நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 11

எனக்கு தெரியும். இந்த வயதில் அதுவும் முன் பின் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவன், முதல் சந்திப்பிலேயே இப்படி பேசுவது ஒரு மூன்றாம் தர ரசிகன் ஒரு நடிகையை கண்ட மாத்திரத்தில் “ஐ லவ் யூ” என்று கூட்டத்திலிருந்து கத்துவதற்கு சமம்.

சற்று நேர அதிர்ச்சிக்கு பின் சுதாரித்துக் கொண்டாள் ஜெனி.

“என்னோட ஹார்ட் கோர் ரசிகர்  நீங்க! தேங்க்யூ சோ மச் ஃபார் த லவ்! ஐ ஹேவ் சோ மெனி ஹார்ட் கோர் ஃபேன்ஸ் இன் தமிழ்நாடு. தட் இஸ் தி ஒன்லி ரீசன் ஐ லைக் சென்னை. சென்னை இஸ் மை செகண்ட் ஹோம் டவுன்”

ஒரு டெம்ப்ளேட் பேச்சு போல் இருந்தது. அவளுக்கு அடிக்கடி பேசி மனப்பாடம் ஆகி இருக்க வேண்டும். நான் அவளுக்கு பஞ்சாரா ஹில்ஸ் சம்பவத்தை நினைவூட்ட விரும்பினேன்.

“நான் உங்களோட பஞ்சாரா ஹில்ஸ் வீட்டுக்கு வந்திருக்கிறேன். ஆனா அங்க அவென்யூ பவுன்சரோட சின்ன பிரச்சனை ஆகி என்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டாங்க. உங்க பிஆர்ஓ உதய் ஷர்மாவுக்கு கூட அது தெரியும்”

ஒரு செய்தி வாசிப்பதை போன்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் பேசிவிட்டு, அவள் என்னை  செய்ய போகிறாள் என்பதில் ஆர்வமானேன்.

ஜெனி என் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள். என்னுடைய கண்கள் மூக்கு உதடு என அவளுடைய கண்கள் அலைபாய, மீண்டும் கண்ணை மூடி பழைய நினைவுகளை கொண்டு வர முயற்சித்தாள்.

“வில்லா எண் 7பி, எமரால்ட் கிராண்ட் அவென்யூ”

என்று நான் வந்து சென்ற முகவரியையும் கூறினேன். 

மீண்டும் நினைவுகளை துழாவி துழாவி தேடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த முயற்சியை கைவிட்டாள் ஜெனி.

“ஐயம் சாரிங்க, எனக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததா நினைவில் இல்லை. நீங்க சொன்ன முகவரி எல்லாம் சரிதான். ஒரு தெலுங்கு படம் பண்ணிட்டு இருக்கும்போது அங்க தான் தங்கி இருந்தேன்”

அவள் வீட்டிற்கு அனுமதியில்லாமல் வந்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்ட விஷயத்தை ஏதோ ஒரு வீரதீர செயலை போல் சொல்ல முற்பட்டேன். 

“ஆமா நீங்க எதுக்கு அங்க வந்திங்க?” என்று புருவத்தை சுருக்கி கொண்டு போய் கோபத்துடன் கேட்டாள்.

“எனக்கு ஏரோட்டோமேனியா இருந்துங்க”

“அப்படின்னா?” திருதிருவென விழித்தாள் ஜெனி.

எனக்கு தெரியும் அவளுக்கு இந்த மருத்துவ பெயர் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நானும் முதலில் அந்த மனநல மருத்துவர் இது பற்றி என்னிடம் கூறும் பொழுது திருவென விழித்துக் கொண்டுதான் இருந்தேன்.

“இது ஒரு டிலூஷனல் டிஸ்ஆர்டர். நான் உங்க மேல ரொம்ப அப்செஷன்ல இருந்ததனால, நீங்களே என்கிட்ட நேர்ல வந்து பேசுற மாதிரி இருக்கும். நானும் பதிலுக்கு பேசிட்டு இருப்பேன். ஆனால் உண்மையில் யாரும் என்னருகில் இருக்க மாட்டாங்க”

நிச்சயம் இப்படி தீவிரமாய் மனநல பாதிக்கும் அளவிற்கு தன்னை விரும்பிய ஒருவனுடன் நேரில் பேசுவோம் என்று ஜெனி எதிர்பார்த்து இருக்க மாட்டாள்.

“அப்படி ஒருநாள் உங்களோட பேசும் போது, நீங்க  தான் அந்த அட்ரஸ் கொடுத்து என்னை வரச் சொல்லி இருந்தீங்க”

“எப்படி அட்ரஸ் எல்லாம் கரெக்டா சொல்றீங்க?”

எனக்கு வந்த சந்தேகம் அதே சந்தேகம் ஜெனிக்கும் வந்தது.

“நானும் டாக்டர் கிட்ட அதைப்பற்றி தான் கேட்டேன். அவர் உங்க முகவரிய  நான் ஏதாவது சோஷியல் மீடியாவுல பார்த்து இருக்கலாம். ஆனா  கற்பனையில் அதை நீங்களே சொல்ற மாதிரி வந்திருக்கும் என்று  சொன்னார்”

“சரி! நான் என்னோட பழைய பிஆர்ஓ உதய் ஷர்மா கிட்ட கேட்கிறேன். இந்த மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கான்னு”

நான் சொன்னதை எல்லாம் கேட்டு ஜெனி சற்று குழம்பி போய் இருந்தாள். அவள் முகம் மாறி இருந்ததை கவனித்தேன்.

என்னுடன் இதற்கு மேல் பேசி குழப்பம் அடைவதை தவிர்க்க, என்னிடம் “உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

“என்னோட மகளுக்கு உங்க பேர தான் வச்சிருக்கேன். அவள் பெயரும் ஜெனிதான்”

“ஓ நைஸ்”

அவளுடைய பெயரை நான் எனக்கு மகளுக்கு சூட்டியிருந்ததாலோ என்னவோ என்னுடனான உரையாடலை புன்னகையோடு மீண்டும் தொடர்ந்தாள்.

“ஜெனி என்ன படிக்கிறாங்க?”

“அரவிந்த் வித்யாலயா ஸ்கூல்ல டென்த் படிக்கிறாங்க. என்னோட மனைவி உமா இன்ஜினியரிங் காலேஜ்ல லெக்சரரா  இருக்காங்க” அவள் கேட்கும் முன்பே நான் என் மனைவி சொல்லி வைத்தேன்.

“வெரி நைஸ். நான் வேற பயந்துட்டேன். நீங்க என் மேல இருக்கிற அப்சப்ஷன்ல, எங்க மேரேஜ் பண்ணிக்காம இருக்கீங்களோன்னு”

எனக்கென்று ஒரு குடும்பம் இருப்பதை எண்ணி அவள் நிம்மதி அடைந்ததை போல இருந்தது அவள் உடல் மொழி.

இவ்வளவு தூரம் தன்னை பற்றி ஒருவன் சொல்லி இருக்கிறான். அதுவும் தன்னுடன் படத்தில் மறைமுகமாக பணியாற்றி இருக்கும் சக கலைஞன்  என நினைத்தாளோ என்னவோ தெரியவில்லை, தூரத்தில் வெள்ளையாய் இருந்த ஒருவனை கை காட்டினாள்.

“அவர்தான் என்னுடைய கணவர் வினோத். எனக்கும் சில பேர் மேல காதல் இருந்தது. ஆனா எல்லோரும் என்னுடைய புகழுக்காகவும்  பணத்துக்காகவும் தான் என் கூட இருந்தாங்க. பைனலி ஐ மெட் வினோத் இன் டெல்லி”

நான் அந்த வெள்ளையனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பாடிபில்டரை போல கட்டுமஸ்தான தேகத்துடன்  இருந்தான் வினோத்.

“இப்ப புரியுதுங்க! எதுக்கு உங்களுக்கு பவுன்சர் யாரும் கூட வரலன்னு”

அதற்கு பதிலேதும் சொல்லாமல் விழித்தாள் ஜெனி.

“அதான் உங்க ஹஸ்பண்ட் இருக்காரே! அவரே இரண்டு பவுன்சருக்கு சமம்”

“வாட்” பல்லை கடித்துக் கொண்டு போய் கோபம் காட்டினாள்.

“இரு இப்போதே வினோத்தை கூப்பிடுகிறேன்” என்று நான் மீண்டும் ஒருமுறை பவுன்சரால் பந்தாட பட போகிறேன் என்று சொல்லி சிரித்தாள்.

எனக்கு ஏதோ அவளின் தொலைதூர நட்பு வட்டத்திற்குள் காலடி வைத்தது போன்று உணர்ந்தேன்.

“எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அபுதாபியில் படிச்சிட்டு இருக்கான் பேரு ஹரி” என்றாள்.

ஹரி என்ற பெயரை கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“யாருங்க உங்க பையனுக்கு பெயர் வச்சது?”

என்னது இது அதிகப்பிரசங்கித்தனம் என்றெல்லாம் நினைக்காமல் “நான் தான்” என்றாள்.

“‘ஹ’-ல ஆரம்பிக்கிற நிறைய பெயர்கள்ல எனக்கு ஹரிங்கிற பெயர்தான் பிடிச்சிருந்தது”

“என்னோட பேரும் ஹரிதாங்க. அன்பு நிலவன் என்பது என்னோட எழுத்துலக பெயர்”

அதிர்ச்சியில் இது எப்படி சாத்தியம் என்று ஜெனி வியந்து இருக்க வேண்டும். 

“நிஜமா?”

“வேண்டுமென்றால் சிராஜிடம் கேட்டுப்பாருங்கள்” என்றேன்.

தூரத்தில் வினோத் வெகு நேரமாய் ஜெனியுடன் பேசிக் கொண்டிருப்பவன் யார் என பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு மேல் ஜெனியை பிடித்து நிறுத்தி வைப்பது சரியல்ல என தோன்றியது.

இந்த முதல் சந்திப்பே கூட எங்களுடைய கடைசி சந்திப்பதாக இருக்கலாம். எனவே, என் கற்பனையில் அவள்  என்னிடம் கூறிய விஷயங்கள் உண்மைதானா என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

“நான் கடைசியா உங்கள் கிட்ட இரண்டு கேள்விகள் கேட்கலாமா?”

“சரி கேளுங்க”

“உங்க உதட்டுக்கு கீழே இருக்கிற இந்த மச்சம் போலியானது தானே?”

அதை அவள் பஞ்சாராஸ் நைட் கிளப்பில் என்னிடம் சொல்லியதுதான்.

“அஃப்கோர்ஸ்! ஆனா அதை இப்போ டேட்டு மூலமா பெர்மனெண்டா  மாத்திட்டேன். இந்த விஷயத்தை நானே நிறைய தடவை இன்டர்வியூல சொல்லி இருக்கேனே!”

“ஒரு பிங்க் கலர் உறையில் இடப்பட்ட ஒரு காதல் கடிதம் ஒன்று அடிக்கடி உங்கள் கனவில் வருமா?”

அதெப்படி அவளுடைய கனவை பற்றி எனக்கு தெரியும் என ஆச்சர்யப்படுவாள்  என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கு மாறாக என்னுடைய கேள்வி அவளை கோபப்படுத்தி இருந்தது.

“ஹலோ! என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? போன வாரம் தான் ஒரு ரேடியோ ப்ரோக்ராம்ல அதை பத்தி சொல்லி இருந்தேன்”

அவள் பேச்சு வேகம் எடுக்க ஆரம்பித்தது.

“நீங்க என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றீங்கன்னு தெரியுது. ஆனா உங்க அப்ரோச் ரொம்ப சீப்பா இருக்கு!”

ஜெனி முகத்தில் அடித்தாற் போல பேசியதில் நான் உறைந்து போனேன். ஜெனியின் உடல் மொழியை கவனித்திருந்த அவள் கணவன் எங்களை நோக்கி மெல்ல நடந்து வந்தான்.

“லெட்டர் பத்தி தெரிஞ்ச உங்களுக்கு, அந்த கவர் மேல என்ன எழுதியிருக்குங்கிறத சொல்ல முடியுமா?” என்றாள் கோபத்துடன்.

அவள் கண்கள் கலங்கி இருந்ததை கவனித்தேன். அவளைடைய உணர்வை நான் பொறுப்பின்றி காயப்படுத்தியது போன்றதொரு குற்ற உணர்ச்சி வந்து என்னை கவ்விக்கொண்டது.

அவளை நான் காயப்படுத்த வந்தவன் இல்லை. அந்த உரையின் மேல் நான் எழுதியிருந்ததை சொல்ல வாயை திறக்கும் முன் அவள் முந்திக்கொண்டாள்.

“முடியாது. ஏன்னா அது பற்றி நான் யார்கிட்டயும் எப்போதும்  சொன்னது இல்லை!”

என்னிடம் பேசியதே ஒரு நேர விரயம் என முணுமுணுத்துக் கொண்டே என்னை விட்டு விலக முயன்றாள்.

“ஃபார் ஜெனிஸ் ஐஸ் ஒன்லி” என்றேன் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

அதற்க்குள் அவள் கணவன் எங்களிடம் வந்திருக்க. என்னை எரித்து விடுவது போல முறைத்து பார்த்து விட்டு தன் கணவனை கூட்டிக் கொண்டு சிராஜை நோக்கி விறுவிறுவென சென்று விட்டாள். 

அவள் கண்களில் தெரிந்த கோபத்தீயை இருபது வருடங்களுக்கு முன்பு காயத்ரி என்றொருத்தி என்னை கன்னத்தில் அறையும் முன் பார்த்திருக்கிறேன்.

சிராஜிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் நேராக காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டேன்.

Leave a Comment