நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 8

ஜெயந்தி மருத்துவமனையில் இருந்து கச்சிபௌலிக்கு காரில் போய்க் கொண்டிருந்தோம். கடந்த மூன்று நாட்களாக அம்மாவும் அப்பாவும் என்னுடன் மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார்கள்.

கார் ஹைதராபாத்தின் போக்குவரத்து நெரிசலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்க, அப்பா எதுவுமே நடக்காதது போல் நகரத்தை வேடிக்கை பார்ப்பதில் பிஸியாக இருந்தார்.

தொலைக்காட்சிக்கு ரிமோட் கண்ட்ரோல் இருப்பது போல, தன்னுடைய எமோஷன்களுக்கும் ரிமோட் கண்ட்ரோல் வைத்திருப்பவர் அப்பா. அவரால் எப்பேற்பட்ட அசாதாரண நிலையிலும் ஒரு ஜோக் அடித்து சிரிக்க முடியும்.

குதிகாலில் இருந்த வலியின் காரணமாக மருத்துவமனையில் நான் நேற்று நடக்க முடியாமல் அவதிப்பட்ட பொது கூட “நீ இப்படியே நொண்டி நொண்டி நடந்தால், நாம் எப்படி ராமோஜி பிலிம் சிட்டியும், கோல்கொண்டா கோட்டையையும் போய் பார்க்க போகிறோம்” என்று விசனப்பட்டார்.

“அவனுங்க நல்லாவே இருக்க மாட்டாங்க! பிள்ளையை போட்டு இந்த அடி அடிச்சி இருக்கானுங்க, நாசமா போனவனுங்க” என்று காரில் என் அருகில் அம்மா புலம்பிக்கொண்டே வந்தாள்.

“சும்மா இருடி! கேஸ் எதுவும் கொடுக்காம விட்டாங்களே. கேஸ் எல்லாம் கொடுத்திருந்தா, இவனுக்கு எந்த நாட்டுக்கும் விசா கொடுக்க மாட்டாங்க!  அப்பறம் இங்கயே குப்பை கொட்டிட்டு திரிய வேண்டியதுதான்!”

எனக்கென்னவோ, அப்பாவிற்கு என்னுடன் அமெரிக்காவிற்கும் வந்து சுற்றிப் பார்க்கும் ஆசை இருப்பது போலிருந்தது.

“நீ கவலைப்படாத தங்கம்! அம்மா வீட்டுக்கு போய் உனக்கு சூடா மஞ்ச சோறு ஒத்தடம் கொடுக்கிறேன். இந்த மாத்திரை மருந்துக்கு எல்லாம் கேட்காதது அந்த ஒத்தடத்தில் குணமாயிடும்” என்றாள் அம்மா.

ஜெனியின் வீட்டில் என்னை மயங்கும் வரை அடித்த தடியன்கள், என்னை அப்படியே கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

தங்களுடைய கடமையை சிறப்பாக செய்தமைக்காக அவென்யூ காவலாளிகளுக்கு ஜெனியோ அல்லது அவளின் பிஆர்ஓ உதய் ஷர்மாவோ சிறப்பாக கவனித்திருக்க வேண்டும்.

எங்களுக்கும் அதே போன்றதொரு சிறப்பு கவனிப்பு வேண்டுமென போலீசார், அவர்கள் பங்கு கடமையை நிறைவேற்றினார்கள்.

உள்ளே சிமெண்ட் அடைக்கப்பட்டிருந்த பிவிசி பைப் இரண்டை கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள் என அனுமானிப்பதற்குள் ஒருவர் என் தலையை நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டார். மரத்தாலான பெஞ்சின் மேல் நிர்வாணமாக குப்புற படுத்துக் கொண்டிருந்த என் கையை முறுக்கி பின்னே இழுத்தபடி மற்றோருவர் என் கால் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.

சற்று நேரத்தில் அருகே நின்றிருந்த காவலர்கள் தங்களிடமிருந்த பிவிசி பைப்பால் என் உள்ளங்காலில் மாறி மாறி அடிக்க துவங்கினர்.

உண்மையில் எனக்கு விழுந்த முதல் ஐந்து அடிகள் மட்டுமே எனக்கு உயிர் போவது போன்ற வலியை கொடுத்தது. அதன் பிறகு விழுந்த அடிகளின் வலியை என்னால் உணர முடியவில்லை.

ஆனால் என்னுடைய பின்புறத்தில் விழுந்து அடிகள், சதையை பிய்த்து எடுப்பது போன்றதொரு வலியை கடைசிவரை கொடுத்துக் கொண்டிருந்தது.

வலி தாங்க முடியாமல் கத்தி கதறிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் “அவ்வளவுதான் நம் கதை முடிந்தது, என்கவுண்டர் செய்து ஒரு புல்லட்டை வீணாக்குவதற்கு பதிலாக அடித்தே கொல்லப் போகிறார்கள்” என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

கடைசியாக பவன் வந்துதான் என்னை அந்த வதை முகாமிலிருந்து மீட்டு நேராக ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றான். அவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொழுது எங்களுடைய கொரியன் கம்பெனியின் அடையாள அட்டையை கொண்டு வந்திருந்தான்.

அதை பார்த்த போலீஸ்காரர்கள் “இவ்வளவு பெரிய கம்பெனியில் வேலையில் இருக்கிறீர்கள், நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா?” என்றெனக்கு அறிவுரை செய்திருந்தனர்.

நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பி போகும் முன் இன்ஸ்பெக்டர் எங்களிடம் தனிமையில் பேசியிருந்தார். 

என் மீது ஜெனி திருட்டு வழக்கொன்றை போடச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அவர்தான் என்னுடைய எதிர்காலத்திற்கு அதனால் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று மறுத்து விட்டதாகவும் கூறினார்.

அப்படியே ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை அவருடைய கரிசனத்திற்கான அன்பளிப்பாக எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். எனக்கென்னவோ நேற்று இரவு பிவிசி பைப்பை தூக்கிக் கொண்டிருந்த கைகளும் இன்ஸ்பெக்டரின் கைகளும் ஒரே மாதிரியாக இருப்பது போலிருந்து.

முன்னால் பவன் காரை ஓட்டிக்கொண்டிருக்க, அப்பா “அது என்ன பில்டிங்? இது என்ன பில்டிங்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார். அவரின் கேள்விகளுக்கு எல்லாம் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் பவன்.

ஜெனி வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த என் காரை தற்காலிகமாக முடக்கி வைத்திருப்பதாகவும்  இரண்டு நாட்களுக்கு பிறகு நான் வந்து அதை எடுத்துச் செல்லலாம் என்றும் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லி இருந்தார்கள்.

பின்னிருக்கையில் என்னருகே விடாமல் விசும்பிக் கொண்டே வந்த அம்மா “இந்த தொழில்ல இருக்கிறவங்கெல்லாம் நல்லவளாவே இருக்க மாட்டாளுங்க” என்றாள்.

அம்மாவிற்கு தெரிந்து ஒரு நடிகை சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக் கொண்டதாகவும் அதே போன்றதொரு கதிதான் இந்த ஜெனிக்கு வரப் போகிறது என்று சாபம் விட்டார்.

எனக்கு தெரியும் அம்மா ஒருபோதும் என்னிடம் இருக்கும் குறைகளை பற்றி பேசமாட்டாள். அவளைப் பொறுத்தவரை அது எப்படி வீடு தேடி வந்த ஒருவனை ஆள் வைத்து அடிக்கலாம் அவள். அவளின் பணத் திமிர்தானே இதற்கெல்லாம் காரணம். அந்த கடவுள் இதற்க்கு நிச்சயம் அவளுக்கு கூலி கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தாள்.

ஆர்த்தோ டாக்டரை கடைசியாய் ஒரு முறை பார்த்துவிட்டு நேற்று மாலையே டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய என்னை பவன் இன்று காலை மனநல மருத்துவரை பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் கட்டாயபடுத்தி இருந்தான்.

எங்கள் மூவரும் அதிர்ச்சியாய் இருந்தது. நான் இந்த பிரச்சனைக்கெல்லாம் போய் உடைந்து போகிறவன் அல்ல என்றும் அதனால் எனக்கு மனநல மருத்துவரின் சிகிச்சை ஏதும் தேவையில்லை என்றேன்.

“இல்லை உன்னால் தான் மற்றவர்களுக்கு பிரச்சனை! நீ நிச்சயம் பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும்” என்றான் பவன் கோபமாக.

“நீ என்ன என் மகனை பைத்தியம்னு சொல்ல வரியா?” என்றார் அப்பா வரிந்து கட்டிக்கொண்டு. அவரை தனியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினான் பவன்.

“அவரும் ஒரு டாக்டர் தானே, அவரை பார்த்து விட்டுப் போறதும் நல்லது தான். உடம்பிற்கு ஒரு நோவுனா மருந்து சாப்பிடுவது போல மனசுக்கு ஒரு நோவுன்னா மருந்து சாப்பிட்டுக்கலாம்” என்று என்னை ஆறுதல் படுத்தியிருந்தாள் அம்மா.  

பவன் இப்படி என் மீது கோபமாய் பேசி பார்த்ததே இல்லை. அப்பாவும் அவன் சொல்வதைக் கேட்டு அமைதியாக போகிறார் என்றால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்னிடம்.

மறுநாள் திட்டப்படியே மனநல மருத்துவரை சந்தித்தேன். நேரடியாக விஷயத்திற்கு வந்த அவர் என்னிடம் ஒரு சிசிடிவி வீடியோவை காண்பித்தார். நான் கூட அந்த சிசிடிவி வீடியோ நேற்று ஜெனி வீட்டில் பதிவானது என்றுதான் நினைத்திருந்தேன், மாறாக அது அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் நைட் கிளப் அரங்கில் பதிவாகியிருந்த சிசிடிவி வீடியோ.

எல்லோரும் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க. நான் மட்டும் டேபிளில் உட்கார்ந்து தனியாக பேசிக் கொண்டிருக்கிறேன். என் அருகில் ஒருவரும் இல்லை. நான் எவ்வித தயக்கமும் இன்றி என்னெதிரில் யாரோ ஒருவர் இருப்பது போல் பாவித்து பேசிக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் அங்கே ஆடிக்கொண்டிருந்த அனைவரும் கிளம்ப தயாராக, எங்கிருந்தோ வந்த பவன் என் முதுகில் தட்டி என்னை அழைத்து செல்கிறான். அத்தோடு அந்த வீடியோ காட்சி முடிகிறது.

“உன்னோட பிரச்சனை என்னவென்று இப்போது புரிகிறதா தம்பி?” என்றார் மனநல மருத்துவர்.

மளமளவென்று  கண்ணீர் வழிந்து ஓடியது எனக்கு. குற்ற உணர்ச்சியால் கூனி குறுகினேன். என்னை சந்திப்பதற்கு முன் அம்மா மற்றும் அப்பாவிடம் பேசி என்னுடைய மொத்த வரலாற்றையும் தெரிந்து கொண்டிருந்தார் அவர்.

“தனக்கு பிடித்த நடிகை மேல வர்ற ஒரு வித அப்செஷன் இது, அப்புறம் நீங்க ஒரு ஆறு மாசம் கடுமையான பணிச்சுமையில இருந்ததா உங்க நண்பர் சொல்லி இருந்தார். இந்த மாதிரி வருவது இயல்புதான். உங்களுக்கு சைக்காலஜி செஷன்ஸ் ரெக்கமண்ட் பண்ணி இருக்கேன். ஒரு மூணு செஷன்ஸ் அட்டென்ட் பண்ணுங்க, அப்படியே இந்த மாத்திரையும் எடுத்தீங்கனா எல்லாம் சரியாயிடும்”

கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை கையால் துடைத்துக் கொண்டேன்.

“அந்த அட்ரஸ் எப்படி கரெக்டா இருந்தது டாக்டர்?”

“சோஷியல் மீடியா இல்லனா நியூஸ் பேப்பர்ல படிச்சிருப்பீங்க, ஆனா உங்க மனசு நீங்க படிச்சதை ஒரு வசதிக்காக மறந்திட்டு இதையெல்லாம் ஜெனியே உங்க கிட்ட நேர்ல சொன்னதா உங்களை நம்ப வச்சு இருக்கு”

“எனக்கு தெரிஞ்சு நான் அப்படி எந்த ஒரு நியூஸையும் நான் பார்க்கல டாக்டர்”

“நீங்க படிச்சத கம்ப்ளீட்டா மறந்துட்டீங்க ஹரி! அதான் அது உங்க நினைவில இல்ல”

அவர் சொல்வதிலும் ஒரு முகாந்திரம் இருந்தது. என்னிடம் இனி வேறு கேள்விகள் ஏதும் இல்லை. உண்மை சுடும் என்பார்கள். என் மனம் அந்த சூட்டை கூட உணர முடியாத அளவுக்கு மரத்துப் போய் இருந்தது.

மௌனமாய் இருந்த என்னிடம் தானும் ஒரு ஜெனியின் ரசிகன் தான் என்ற உபரி தகவலை சொன்னபடி சில மாத்திரைகளை எழுதித் தந்து வழியனுப்பி வைத்தார் டாக்டர்.

எல்லா மாத்திரைகளையும் அப்பா ஓடிப் போய் கையோடு வாங்கி வந்து வைத்துக் கொண்டார். அனேகமாய் வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக எனக்குள் மாத்திரையை திணிக்கப் போகிறார் என்பது சர்வ நிச்சயம்.

பவன் சில்வர் ப்ரீஸ் அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்து என்னுடைய பிளாக் அருகே காரை நிறுத்தினான். காரில் இருந்து இறங்கிய எங்களை பிரியும் முன், நான் கட்டாயம் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டுதான் அலுவலகம் வர வேண்டும் என்று உத்தரவிட்டு சென்றான்.

எனக்கு முதலில் கசப்பாக இருந்தது பிறகு நாட்கள் செல்ல செல்ல பழகிவிட்டது இந்த உண்மையும், மருந்தும்.

மூன்று சைக்காலஜி செக்ஷன்கள் போதும் என்ற டாக்டரின் வாக்குறுதியை காற்றில் பார்க்க விட்டு ஆறு செக்ஷன்ஸ் வரை கொண்டு சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் ஐயோ சாமி ஆளை விடுங்கள் இனி ஜெனி நேரில் வந்து நின்றால் கூட அவளை ஒரு துணிக்கடை பொம்மையை பார்ப்பது போல் கடந்து சென்று விடுகிறேன் என்ற நிலைக்கு தள்ள பட்டேன்.

காயங்கள் ஆறினாலும் அதன் வடுக்கள் உடம்பிலிருந்து மறைவதில்லை. அது மனத்திற்கும் பொருந்தும். அந்த சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆனபிறகும் எப்போதாவது ஜெனியின் பாடல் ஒன்றை டிவியிலோ அல்லது கணினியிலோ கேட்கும் போது மனதின் வடுக்களையும் ஒரு முறை தடவி பார்த்து காயம் ஆறிவிட்டதென்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்வேன்.

நடிகை ஜெனியை காதலித்தவனாக இந்த கதையை இங்கேயே முடித்துக் கொள்ள ஆசைதான் ஆனால் என்னுடைய பள்ளி தோழன் சின்னப்பராஜ் பற்றி சொல்லாமல் இந்த கதை முழுமை அடையாது.

Leave a Comment