நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 9

“நீ நடிகன் ஆகிவிடு, இயக்குனர் வேலை எல்லாம் உனக்கு சரி வராது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பள்ளி நாட்களில் எனக்கு அறிவுரை வழங்கிய சின்னப்பராஜ், தற்போது திரையுலகில் ஒரு இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தான்.

அவனது திரையுலக பெயர் சிராஜ். சின்னப்பராஜ் என்ற பெயரை சுருக்கி சிராஜ் என்று வைத்துக் கொண்டது போல் இருந்தது. ஆரம்ப நாட்களில் சிறுசிறு குறும்படங்களாக எடுத்துக் கொண்டிருந்தவன், நரிக்குறவர் சமுதாயத்தை மையமாக வைத்து வணிக ரீதியான படம் ஒன்றை எடுத்திருந்தான்.

அந்த திரைப்படமும் கடல் தாண்டி டொரண்டோ பிலிம் பெஸ்டிவல் வரை வந்திருந்தது. ஆர்வத்தில் என்னுடைய பார்ட்னர்கள் ஜேசன் மற்றும் பிரையன் இருவரையும் கூட்டிக்கொண்டு, படம் திரையிடப்பட்டு இருந்த குயின் விக்டோரியா திரையரங்கிற்கு சென்றிருந்தேன்.

திரைப்படம் முழுக்க நரிக்குறவர் மொழியிலேயே எடுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் சப்டைட்டில் என்னுடைய பார்ட்னர்களுக்கு மட்டுமல்லாமல் எனக்கும் தேவைப்பட்டது.

கனடா குடியுரிமை பெற்ற அந்த பிரிட்டிஷ்காரர்களுடன் நரிக்குறவர் படத்தை பார்ப்பதற்கு எனக்கு சற்று சங்கடமாக இருந்தது. படம் முடிந்து வெளியில் வரும்போது “இவர்களெல்லாம் சென்னையில் இருப்பவர்கள் தானா?” என்று ஜேசன் என்னிடம் கேட்டிருந்தார்.

அவர் ஒன்றும் தப்பான அர்த்தத்தில் கேட்டு விடவில்லை என்றாலும் எனக்கு பகீரென்று தூக்கி வாரிப்போட்டது. ஆம் அவர்களில் சிலர் இன்னும் சென்னையில் ஜீவிதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றேன்.

அப்படியே சென்னை இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்று எனவும். அந்த திரைப்படத்தில் கட்டப்பட்டுள்ளது. நகரத்தின் ஒரு மெல்லிய பரிமாணம் என்றேன்.

எங்கள் கம்பெனியின் மென்பொருள் அலுவலகத்தை முதலில் சீனாவில் நிறுவ திட்டமிட்டு இருந்தோம். ஜேசன் மனைவி ஒரு சீனர் என்பதால் அவருடைய யோசனையின் படி சீனாவை தேர்ந்தெடுக்க இருந்தார். 

அவருக்கு நான் தான் கடும் அழுத்தம் கொடுத்து சென்னையையும் பரிசீலிக்க சொல்லி இருந்தேன். இதற்காகவே ஜேசன் தம்பதிகளுக்கு ஒரு இன்ப சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்து சென்னைக்கு வரவழைத்தேன்.

ஜேசன் இதற்கு முன்பு இந்தியா வந்திருந்தாலும், சென்னைக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை.

ஜேசனும் அவர் மனைவியும் சென்னையின் ஐடி காரிடார் பகுதிகளை நன்கு சுற்றி பார்த்த பின்பும், முழுமையாக திருப்தி அடைந்ததாக எனக்கு தெரியவில்லை.

ஜேசன் மனைவி தொழில்நுட்பத்தில் சீனா நகரங்களை விட சென்னை பத்து வருடங்கள் பின் தங்கி இருப்பதாக கிண்டலடித்தார். நானும் அது உண்மைதான் என்றேன்.

ஒரு முறை காரில் பழைய மகாபலிபுரம் செல்லும் சாலையில் போகும் போது, அங்கிருந்த கட்டிடங்கள் எல்லாம் காண்பித்து இங்கே என்னென்ன   மென்பொருள் நிறுவனங்கள் இருக்கின்றன, எந்த மாதிரியான நேர்முகத் தேர்வுகளை நடத்தி புதியவர்களை பணியில் அமர்த்துகின்றனர் என்றெல்லாம் நான் ஜேசனிடம்  விவரித்துக் கொண்டிருந்தேன்.

கார் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது, அங்கே எங்கள் காருக்கு அருகில் கறிக்கடைக்காரர் ஒருவர் உயிருடன் இருக்கும் ஆடு ஒன்றை தன்னுடைய இரு சக்கர வண்டியின் கேரியரில் கட்டி வைத்தபடி பச்சை நிற விளக்கிற்காக காத்துக் கொண்டிருந்தார்.

தலையை மடக்கி கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு “மே, மே” என்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

அதை பார்த்த ஜேசனும் துடிதுடித்து இருக்க வேண்டும். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

“உங்கள் ஊரில் மாடுகளையாவது ஒழுங்காக வேனில் ஏற்றி  கறிக் கடைக்கு கொண்டு செல்வார்களா?” என்றார்.

அந்த ஆடு போட்ட சத்தத்தில் ஜேசன் நான் சொன்ன எதையும் கவனித்திருக்கவில்லை. ஒரு ஜீவகாருண்யரை போல இவ்வளவு நேரமும் அவர் அந்த  ஆட்டை பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

“இல்லை! மாடுகளை எல்லாம் இப்படி செய்வது கிடையாது. அவைகளை வேனில்தான் ஏற்றி கொண்டு செல்வார்கள். ஆனால் ஒரே ஒரு கன்று குட்டி தான் இருக்கிறது அதை கறிக்கடைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், வேறு வழி இல்லை, அதையும் இதைப்போல கேரியரில் கட்டிதான் எடுத்துச் செல்வார்கள்” என்றேன்.

⟢ ⟢ ⟢

அடுத்தடுத்த நாட்களில் காஞ்சிபுரம் தஞ்சாவூர் கும்பகோணம் என அவர்களுக்கு ஊர் சுற்றி காண்பித்தேன். அங்கங்கே இருக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொண்டார் ஜேசன்.

“சரி நம்முடைய மென்பொருள் கம்பெனியை சென்னையில் அமைத்துக் கொள்ளலாம்” என்ற முடிவில் ஜேசன் வந்திருப்பார் என்பது போல தெரிந்தது.

இருப்பினும் மறுநாள் கனடாவிற்கு கிளம்புவதற்கு முன் சென்னையில் மக்கள் கூடும் ஏதாவதொரு சந்தையை பார்க்கலாமா என்ற விண்ணப்பம் ஒன்றை வைத்தார் என்னிடம் .

“அது என்ன பிரமாதம் வாருங்கள் என்னுடன்” என்று ஜேசனையும் அவரது மனைவியையும் கூட்டி சென்று பாரி முனையை காண்பித்தேன்.

“இன்றைக்கு ஏதேனும் திருவிழாவா?” என்றார். 

“இல்லை இது எங்களுக்கு மற்றும் ஒரு சாதாரண நாள் தான்” என்றேன்.

பாரிமுனை போகும் வழி நெடுக இருக்கும் பிரிட்டிஷ் கால கட்டிடங்களை பார்த்துக் கொண்டே வந்தவர், இவையெல்லாம் எங்கள் முன்னோர்களின் கட்டிட கலைகள் என்று தன்னுடைய சீன மனைவியிடம் பெருமையுடன் சொல்லி கொண்டு வந்தார்.

⟢ ⟢ ⟢

எங்கள் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி இருந்தது எனக்கு.

எம்டெக் முடித்திருந்த என் மனைவி உமா சென்னைக்கு வந்ததும், தான் ஆசைப்பட்ட படியே ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில் சேர்ந்து கொண்டாள்.

கனேடிய போக்குவரத்து நிறுவனமொன்றின் மென்பொருள் பிரிவுதான் சென்னையிலிருக்கும் எங்கள் அலுவலகம். சிறிய அலுவலகம் என்பதால் மென்பொருள் பொறியாளர்களின் எண்ணிக்கை என்பது முதல் நூறு வரை இருந்தது.

கடந்த இரண்டு வருடத்தில் கம்பெனி வேலைகளுக்கு இடையே சிராஜ் என்ற சின்னப்பராஜ் உடனான பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டேன். அவன் எடுத்திருந்த நரிக்குறவர் படம் ஆஹா ஓஹோ என ஓடவில்லை என்றாலும் மோசம் ரகம் இல்லை.

இது வரை நான் அவனுக்கு பத்து சிறுகதைகள் மற்றும் இரண்டு நாவல்களை படிக்கச் சொல்லி கொடுத்திருப்பேன். மற்றவர்களுடைய நாவல்களை படித்து சிலாகிப்பனே தவிர என் கதையை அவன் இதுவரை  படித்தாக தெரியவில்லை.

ஒரு நாள் நான் எழுதிய ரொமான்டிக் த்ரில்லர் நாவல் ஒன்றை கொண்டு போய் அவன் வீட்டில் அமர்ந்து கொண்டேன். ஒரு நாள் முழுவதும் அவனை படிக்க வைத்து அவனுடைய கருத்தை ஏதும் கேட்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.

மறுநாள் சிராஜ் இடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

“மச்சி! நீ என்னுடைய கோஸ்ட் ரைட்டராக இருக்க முடியுமா?”

“முதலில் என்னுடைய நாவல்  எப்படி இருந்தது என்பதை சொல்!”

“நன்றாக இருக்கிறது. அதனால்தான் என்னுடைய அடுத்த படத்திற்கான கதையை நீதான் எழுத வேண்டும் என நினைக்கிறேன்”

“நான் கதைகளில் இலக்கியம் புகுத்த நினைப்பவன். மசாலா கதைகள்  எனக்கு அறவே வராது”

“ஆனால் உன்னை போல் ஒரு லட்சம் எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஒரு முழு நேர எழுத்தாளனாக அடுத்த ஐந்து ஆண்டுகள்  விடாமல் எழுதி, குறைந்தது பத்து புத்தகங்களையாவது நீ வெளியிட வேண்டும். அப்போதுதான் நீயும் ஒரு எழுத்தாளன் என்று உன் புத்தகத்தை வெளியிட யாரேனும் முன் வருவார்கள். அத்தகைய ஒரு அற்ப உயரத்தை தான்  நான் இந்த பத்து வருடத்தில் திரைதுறையில் எட்டியுள்ளேன்” என்றான் சிராஜ்.

அவன் சொல்வதும் உண்மைதான். சமீபத்தில் வெளிவந்திருந்த என்னுடைய நாவல்கள் சொற்ப பிரதிகளே விற்றிருந்தன. பதிப்பகத்தாரிடம் இது குறித்து கேட்டதற்கு, உங்களுக்கு என்று வாசகர் வட்டத்தை முதலில் உருவாக்குங்கள் என்றனர்.  

சிராஜ் உடன் இணைந்து கொண்டால் அவன் சொல்வது போல் ஐந்து வருடங்களை மிச்சப்படுத்தலாம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் கோஸ்ட் ரைட்டர் எனப்படுபவன் ஒரு நிழல் எழுத்தாளன். நிழல் எழுத்தாளனுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்காது.

எனக்கிருந்த அந்த கவலையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தேன். சிறுவயது முதல் எனக்கிருக்கும் எழுத்தின் மீதான ஆர்வத்திற்கு தீனி போட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் என்னுடய கதை ஒரு திரைப்படமாக மாறப்போகிறது என்பதே பெரு மகிழ்ச்சியாக இருந்தது.

“லேட்ஸ் ஒர்க் டுகெதர்” என்றேன் நான்.

⟢ ⟢ ⟢

பத்து நாட்களாக பலதரப்பட்ட கதை களத்தை விவாதித்து, இறுதியில் ஒரு கதையை தேர்வு செய்தோம். அரசியல் நையாண்டி கதை. ஒரு சாதாரண குடும்ப தலைவிக்கும் ஏரியா கவுன்சிலருக்கும் நடக்கும் பிரச்சனை எப்படி மாநிலம் தழுவிய போராட்டமாக மாறுகிறது என்பதுதான் கதை.

கேட்பதற்கு ஏதோ புரட்சி போராட்டம் போல  தெரியும். ஆனால் பக்கா காமெடி சப்ஜெக்ட். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்கள் என மூன்று மாதங்களாக உழைத்து ஒரு முழு நாவலையும் தயார் செய்து விட்டேன். 

சிராஜின் டீம் கதையை திரைக்கதையாக மாற்றும் பணியை தொடங்கி இருந்தார்கள்.

சிராஜுக்கு மும்பையைச் சேர்ந்த படத் தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்திருந்தார். கதையில் ஆளும் கட்சியினரையும் எதிர்க்கட்சியினரையும் கிண்டல் செய்யும் காட்சிகள் நிறைய வரும் என்பதால் குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் யாரும் முன் வரவில்லை. 

ஏனென்றால் பெரும்பாலான நாற்பது வயதுடைய நடிகைகள் ஏதேனும்  ஒரு கட்சி சார்புடையவர்களாகவே இருந்தார்கள். சிலர் எதற்கு வம்பென்று என்று ஒதுங்கிக் கொண்டார்கள். 

நான்கு நடிகைகளை இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று சிராஜ் தேர்ந்தெடுத்து இருந்தான்.

அந்த வரிசையில் ஜெனியின் பெயரும் இருந்தது.

Leave a Comment