அதிதி தேவோ பவ – பகுதி 2

புதுதில்லி சுதந்திர நாள் விழாவிற்காக கோலாகலமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. புதுதில்லி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் என்சிஆர் பகுதி முழுவதும் காவல் பலத்த காவல் போடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று வந்ததால், எங்கள் எல்லோருக்கும் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது.

வருணுடன் முபாரக் பேசிக்கொண்டதிலிருந்து, அவர் அவருடைய அலுவலக நண்பர்களுடன் குல்லு மற்றும் மணாலி போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லவிருக்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்துபோனது. கமலுக்கும் எனக்கும் இங்கு வந்த நாள் முதலே குல்லு–மணாலி சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆதலால், எங்களுக்கு கிடைத்த இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து, உடனடியாக அதற்குண்டான பணிகளில் ஈடுபட்டோம்.

இணையத்தின் வாயிலாக மயூர் விஹார் பகுதியில் இயங்கி வந்த ஒரு டிராவல்ஸ் கம்பெனியை அணுகி, வரும் வியாழக்கிழமை—அதாவது சுதந்திர தினத்திற்கு முன்தினம்—மாலை இங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை ஹனோகி தொங்கு பாலத்தைப் பார்வையிடுகிறோம்; பிறகு அங்கிருந்து மணாலி போகும் வழியில் உள்ள குல்லுவின் பிரசித்தி பெற்ற தி கிரேட் இமாலயன் பூங்காவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அன்றிரவே மணாலி போய் தங்குகிறோம்; அதன் பின்னர் அடுத்த நாள் காலை ரோத்தாங் பாஸ் பனி மலைக்குச் செல்கிறோம் என எல்லா விவரங்களையும் பேசி முடித்திருந்தேன்.

இவற்றிற்கெல்லாம் சேர்த்து மொத்தமாக கார் வாடகை பத்தாயிரம் பக்கம் வரும் என்றும், அதற்கான முன்பணமாக ஆயிரம் ரூபாயை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டது டிராவல்ஸ் கம்பெனி.

நான் எப்போதும் அலுவலக காரின் முன் சீட்டில் அமர்ந்து செல்வது வழக்கம். காரின் உள்ளே  அமர்ந்து சென்றால், என்னுடைய தென்னிந்திய முக ஜாடையைப் பார்த்துவிட்டு மற்ற ஊழியர்கள் கேட்கும் தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.

சிலர் என்னை மலையாளி என நினைத்துக்கொண்டு, “ஐ லைக் கேரளா, இட்ஸ் காட்ஸ் ஓன் கண்ட்ரி” என்பார்கள். சிலர் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதை சரியாக யூகித்து, அவர்கள் ராமேஸ்வரம் வந்து போன கதையைச் சொல்லி அறுத்துக்கொண்டிருப்பார்கள்.

டிஎல்எப் அவென்யூவிலிருந்து வரும் ராகேஷ் ஷர்மா என்பவன் ஒரு முறை, “ஆமாம், நீங்கல்லாம் டெட் ஃபிஷை மூன்று மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவீர்களாமே, உண்மையா?” என்று இனத்துவேஷத்துடன் கேட்டான்.

“மூன்று மாதங்கள் இல்லை; நன்கு பதப்படுத்தப்பட்ட மீனை ஆறு மாதங்கள் கழித்துக் கூட சாப்பிடலாம்—தேவாம்ருத சுவையுடன் இருக்கும். பை த வே, அதன் பெயர் டெட் ஃபிஷ் இல்லை மடையா, சால்ட்டட் ஃபிஷ்” என்றேன்.

செத்தமீனுக்கும் கருவாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத பயல்.

நான் முன் காரின் சீட்டிலேயே எப்போதும் அமர்ந்து வருவதால், அப்படியே கார் டிரைவர் சரண் சிங் எனக்கு பழக்கமாகியிருந்தான். என்னுடைய அரைகுறை இந்தியோடு ஆங்கிலத்தையும் கலந்து, அவனுடன் ஏதாவது பேசிக்கொண்டு வருவேன்.

அன்று வியாழக்கிழமை காலை, நான் அலுவலகக் காரில் போய்க்கொண்டு இருக்கும் போது, சரண் சிங்கிடம் உற்சாக மிகுதியில், “நாளை இந்நேரம் நான் மணாலிக்கு போய்க்கொண்டிருப்பேன்” என்று சொல்லிவிட்டேன்.

சொன்னதுதான் தாமதம். உடனே, “எப்படி போகப் போகிறீர்கள், காரில்தானே?” என்றான். “ஆமாம்; அதற்கு ஒரு டிராவல்ஸை மயூர் விஹாரிலே புக் செய்திருக்கிறோம்,” என்று கூறினேன்.

உடனே சரண் சிங் கோபித்துக்கொண்டான். “நான் இங்கே உங்களிடம் அன்போடு ‘அண்ணா, அண்ணா’ என்று பழகி வந்துகொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, இந்த தம்பி சரண் சிங்கை விட்டுவிட்டு நீங்கள் வேறு காரில் மணாலி செல்லலாமா? என்னிடம் ஒரு வார்த்தையாவது கேட்டிருக்க வேண்டாமா? நான் பார்ட் டைமில் என்ன கலெக்டர் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறீர்களா? உங்கள் அலுவலக வேலை முடிந்ததும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் டாக்ஸி ஓட்டிதானே நான் இந்த நொய்டாவில் ஜீவிதம் நடத்துகிறேன் அண்ணா! ” என்றான்.

மேலும், சம்பளப் பணம் ஃபாரிஸபாத்திலிருக்கும் தன்னுடைய குடும்பத்திற்கே போதவில்லை என்றும் அவனுடைய புலம்பல் தொடர்ந்தது. இறுதியாக, அவன் இன்று மாலை தனது காரை எடுத்துக்கொண்டு சரியாக பத்து மணி அளவில் ரங்லா ஹவேலிக்கு வந்து நிற்பேன் எனவும், அதனால் அந்த மயூர் விஹார் பார்ட்டியிடம் பண்ணிய புக்கிங்கை கேன்சல் செய்யுமாறும், அன்புக் கட்டளை விடுத்து சென்றான்.

அலுவலகத்தில் எனக்கு வேலையேதும் ஓடவில்லை. நாளை சுற்றுலா செல்லப் போகிறோம் என்ற குஷி ஒரு பக்கம்; அதே சமயம் அந்த மயூர் விஹார் பார்ட்டியிடம் என்ன சொல்லப் போகிறோம் என்ற கவலை மற்றொரு பக்கம். அந்த டிராவல்ஸ்காரனிடம் முழுசாக முள்ளங்கி பத்தை போல ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வேறு கொடுத்திருந்தேன்.

எனக்கும் சரண் சிங் காரில் போவதுதான் உசிதம் எனத் தோன்றியது. அன்போடு ‘அண்ணா, அண்ணா’ என்று பழகுபவன். நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் காரை நிறுத்தச் சொல்லலாம்; ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டான். சரி, பேசிப் பார்ப்போம் என்று, நான் கார் புக் செய்திருந்த மயூர் விஹார் டிராவல்ஸ்காரனை போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.

ட்ராவல்ஸ்காரர்கள் எனக்கான காரையும் டிரைவரையும் இறுதி செய்து விட்டதாகவும், ஆதலால் கேன்சல் செய்வதென்பது முடியாத காரியம் என்றும் சொன்னார்கள். நான் எப்படி பேசி பார்த்தாலும் அவர்கள் மசியவதாய் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், “நீங்கள் வேண்டுமானால் உங்கள் நண்பரின் காரிலேயே சென்று வாருங்கள்; ஆனால் அட்வான்ஸ் தொகையெல்லாம் திருப்பித் தரும் பேச்சுக்கே இடமில்லை,” என்று சொல்லிவிட்டார்கள்.

நானும் சத்தம் போட்டு சகட்டு மேனிக்கு தமிழிலேயே திட்டிவிட்டு போனை வைத்தேன். இதற்கு மேலும் அவர்கள் காரில் சென்றால் அது எங்களுடைய தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைத்து, நாங்கள் சரண் சிங்கின் காரிலேயே புறப்படுவது என்று முடிவு செய்தோம்.

மயூர் விஹார் காரனிடம் விட்ட ஆயிரம் ரூபாயை அப்படியே சரண் சிங்கிடம் கழித்துக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருந்தார் கமல். அதுவும் சரிதான் என எனக்குத் தோன்றியது. அந்த ட்ராவல்ஸ்காரனுக்கும் எனக்கும் எந்த ஒரு முன்விரோதமோ அல்லது வாய்க்கால் தகராறோ இல்லை. எல்லாம் இந்த சரண் சிங்கிற்காகத்தான். அதனால் அவனுக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு ஆயிரம் ரூபாய் குறைந்தால் ஒன்றும் தப்பில்லை என தோன்றிற்று.

அன்று மாலை அலுவலகக் காரில் ரங்லா ஹவேலிக்கு போய் இறங்கியிருந்தேன். காரிலிருந்து இறங்கும் முன், சரண் சிங்கிடம் நேரம் தவறாமல் சரியாக ஒன்பது மணிக்கு இதே இடத்திற்கு வந்து விடுமாறு கூறினேன். பான் வையறாவை மென்று கொண்டே அவன், “டீகே ஜி, டீகே ஜி,” என்றான்.

நேராக என்னுடைய அறைக்குச் சென்று தேவையான பொருட்களையும் துணிமணிகளையும்—குறிப்பாக சென்ற வாரம் டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் வாங்கியிருந்த கிளிப் பச்சை நிற ஸ்வெட்டரையும்—அப்படியே படிப்பதற்கு இரண்டு சிட்னி ஷெல்டன் நாவல்களையும் எடுத்துக் ட்ராவல்ஸ் பேக்கில் அடுக்கி வைத்துக்கொண்டேன். அப்படியே ஹாயாக ஒரு குளியலை போட்டுவிட்டு, என் கட்டிலின் மீது ஏறி அமர்ந்துகொண்டேன்.

விடுதியில் அவரவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த ஒரு கட்டில்தான் அவரவர்களுடைய டைனிங் டேபிள், ஸ்டடி டேபிள், சோஃபா மற்றும் படுக்கை. மனதுக்குள் ஒரே குதூகலம்—நாளை மணாலியில் கொட்டும் பனி மழையில் நனையப் போகிறேன். ஒருவேளை அங்கு பனிப்பொழிவு இல்லாவிட்டாலும், இருக்கவே இருக்கிறது ரோத்தாங் பாஸ்; அங்கு வருடம் முழுவதும் பனிப்பொழிவு இருக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எத்தனை முறை பனிப்பொழிவை டிவியிலும் சினிமாவிலும் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது! இதோ நாளை, பனிப்பொழிவில் நான் கரைந்து போகும் வரை நனையப்போகிறேன். அங்கிருக்கும் பனிப்படலத்தில் படுத்து உருளப்போகிறேன்.

கொஞ்ச நேரத்தில் முபாரக் உள்ளே நுழைந்தார். அவரும் குதூகலமாகக் காணப்பட்டது போலத் தெரிந்தது எனக்கு. ஆமாம், அவரும் நாளை குல்லு–மணாலிதானே செல்கிறார்; எனக்கிருக்கும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் அவருக்கும் இருக்கத்தானே செய்யும்.

முபாரக் கமலக்கண்ணனை வெளியே போ என்ற நாளிலிருந்து, நான் முபாரக்கை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்திருந்தேன். அறை மாற்றல் குறித்து என்னுடைய விருப்பத்தை தெரிவித்தபோது, இன்னும் இரண்டு வாரங்களில் கமலக்கண்ணன் அறையிலிருக்கும் அந்த இரட்டையர்கள் கிளம்பி விடுவார்கள் என்றும், அதன் பின்னர் நான் அங்கு மாறிக்கொள்ளலாம் என்றும் விகாஸ் சிங் தெரிவித்திருந்தார்.

முபாரக் வழக்கம் போல், போனில் ‘கியாகர்த்தே’ எனத் தொடங்கும் தனது உரையாடலை ஆரம்பித்திருந்தார். நான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை போல, கமலக்கண்ணன் அறையில் போய் சரண் புகுந்துகொண்டேன். நல்ல வேலையாக, கமலும் அப்போது அலுவலகம் முடித்துத் திரும்பி வந்திருந்தார்.

சரியாக ஒன்பது மணிக்கெல்லாம், நானும் கமலும் எங்களுடைய ட்ராவல்ஸ் பேக்குகளைத் தள்ளிக்கொண்டு விடுதியின் போர்டிகோவில் வந்து நின்றோம். எதிர்பார்த்தது போல சரண் சிங் வரவில்லை. எங்காவது போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருப்பான் என நினைத்துக்கொண்டேன்.

நாளை விடுமுறை என்பதால், அவரவர் தத்தம் சொந்த ஊர்களுக்கு முண்டியடித்து சென்று கொண்டிருப்பார்கள். நானும் கமலும் தெருவில் இறங்கி இங்கும் அங்கும் உலாத்திக் கொண்டிருந்தோம். அப்போது, கமல் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு வார இறுதிகளில் தன்னுடைய என்ஃபீல்டு பைக்கில் செல்லும் சுகானுபவத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லி முடித்திருந்தார். அப்படியே, “ஒருநாள் நாம் லடாக் போய் வரலாம் ஜி,” என்றும் கேட்டுக்கொண்டார்.

மணி ஒன்பது முப்பது ஆகியிருந்தது. சரண் சிங்கைக் காணவில்லை. கமல் பேசிக்கொண்டிருக்கும் போதே, நான் மூன்று முறை சரண் சிங்கிற்கு போன் செய்திருப்பேன். ஆனால் போன் நீண்ட நேரமாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

என்ன ஆயிற்று இந்த சரணுக்கு? “இந்த தம்பியோட கார்ல வரமாட்டீங்களா… உங்களையெல்லாம் நம்பித்தானே நான் இங்க டாக்ஸி ஓட்டிட்டு இருக்கேன்,” என்றெல்லாம் ஒரே செண்டிமெண்டாக பேசியவன், இப்போது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு எங்கே போய் தொலைந்தான் என்று தெரியவில்லை.

நான் கமலக்கண்ணனைப் பார்த்து, “அவ்வளவுதான். அந்த டிரைவர் வராட்டன். முடிந்தால் நாளை காலை அந்த மயூர் விஹார்க்காரனை நேரில் பார்த்து நைசாகப் பேசி, ஏதாவது காரை ரெடி பண்ண முடியுமாவென பார்க்கலாம்,” என்றேன்.

பசி வேறு வயிற்றை கிள்ளியது. “சரி, முதலில் பக்கத்திலிருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் போய் இரவு உணவை முடித்துவிட்டு வருவோம். அதன் பிறகும் சரண் சிங் வரவில்லை என்றால் என்ன செய்வதென்று பார்க்கலாம்,” என்று முடிவு எடுத்திருந்தோம்.

மெஸ்ஸின் வெளியில் தோசைக்கல்லை எண்ணெய் துடைப்பத்தால் தேய்த்துக் கொண்டிருந்தவரிடம் இரண்டு ரோஸ்ட் தோசைகளை ஆர்டர் கொடுத்துவிட்டு, உள்ளே இருந்த பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டோம். அப்போது, உண்டு முடித்துவிட்டு எங்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி யாரிடமோ போனில் பேசிக்கொண்டே ஒருவர் வெளியேறினார்.

அது முபாரக்கின் குரலாயிற்றே. ஏறிட்டுப் பார்த்தேன். அது முபாரக் தான். எங்களிருவரையும் பார்த்து, அவர் எதோ ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து சென்றது போல இருந்தது எனக்கு. “அப்பவே ரெடியாகி வெளியே போனீங்க; இப்ப என்னடான்னா இங்க ஒக்காந்து ரோஸ்ட் தோசைய ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க” என்று ஒருவேளை அவர் நினைத்திருக்கலாம்.

அவசர அவசரமாக ரோஸ்ட் தோசையையும், கூடவே டபுள் ஆம்லெட் ஒன்றையும் முடித்துவிட்டு, ரங்லா ஹவேலி நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தோம். நான் சரண் சிங்கின் கார் அங்கே, விடுதியின் முன்பு எங்காவது தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன்.

ஆம், நான் எதிர்பார்த்தபடியே அங்கே டாடா இண்டிகா கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. கூடவே காரின் டிரைவரோடு முபாரக் பேசிக்கொண்டிருந்தான். பிறகு, எங்களைப் பார்த்து, “யுவர் ரைட் கேம்” என்று தகவல் கொடுத்துவிட்டு விடுதியினுள் சென்றுவிட்டார்.

ஆஹா… சத்தியவான் சரண் சிங் வந்துவிட்டான். பாவம், அவனுக்கு என்ன பிரச்சனையோ? நல்ல வேளை, காரோடு வந்துவிட்டான். பிறகு இந்த முபாரக்—தன் வாழ்நாளிலேயே இப்போதுதான் எனக்கு உபயோகமானதொன்றை செய்திருக்கிறான். நேராக கார் நோக்கி ஓடிச்சென்றோம்.

“ஒய் லேட்?” என்றேன் கோபமாக. காரை சுத்தப்படுத்த வேண்டியிருந்தது, அப்படியே வரும் வழியில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டேன், கடுமையான போக்குவரத்து நெரிசல், மொபைல் சரியாக வேலை செய்யவில்லை என—ஐந்து நிமிடம் இந்தியில் சளைக்காமல் காரணங்களை அடுக்கிக்கொண்டே இருந்தான் சரண் சிங்.

அவன் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்கும் போதே, நாங்கள் போர்டிகோவில் இருந்து எங்கள் பொருட்களை எடுத்து வந்து காரின் பின்பகுதியில் வைத்துவிட்டோம். என்னை டிரைவர் சீட் அருகே அமருமாறு சொல்லிவிட்டு, கமலக்கண்ணன் பின் சீட்டில் போய் நன்கு சௌகரியமாக அமர்ந்துகொண்டான்.

பின் இருக்கையில் அமர்ந்து நன்றாகத் தூங்கிக்கொண்டு வரலாம்; ஆனால் முன் சீட்டில் அந்த வசதி இருக்காது. காரின் வெளிப்புறமும் உட்புறமும் நன்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. காரினுள் ஸ்பிரே செய்யப்பட்ட லாவெண்டர் பூவின் வாசனை எங்கும் நிரம்பியிருந்தது.

ரங்லா ஹவேலியிலிருந்து புறப்பட்ட கார், காஸியாபாத்தில் இருந்து சண்டிகர் செல்கின்ற நெடுஞ்சாலையில் பறந்தது. இரவு உணவு உண்ட மயக்கத்தில் ஏறி அமர்ந்ததும் கமலக்கண்ணன் தூங்கிவிட்டார். காரில் ஏதோ தரம் மிகுந்த ஸ்பீக்கரை பொருத்தியிருப்பான் என நினைக்கிறேன்; எஃப்எம் ரேடியோவின் ஒலி மிகத் துல்லியமாக இருந்தது.

ரேடியோ மிர்ச்சியில் ஷுப் ராத் என்ற நிகழ்ச்சியில், யாரோ ஒருவர் ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டே எண்பதுகளில் வெளிவந்த படங்களிலிருந்து பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார். அதில் சில பாடல்களை நான் அந்நாட்களில் தூர்தர்ஷனில் கேட்டிருக்கிறேன். கார் டெல்லியைத் தாண்டி சண்டிகர் நோக்கி போய்க் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர பயணத்திற்குப் பிறகு, புறவழிப் பாதையிலிருந்து இறங்கி, ஒரு பஞ்சாபி தாபாவில் காரை நிறுத்தி தான் சாயா குடிக்கப் போவதாகவும், எனக்கேதாவது வேண்டுமாவென அன்போடு கேட்டான் சரண் சிங். இசை என்னும் அமுத மழையில் நனைந்து கொண்டிருந்த எனக்கு வேறெதுவும் வேண்டாம் என்றேன்.ரேடியோவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கோரி தேரா காவோன் படா ப்யாரா என்ற பாடலில் ஜேசுதாஸ்ஸின் குரலில் லயித்து, அப்படியே நான் தூங்கிப் போயிருந்தேன்.

Leave a Comment