதா என்று ஆற்றின் இருகரையிலும் பார்த்தேன். ஆற்றின் வேகத்தைப் பார்த்தால், கார் சாவி நேராக அரபிக்கடலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை.
“கார் கதவைத் திறக்கும் வழியைப் பார்க்கலாம்,” என்று தலைமேல் கை வைத்து உட்கார்ந்திருந்த சரணை எழுப்பி கூட்டிச்சென்றேன்.
“சரி வாங்க,” என்று ஏதோ ஒரு உபாயம் தெரிந்தவனைப் போல, விருட்டென பாலத்தை கடந்து காரின் முன் ஓடிப்போய் நின்றான். அது கார் நிறுத்தத்திற்கான வாயிலை அடைத்துக்கொண்டு நின்றிருந்தது.
பிரெட் ஆம்லெட் கடைக்காரர் வேறு நேரகாலம் புரியாமல், “எத்தனை ஆம்லெட் உங்களுக்கு போடலாம் ஜி?” என்று கேட்டு கொண்டிருந்தார்.
“வந்து சொல்கிறோம்; அதுவரை காத்திருக்கவும்,” என சைகை மொழியில் சொன்னான் கமல்.
சரண்சிங் காரின் நான்கு கதவுகளையும் இழுத்துப் பார்த்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வந்தான். அப்படியே டிரைவர் சீட் அருகே வந்தவன், “ஸ்கேல் ஏதாவது கிடைக்குமா?” என்றான்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த கமல், “ஆமாண்டா! ஸ்கேல், பென்சில், ரப்பர் எல்லாம் எங்க பாக்கெட்டுல வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்கோம்னு நினைச்சியா? நாங்க டூருக்கு வந்திருக்கோமா, இல்ல ஸ்கூலுக்கு வந்திருக்கோமா?” என்று மீண்டும் கத்தித் தீர்த்தான்.
சரண், கமலின் கோவத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. திடீரென எழுந்து பக்கத்தில் இருந்த கடையை நோக்கி ஓடினான்.
“சரி விடுங்க; அவனாச்சு, அவன் காராச்சு. எப்படியாவது கதவைத் திறந்திடுவான்,” என்று கமலை சமாதானம் செய்து, ஆம்லெட் கடைக்கு கூட்டிச்சென்று ஆளுக்கொரு பிரெட் ஆம்லெட் ஆர்டர் செய்து அமர்ந்துகொண்டோம்.
சரண், இருக்கடைகள் தள்ளி யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். எங்கள் கலவர முகங்களைப் பார்த்த கடைக்காரர், “என்ன பிரச்சனை?” என்றார்.
“பெரிதாக ஒன்றுமில்லை ஐயா; கார் கதவைத் திறப்பதில் ஒரு சின்ன பிரச்சனை,” என சொல்லி சமாளித்தேன்.
நாங்கள் காரை நிறுத்தி வழியை அடைத்திருக்கும் இடம் மானஸா ரெஸ்டாரண்ட் காரர்களுடையது என்றும், அதனால் கூடிய விரைவில் காரை எடுத்துவிடுமாறும் அறிவுறுத்தினார் கடைக்காரர்.
ஹனோகி பாலத்தைப் பார்க்க இறங்கியது ஒரு குற்றமென ஏன் இந்த பியாஸ் நதி எங்களைச் சோதிக்கிறது என்று தெரியவில்லை.
அந்நேரம், சரண்சிங் எங்களை கண்டும் காணாததுபோல், பாலத்தில் ஏறி மறுமுனைக்கு விருட் விருட் என நடந்து போய்க் கொண்டிருந்தான். ஸ்கேலோ அல்லது அதுபோன்றதொரு சாதனத்தைத் தேடித்தான் அவன் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்க வேண்டும்.
மானஸா ஹோட்டல் காரர்கள் சரியான சிடுமூஞ்சிக்காரர்கள் ஆயிற்றே! இப்போதுதான் எங்களை பன்னிரண்டு மணிக்கு முன் ஒருவருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்று விரட்டி அடித்தார்கள். இவன் அவர்களைப் பற்றி தெரியாமல் அவர்களிடமே உதவி கேட்டு போயிருக்கிறான்.
“வரட்டும்… பார்ப்போம். ஸ்கேலோட வருகிறானா, இல்ல வெறுங்கையை வீசிக்கொண்டு வருகிறானா,” என்று நினைத்தபடியே அமர்ந்திருந்தோம். அப்படியே, சூடான ஆம்லெட்டுகள் குளிருக்கு இதமாய் எங்கள் தொண்டைக்குழிக்குள் இறங்கிக்கொண்டிருந்தன.
சற்றுநேரத்திற்குள், சரண்சிங்கும் கூடவே ரெஸ்டாரண்டின் ஆஜானுபாகுவான ஒரு ஊழியரும் வேக வேகமாக சரண்சிங்கின் காரை நோக்கி நடந்து வந்தனர். எங்களை வெளியே இழுத்து வந்து விட்ட அதே ஊழியகாரன்தான் உடன் நடந்து வருபவன்.
அடடா! எதோ ஒரு வேலை கடுப்பில் எங்களை வெளியே போகச் சொல்லிவிட்டான்; அவனைப் போய் நாங்கள் சபித்துக்கொண்டே வந்தோமே. இப்போது பார்—ஒரு உதவி என்றதும் எப்படி ஓடோடி வருகிறாரென நெகிழ்ந்து போனேன்.
நானும் கமலக்கண்ணனும் கடைக்காரரிடம் காசு கொடுத்துவிட்டு, அவர் எப்படி கார் கதவைத் திறக்கப் போகிறார் எனப் பார்ப்பதற்கு தயாரானோம்.
வந்தவர் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, கார்பார்க்கிங்கை அடைத்துக்கொண்டு நிற்கும் எங்கள் காரை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவன் கையில் கார் கதவைத் திறப்பதற்கான எந்தச் சாதனமும் இருப்பதாகத் தெரியவில்லை.
சரண்சிங் அவனிடம், நாங்கள் எப்படி இந்த நிலைக்கு ஆளானோம் என்று எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, மெல்ல மெல்ல அவன் முகம் மாறுவதை கண்டேன்.
“சாலே! உன்னை எவனடா இங்க வந்து காரை நிறுத்தச் சொன்னது? இதென்ன உன் அப்பன் வீட்டு இடமென்று நினைத்தாயா?” என்று ஆற்றை ஒட்டியிருந்த வேலியில் இருந்த ஒரு போர்டைக் காட்டினான். அதில் மானசா பார்க்கிங் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
“எந்த முட்டாளாவது இப்படி போய் காரை நிறுத்துவானா?” என்று நறநறவென பற்களை கடித்துக்கொண்டு சரண்சிங்கை முறைத்தார்.
“முஜே மாஃப் கீஜியே,” என்று மன்னிப்பு கேட்டு தலைகுனிந்தான் சரண்சிங்.
“மண்ணாங்கட்டி! இன்னும் அரைமணி நேரத்தில் இந்த கார் இங்க இருக்கக் கூடாது. மீறி இருந்ததுன்னா, உடைச்சி ஆத்துல தூக்கி போட்டுருவேன்!” என்று கர்ஜித்துவிட்டு, எங்கள் இருவரையும் தாண்டி பின்னாலிருந்த ஆம்லெட் கடைக்கு சென்று, “பெருசு! இந்த இடத்துல எங்க ஹோட்டலுக்கு வர்றவங்கதான் காரை நிறுத்தணும். வேற யாரு வந்தாலும் ரோட்டோரமாவே நிறுத்த சொல்லணும். புரியுதா?” என்று மிரட்டல் விடுத்து சென்றான்.
“அப்படியே ஆகட்டும்,” என்பதுபோல் தலையசைத்தார் ஆம்லெட் கடைக்காரர்.
“இந்த இடத்துக்குத்தான் மாசாமாசம் பத்தாயிரம் ரூபா பஞ்சாயத்துக்கு நாங்க வரி கட்டுறோம்,” என்று புலம்பிக்கொண்டே சென்றார் அந்த ஆஜானுபாகுவான ஊழியர்.
அரைமணிநேரமாக பல்வேறு வழிகளில் கார் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் சரண் சிங். டாடா இண்டிகா கொஞ்சமும் கருணை காட்டாமல், கதவைத் திறக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தது. நாங்களும் எங்கள் பங்கிற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டோம்; ஒரு முன்னேற்றமும் இல்லை.
மூவருமாகச் சேர்ந்து முன்பும் பின்பும் தள்ளிப் பார்த்தோம். கார் ஹேண்ட் பிரேக் போடப்பட்டு, கியரில் வைத்து நிறுத்தப்பட்டிருந்ததால் இம்மியளவும் நகரவில்லை. பொறுமையிழந்து, எங்கிருந்தோ ஒரு கல்லை எடுத்துக்கொண்டு கார் கண்ணாடியை உடைக்கப் போன கமலை நான் தடுத்து நிறுத்தினேன்.
“கண்ணாடியை உடைச்சா கார் கதவைத் திறந்துவிடலாம். ஆனா காரை எப்படி ஸ்டார்ட் செய்வது? இது என்ன திரைப்படமா? முஷ்டியால் கார் கண்ணாடியை உடைத்து, ஸ்டியரிங் வீலின் அடியிலிருந்து ஏதேதோ வயர்களையெல்லாம் உருவி, ஒன்றோடொன்று இணைத்து ஸ்டார்ட் செய்வதற்கு? உங்களுக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்றேன்.
“ஜி, யாருக்கு வேணும் இந்த கார்? நாம நம்ம பொருட்களை எடுத்துக்கொண்டு பஸ் பிடித்தாவது மணாலி செல்வோம். இவன் காரைத் தள்ளிக்கொண்டு வீடு போய்ச் சேரட்டும்,” என்று ஒரு முடிவோடு இருந்தான் கமல்.
கார் கண்ணாடியின் விலை ஆயிரத்து ஐநூறு என்றும், சர்வீஸ் சார்ஜோடு சேர்த்து மொத்தம் இரண்டாயிரம் ரூபாயை கார் மெக்கானிக் கறந்துவிடுவான் என்றும் சொன்னான் சரண். கார் வைத்திருக்கும் எனக்கும் அவன் சொல்வது நியாயமாகப் பட்டது.
மணி மதியம் பன்னிரண்டைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. ஹனோகி பாலத்தை காண சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியிருந்தனர். பார்க்கிங் வழியை அடைத்துக்கொண்டு நின்ற டாடா இண்டிகாவை பார்த்ததும் ஹார்ன் அடித்தார்கள்.
“காடி கராஃப் ஹோகை ஹே; ஸாரா ஆகே லே ஜாவோ,” என்று வேறு இடத்தில் நிறுத்துமாறு அறிவுறுத்தினான் சரண்.
அதைப் போலவே அடுத்தடுத்து வந்த கார்களும் ஹார்ன் அடித்து, எங்கள் காரை நகர்த்துமாறு கத்தினார்கள். எல்லோருக்கும் சரண் சளைக்காமல் அதே பதிலையே கொடுத்துக்கொண்டிருந்தான். அடுத்தடுத்து வந்த கார்களால் சிறிய டிராபிக் ஜாம் ஏற்பட்டதைப் பார்த்து, நானும் கமலும் களத்தில் இறங்கினோம்.
“காடி கராஃப் ஹோகை ஹே; ஸாரா ஆகே லே ஜாவோ,” என்று இரண்டு கடைகளைத் தள்ளி இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினோம். சிலர் அவ்வாறே காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தார்கள். சிலர் எங்களைத் திட்டிவிட்டு, ஹனோகி பாலத்தை பார்க்காமலேயே சென்றார்கள்.
எங்கள் பேச்சைக் கேட்டு நிறுத்திய ஒரு வேனிலிருந்து, நிறைய பெரியவர்கள் இறங்கி வந்து, பாலத்தின் முகப்பில் இருந்த கடைகளில் ஏதேனும் ரெஸ்ட் ரூம் இருக்குமா எனக் கேட்டபடி வந்தனர். பாலத்தை கடந்ததும் ஒரு ரெஸ்டாரண்ட் வரும்; அங்கு போங்கள் என்று நானே வலியப் போய் உதவி செய்தேன்.
“கமல், நாம் இப்படியே இருந்தால் நமக்கு விடிவு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நம்மில் யாரேனும் ஒருவர் இந்த சரணை அழைத்துக்கொண்டு, இந்த இமாச்சலில் ஏதாவதொரு மெக்கானிக்கை கண்டுபிடித்து வரவேண்டும். மற்றொருவர் இங்கிருந்து சமாளிக்க வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றேன்.
கமலுக்கும் அது சரியெனப் பட்டது. “நான் தனியாக இங்கிருந்தால், கார் கண்ணாடியை உடைத்தாலும் உடைத்துவிடுவேன். ஆகவே சரணோடு போய் வருகிறேன்,” என்றான்.
விசாரித்ததில், கார் மெக்கானிக்கை பிடிக்க வேண்டும் என்றால், மணாலி செல்லும் வழியில் இருக்கும் குல்லுவிற்குத்தான் செல்ல வேண்டும் என்றார் ஆம்லெட் கடைக்காரர். அதோடு நில்லாமல், அப்போது அங்கு வந்து நின்ற சிறிய ரக பேருந்து ஒன்றைச் சுட்டிக் காட்டி, “இது அந்த வழி போகும் பேருந்து,” எனவும் எங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு உதவினார்.
எங்களுடைய திட்டத்தின் படி, ஹனோகி பாலத்திற்கு அடுத்த டெஸ்டினேஷன் சாட்சாத் குல்லுதான். குல்லுவிலிருக்கும் தி கிரேட் ஹிமாலயன் பார்க் பிரசித்தி பெற்றது. அங்கு ரோட்டோர கடைகளில் விற்கப்படும் மோமோஸ் பண்டத்தின் சுவை பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரு சுற்றுலாப் பயணியாக குல்லுவில் கால் பதிக்க இருந்த எங்களை, இப்படி மெக்கானிக்கைத் தேடி அலைய வைத்துவிட்டான் இந்த சரண் சிங்.
பேருந்து புறப்படத் தயாராக இருந்தது. நொடிப்பொழுதில், சரண்சிங்கின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பரபரவென ஓடிப்போய், பேருந்தில் ஏறி அமர்ந்தான் கமல். மெக்கானிக்கை பார்த்தவுடன் எனக்கு போன் செய்வதாக, சைகை மொழியில் சொன்னான்.