ஆயிரம் வருடங்கள் கழிந்தும் எந்த விஷயம் நம்மிடையே நீங்காமல் நிலைத்திருக்கும் என்று என்னைக் கேட்டால், நான் கண்ணை மூடிக்கொண்டு நம்மிடையே இருக்கும் வரிசைக்கு எதிரான மனப்பாங்கைச் சொல்லுவேன். நாம் வெறுமென வரிசைமுறையை கடைபிடிக்காத ஆட்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு என்னால் நகர முடியாது. நாம் வரிசை என்ற ஒழுங்குமுறைக்கே எதிரானவர்கள். நம்மால் எங்கும் வரிசையில் நிற்க முடியாது. வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், அவர்களெல்லாம் கையாலாகாதவர்கள் என்று நினைக்கத் தோன்றும். நம்முடைய கௌரவம், பெருமை, வீரம் எல்லாம் வரிசையில் நிற்காமல் தாண்டிச் செல்வதில்தான் உள்ளது. வரிசையைத் தாண்டிச் செல்ல உதவுமாயின், வாய் கூசாமல் பொய் சொல்வதற்கும், அவனை தெரியும், இவனை தெரியும் என்று பாசாங்கு காட்டுவதற்கும் பழக்கப்பட்டவர்கள் நாம்.
வெளிநாடுகளில் ஒரு நாட்டின் பிரதமரோ அல்லது அதிபரே வரிசையில் நின்று காய்கறி வாங்குவது போன்றோ, அல்லது வாக்களிப்பது போன்றோ பல காணொளிகள் இணையத்தில் காணக்கிடைக்கலாம். ஆனால் இங்கு பிரதமரை விடுங்கள்; ஒரு லோக்கல் கவுன்சிலரே தன்னை ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்டவராகக் கருதிக்கொள்வார். அவர் வரிசையில் நிற்கும் ஒரு காணொளியைக்கூட நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஒருமுறை, ஏடிஎம் பூத் ஒன்றில் ஏற்கனவே ஒருவர் உள்ளே இருப்பதால், நான் வெளியே காத்துக் கொண்டிருந்தேன். உள்ளே இருப்பவர் இரண்டு அல்லது மூன்று பண அட்டைகளை கொண்டு வந்திருப்பார் போல பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக உள்ளே பணம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் முடிந்து வெளியே வரும் தருவாயில், எங்கிருந்தோ ஒரு பைக் சர்ர்ர் என்று வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு காலிப்பயல்கள் இறங்கி வந்தார்கள். அதில் ஒருவன், என்னை கிட்டத்தட்ட இடித்து தள்ளிக்கொண்டு ஏடிஎமின் உள்ளே புகுந்து கொண்டான். எனக்கு ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தேன்.
அவனுடன் வந்தவனோ கெக்கெக்கே என சிரித்துக்கொண்டே,
“டேய், நீ பாட்டுக்கு உள்ள போற. இவரு இங்க நிக்கறாருடா”
என்று என்னை எள்ளி நகையாடினான்.
“அடீங்க..! நான் லோக்கல்டா இங்க!” என்று நூதன விளக்கம் கொடுத்துக் கொண்டே பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தது அந்த லோக்கல் ஜந்து. அப்படியே நண்பனிடம் தன்னுடைய வீர பிரதாபத்தை காண்பித்த மகிழ்ச்சியில் மீண்டும் பைக்கில் ஏறிச் சென்றது.
அத்திப்பூ பூத்ததைக்கூட பார்த்தவர்கள் உண்டு; ஆனால் இந்த டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று பாட்டில்கள் வாங்கும் மதுப்பிரியர்களை பார்த்தவர்கள் எவரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட காணக்கிடைக்காத காட்சியை பார்க்கும் பாக்கியம் ஒன்று இந்த அடியேனுக்கு கிட்டியது.
சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு டாஸ்மாக் கடை. எனக்குத் தெரிந்து, கலீஜிலும் கலீஜான ஓர் இடம் இப்பூமிப்பந்தில் உள்ளது என்றால், அது இந்த டாஸ்மாக் கடைதான். பக்கத்திலே நான்கைந்து ஐடி கம்பெனிகள் இருப்பதால், அதன் ஊழியர்கள் கடையின் கலீஜ் தன்மையையும் பொருட்படுத்தாது இங்கு வாங்குவதுதான் வழக்கம்.
ஒரு சுபயோக வெள்ளிக்கிழமையின் மாலை வேளையில், ராணுவக் கட்டுப்பாட்டுடன் நீண்டதொரு வரிசையில் நின்று, ஐடி மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டிருக்க, எங்கிருந்தோ நான்கு பேர் கொண்ட ஒரு குழு வந்தது.
டாஸ்மாக்கில் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்து,
“டேய்! இங்க பார்ரா… எல்லாம் லைனுல நிக்கறானுவ!”
என்று கிண்டலடித்துக் கொண்டு, நேராகப் போய் மது பாட்டில்களை வாங்கும் கூண்டுக்குள் கைவிட்டு தேவையானதை வாங்கிக்கொண்டு நகர்ந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மத்தியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை.
சரி, அவர்களையாவது குடிகார பயல்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் பகட்டும் நாகரிகமும் தவழும் இந்த கல்யாண மண்டபத்தில் நடக்கும் கூத்தைப் பாருங்கள். பெண்ணழைப்போ அல்லது தாலி கட்டும் வைபோகமோ முடிந்த பின்னர், கல்யாணத்திற்கு வந்தவர்கள் அடித்து பிடித்துக் கொண்டு மேடைக்கு ஓடுவதை காண கண்கள் கோடி வேண்டும்.
பெயருக்கென்று ஒரு வரிசை. ஆனால் அதை எவனாவது மதித்து நின்றால், அவனை கோமாளி ஆக்கிவிடுவார்கள். ஒரு வரிசை இருந்தால்தானே பிரச்சனை என்று, முதல் வரிசைக்கு போட்டியாக இரண்டாவது வரிசையை ஆரம்பித்துவிடுவார்கள். சில சமயம் வரிசை அழகாய் இடது பக்கம் ஆரம்பித்திருக்கும். ஓ… அப்படியா சங்கதி என்று ஒரு கூட்டம் வலது பக்கம் போய் நிற்கும். அங்கே கூட்டம் குறைவாக இருக்கிறது என்று இங்கிருந்து பாதி பேர் அங்கு போய் இணைந்து கொள்வர்.
புதிதாய் வருபவர்களுக்கு, ‘இடது புறம் மணப்பெண்ணுக்குரியவர்களும் வலது பக்கம் மணமகனுக்குரியவர்களும் நிற்க வேண்டுமோ?’ என்ற சந்தேகம் வரும்படி செய்து விடுவார்கள். நான் ஒரு முறை தூரத்து உறவினர் ஒருவரின் கல்யாணத்தில், கையில் மணமகனுக்கு கொடுக்க வேண்டிய பரிசுப் பொருளை வைத்துக்கொண்டு, மேடைக்கு முன் எந்தப் பக்கம் போவது என தெரியாதமல் அரை மணிநேரமாய் நின்றிருக்கிறேன்.
டோக்கன் சிஸ்டம் கொண்டு வருவதற்கு முன், அரசு பேருந்துகளில் எல்லாம் வரிசை என்ற பேச்சுக்கே இடமில்லை. அவனவன் அடித்துப் பிடித்துக் கொண்டு, ஜன்னல் வழியாக ஸ்பைடர் மேனை போல உள்ளே நுழைந்து இடம் பிடிக்கிறான். அங்கு போய் வரிசை என்று சொன்னால், சொன்னவனுக்கு பைத்தியக்காரன் பட்டத்தை கட்டிவிடுவார்கள்.
எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஆரோக்கியசாமி என்ற ஒருவர் இருந்தார். இப்போது பார்த்தாலும், அவரை நாலு வார்த்தை நறுவீசாக “எங்களை ஏன் அப்படி பாடாய் படுத்தினீர்கள்?” என்று கேட்கத் தோன்றும்.
எங்கள் பள்ளிக்கூடம் அமைந்திருந்த சிறிய நகரத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் ஏழெட்டு பள்ளிகள் இருக்கும். பொதுவாக அனைத்து பள்ளிகளும் மாலை நான்கு அல்லது நான்கரை மணிக்குள் முடிந்துவிடும். அச்சமயத்தில் நகரத்தின் நான்குமுனை ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தம் முழுவதும் மாணவர் கூட்டமாக இருக்கும். பேருந்தில் இடம் பிடிக்க, எனக்கு உனக்கு என மாணவர்கள் முண்டியடித்து ஏறிக்கொண்டிருப்பார்கள்.
பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்ப்புறம் தான் கடைத்தெரு இருக்கும். நான்குமுனை ரோடு என்பதால், தேநீர் கடை, குளிர்பானக் கடை, இனிப்பகம், உணவகம் என எல்லாவித தின்பண்டங்களும் விற்கும் கடைகளை அங்கு காணலாம். ஆரோக்கியசாமி அவர்களை அங்கிருக்கும் தங்கம் பேக்கரியில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். பள்ளி முடிந்த கையோடு வீட்டுக்குச் செல்லும் வழியில் இருக்கும் தங்கம் பேக்கரியில் தன்னுடைய ஸ்ப்ளெண்டர் பைக்கை நிறுத்திவிட்டு, டீயுடன் கூடிய ஒரு சமோசாவோ அல்லது ஒரு முட்டை பப்ஸோ சாப்பிட்டு விட்டு செல்வது அவர் வழக்கம்.
அப்படி ஒரு நாள் சாப்பிட்டு கொண்டிருக்கையில், பேருந்தில் இடம் பிடிக்க தள்ளுமுள்ளில் ஈடுபடும் தன் பள்ளி மாணவர்களை பார்த்திருக்கிறார். “என்ன இது, இவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள்?” என்று நினைத்தாரோ என்னவோ என்று தெரியவில்லை. அடுத்த நாள், பேருந்தில் செல்லும் மாணவர்கள் எல்லோருக்கும் கறாரான உத்தரவு ஒன்றை போட்டு விட்டார்.
அதன்படி, இன்று முதல் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் வரிசை முறையை கடைபிடிக்க வேண்டும். அதாவது, பேருந்தின் முன்புற படிக்கட்டின் அருகே அனைவரும் வரிசையில் நின்று, ஒவ்வொருத்தராக ஏற வேண்டும். யாரும் யாரையும் முந்திச் செல்லக் கூடாது. இதை மேற்பார்வையிட, ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு தலைமை மாணவன் ஒருவன் நியமிக்கப்படுவான். வரிசையில் ஏற மறுக்கும் பள்ளி மாணவர்களின் பெயர்களை குறித்துக் கொண்டு, மறுநாள் பள்ளி தொடங்கியதும் தலைமை ஆசிரியரிடம் பெயர் பட்டியலை அவன் கொடுத்து விட வேண்டும்.
முதல் நாளில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வரிசையை கடைப்பிடிக்கவில்லை. மற்ற பள்ளி மாணவர்கள் எல்லாம் குரங்குகளைப் போல ஜன்னல் வழியாக உள்நுழைந்து இருக்கையில் இடம் பிடித்துக் கொண்டிருக்க, எங்கள் பள்ளி மாணவர்களில் பாதி பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். எங்களை வினோதமாக பார்த்த ஓட்டுநரும் நடத்துனரும், பள்ளியின் பெயரை கேட்டுத் தெரிந்து கொண்டு, தலைமை ஆசிரியரையும் எங்களையும் வெகுவாக பாராட்டினார்கள்.
எல்லோரும் ஏறி அமர்ந்த பின், நிற்பதற்கே இடமில்லாமல் இருந்த அந்த பேருந்தில், வரிசையை கடைபிடித்தவர்கள் கடைசியாக ஏறி சமத்தாக நின்று கொண்டார்கள். அப்படி வரிசையில் நில்லாமல் திபுதிபுவென ஓடி அமர்ந்து கொண்ட எங்கள் பள்ளி மாணவர்களே, எங்களைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்தார்கள். அங்கே சமத்தாக நின்று கொண்டிருந்தவர்களில் பேருந்தின் தலைமை மாணவனும் ஒருவன்.
மறுநாள் காலை, எங்களை எள்ளி நகையாடியவர்களின் பெயர் பட்டியல் தலைமை ஆசிரியரிடம் போக, நான்கு பிரம்புக் கம்புகள் உடையும் அளவிற்கு எல்லோரையும் வெளுவெளுவென வெளுத்து ஒழுக்கத்தை கற்பித்திருந்தார் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி.
அதன்பிறகு, எங்கள் பள்ளி மாணவர்கள் எல்லோரும் பிரம்படிக்கு பயந்து ஒழுக்கசீலர்கள் ஆகியிருந்தனர். ஆனால் ஒருவருக்குக் கூட அந்த வருடம் முழுக்க பேருந்தில் இருக்கை கிடைக்கவில்லை. கடைசியாக, ஆரோக்கியசாமி அவர்கள் மாற்றலாகி வேறு ஒரு தலைமை ஆசிரியர் வந்த பிறகுதான், இந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது எனக் கருதி, பேருந்தில் வரிசையில் நின்று ஏறும் முறை கைவிடப்பட்டது.
இருப்பினும், பெரும்பாலான எங்கள் பள்ளி மாணவர்கள் அந்த ஒரு வருடத்தில் வரிசை முறைக்கு பழகி இருந்தனர். வரிசையில் நின்று பேருந்தில் ஏறும் எங்களைப் பார்த்து, மற்ற பள்ளி மாணவர்கள் சிலரும் இணைந்து கொண்டனர். சில சமயம், ஊர் பொதுமக்கள் கூட எங்களோடு வரிசையில் இணைந்து ஒத்துழைப்பு தந்ததும் நடந்ததுண்டு.
ஆரோக்கியசாமி அவர்கள் வேறு பள்ளி சென்றதற்கு பின்னர், நல்லாசிரியர் விருது வாங்கியதாக கேள்விப்பட்டிருந்தேன். பாவம்… அவர் நல்லாசிரியர் விருது வாங்குவதற்கு, அப்பள்ளி மாணவர்கள் எத்தகைய கொடுமைகளை எல்லாம் சந்தித்தார்களோ என தெரியவில்லை.
இந்த சம்பவம் நடந்து முப்பது வருடங்கள் ஆன பிறகும், ஆரோக்கியசாமி அவர்களின் வழிமுறை இன்றும் தேவைப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு உணர்ந்தேன்.
சொர்க்கவாசல் திறப்பு என்பதால், அன்று சிறப்பு தரிசனத்திற்காக, கோவிலைச் சுற்றி சவுக்குக் கட்டைகளை கொண்டு தற்காலிக வழி ஒன்றை அமைத்திருந்தது கோவில் நிர்வாகம். கொஞ்சம் விசாலமாக இருந்த அந்த வழியில், ஐந்து முதல் ஆறு பேர் வரை தாராளமாக ஒன்றாக நடந்து போகலாம். அந்த வழி அப்படியே பாம்பு போல வளைந்து வளைந்து சென்று, பிறகு அகலம் குறைந்து சன்னதிக்குள் போய் முடிந்தது. இது பக்தர்களை வரிசையில் செல்ல வைப்பதற்கான ஒரு ஏற்பாடு.
அந்த சிறப்பு ஏற்பாடுகளை எல்லாம் கவனிக்காமல், நேராக நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்ற என்னை, முன்பின் பார்த்திராத ஒருவர் வரிசையில் வருமாறு அறிவுறுத்தினார்.
“அடடே! பெருமாளின் மேலிருந்த பக்தியில் வரிசையை கவனிக்கவில்லையே!” என்று ஓடிப்போய் வரிசையில் கடைசி ஆளாய் நின்று கொண்டேன் நான்.
எனக்கு முன், நாமம் அணிந்திருந்த வைணவர் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களது முகச்சாடை அவர்கள் இருவரும் அண்ணன்–தம்பிகள் என காட்டியது. இருவரும் தழைய தழைய வெண்ணிற அங்கவஸ்திரம் ஒன்றை கட்டியிருந்தனர். அவர்கள் அணிந்திருந்த அங்கவஸ்திரமும், நெற்றியில் பூசப்பட்டிருந்த நாமமும், அவர்கள் வடக்கலை ஐயங்கார்கள் என்பதை எனக்கு சொல்லாமல் சொல்லியது.
அவர்கள் பேச்சிலிருந்து, அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும், மற்றொருவர் டெக்ஸாஸிலும் வேலை பார்ப்பதாக அறிந்து கொண்டேன். அவர்களிடதில் எந்த ஒரு பகட்டான பேச்சையும் காண முடியவில்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவும் மற்றவர்களிடத்தும் அழகு தமிழிலேயே பேசிக் கொண்டிருந்தனர்.
ஐந்து பேர் நிற்கக் கூடிய அளவிற்கு அகலமான வழியாக இருந்ததால், எனக்கு எந்தப் பக்கம் அடங்கி நிற்பது என்றே தெரியவில்லை. சரி, நடுவில் நின்று கொள்ளலாம் என்று பார்த்தால், ஏதோ சாரணர் இயக்கத்திற்கு தலைமை தாங்கும் மாணவன் போல இருக்கும் எனக் கருதி, வலது புறமாக அடங்கி, சவுக்குக் கட்டைகளால் போடப்பட்டிருந்த தடுப்பில் சாய்ந்து கொண்டேன்.
எனக்கு பின் வந்தவர்களும் முரண்டு பிடிக்காமல் எனக்கு பின்னே நின்று கொண்டார்கள். அவர்களுக்குப் பின்னும் யாரும் வரிசையை மீறாமல் ஒழுக்கம் காத்தனர்.
திடீரென, நான்கு பேர் கும்பலாய் நாங்கள் நின்றிருந்த வரிசைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வழியினுள் நுழைந்தனர். வரிசையில் நிற்பவர்களை எல்லாம் சட்டை செய்யாமல், நாங்கள் எல்லாம் இக்கோயிலின் தர்மகர்த்தாக்கள் என்பது போல, உள்ளே முன்னேறிக் கொண்டே வந்தனர். பின்னால் இருந்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அந்த நால்வர் அணியோ, “வழி! வழி!” என்று கூறிக் கொண்டே வந்தது.
என்னைத் தாண்டும்போது, அவர்களில் ஒருவனிடம் “வரிசையில் வாருங்கள்!” என்றேன் நான். அவனோ உடம்பை விறைப்பாக வைத்துக் கொண்டு என்னை முறைத்துப் பார்த்தான். போய் தொலையுங்கள் என்று நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.
மீண்டும் “வழி! வழி!” என்று அதிகாரக் குரல் கொடுத்துக் கொண்டே அந்தக் கும்பல் முன்னேறியது. சாக்கடையில் விழுந்து எழுந்து வரும் எருமை மாடுகளுக்கு வழி விடுவது போல, எனக்கு முன்பிருந்தவர்கள் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
அந்த எருமை மாடுகள் அந்த பிராமண சகோதரர்களை தாண்டும் போது, அந்த சகோதரர்களில் ஒருவர்,
“யார் நீங்கள்? எதற்காக வரிசையைப் பிளந்து கொண்டு செல்கிறீர்கள்?” என்று அவர்களை வழிமறித்தார். தினவெடுத்த தோள்களை கொண்டிருந்த அவர், அனேகமாக அண்ணனாக இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
“எங்க ஆளுங்கெல்லாம் முன்னாடி இருக்காங்க!” என்று, அவசர அவசரமாக இதய அறுவைச் சிகிச்சைக்கு செல்லும் மருத்துவரைப் போல நடந்து கொண்டார்கள். பிராமணரோ, “உங்களுடன் வந்திருந்தவர்கள் யார்? எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள்?” என்று குறுக்கு விசாரணை செய்தார்.
அதற்கெல்லாம் பதில் சொல்ல நாங்கள் தயார் இல்லை என்பது போல, கிடைக்கும் இடைவெளிகளில் புகுந்து முன்னேறியது அந்தக் கும்பல். போகிற போக்கில் ஒருவன், “எங்களுக்கு தலைவரையே தெரியும்!” என்று மற்ற எருமை மாடுகளிடம் சொல்லிச் சிரித்தான்.
நானோ, “யார்தான் இவர்கள்? எங்கே இப்படி முட்டி மோதிக்கொண்டு போகிறார்கள்?” என்று எட்டிப் பார்த்தேன். அவர்கள் “வழி! வழி!” என்று வெகு தூரம் வரிசையில் சென்று, அங்கிருந்த மற்ற நான்கு எருமை மாடுகளுடன் சேர்ந்து கொண்டனர்.
தன்னை அத்தடியன்கள் தாண்டிச் சென்றது, ஐயருக்கு தாங்க முடியாத தலைகுனிவைத் தந்துவிட்டதாக எண்ணி,
“அதெப்படி? இவர்கள் வரிசையை மதிக்காமல் செல்லலாம்? இங்கே நாமெல்லாம் வேலை வெட்டி இல்லாமலா வரிசையில் நின்று கொண்டிருக்கிறோம்?” என்று பின்னால் இருந்த எங்களைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்!” என்று ஆமோதிப்பது போல தலையை ஆட்டி விட்டு, கீழே குனிந்து கொண்டேன்.
அவரின் தம்பி அதற்கு வலு சேர்ப்பது போல, “யாரும் வழி விடாதீங்க! எல்லோரும் கேப் தெரியாமல் வழிய மறச்சுண்டு நில்லுங்க” என்றார்—அன்பும் அதிகாரமும் கலந்த தொணியில். அதைக் கேட்டு சிலர் இடைவெளிகளை மறைப்பது போல உடம்பை அங்கும் இங்கும் நகர்த்தினார்கள்.
“தலைவரை தெரியும்னு சொல்லிண்டு போறான்! இங்க பெருமாள் தான் தலைவர். அவரை தெரியுமாமா இவனுக்கு? எனக்குக் கூடத்தான் இந்த ஏரியா எம்எல்ஏவையும் எஸ்பிஐயும் தெரியும். அதற்காக நான் எல்லோரையும் முந்திண்டு போயிட முடியுமா?” என்றார் அண்ணன்.
எல்லோரும் அத்தடியன்கள் மேல் உள்ள பயத்தின் பெயரால்தான் கம்மென்று இருக்கிறார்கள் என்றும், ஆனால் நான் இந்த ஊர்க்காரன்; இது என்னுடைய கோயில்—இதை நான் தட்டிக் கேட்கவில்லை என்றால் வேறு யார் கேட்பது என்றும், அந்த வைணவ சகோதரர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி சமாதானம் செய்து கொண்டனர்.
வரிசை கொஞ்சம் முன்னேறியிருந்த போது, பேண்ட்–சட்டை அணிந்த ஒரு நாமதாரி ஒருவர் இதற்கு முன் சென்றவர்களை போலவே ஆனால் பவ்யமான குரலில், “கொஞ்சம் வழி விடுங்கோ! கொஞ்சம் வழி விடுங்கோ!”
என்று சொல்லிக்கொண்டே, வரிசையில் காணப்பட்ட இடைவெளிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி முன்னேறி வந்து கொண்டிருந்தார்.
அவர் என்னையும் தாண்டிச் சென்றார். ஏனோ, அவரை யாரும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உள்ளே செல்ல வழி விட்டு ஒதுங்கிக் கொண்டனர். நானும், அந்த அங்கவஸ்திரம் அணிந்த சகோதரர்களும் உட்பட, அனைவரும் வழிவிட்டிருந்தோம்.
தலைமுடி முழுக்க நரைத்திருந்த ஒருவர், அந்த பேண்ட்–சட்டை நாமதாரியைத் தடுத்து நிறுத்தி,
“இப்போதுதானே அந்த சாமி சொல்லிட்டு இருக்காரு—எல்லோரும் வரிசையில் நின்று வாங்கன்னு. நீங்களும் ஏன் அவுங்களைப் போலவே எல்லோரையும் தள்ளிக்கிட்டு முன்னாடி போறீங்க?” என்று கேட்டிருந்தார்.
கார் பார்க்கிங் செய்துவிட்டு வருவதற்குள், தன்னுடைய குடும்பத்தினர் முன்னே சென்று விட்டார்கள் என்றும், அவர்களுடன் போய் நிற்பதற்காகவே தேடிக் கொண்டு போகிறேன் என்றும் சொன்னார் அந்த பேண்ட்–சட்டை நாமதாரி. அதில் ஒரு விதமாக சமாதானம் அடைந்த தலைமுடி நரைத்திருந்தவர், அவரை விட்டுவிட்டார்.
இன்னும் கோயிலின் வாசற்படியே வரவில்லை. அதற்கு இன்னும் ஒரு அரை மணிநேரமாவது ஆகும் போலிருந்தது. கால் வலிக்காமல் இருக்க, தடுப்புக் கழியின் மீது ஒரு காலை வைத்து நின்று கொண்டேன் நான்.
கொஞ்ச நேரத்தில், வெள்ளை வேட்டி அணிந்திருந்த ஒருவர், நாங்கள் நின்று கொண்டிருந்த வரிசையை ஏறெடுத்தும் பார்க்காமல், நுழைவாயில் வழியாக தன்னுடைய சகாக்களுடன் உள்ளே சென்று கொண்டிருந்தார். உடன் சென்ற சகாக்களில் ஒருவன், கட்டியக்காரனைப் போல, “வழிவிடுங்க! வழிவிடுங்க!” என்று கூவிக் கொண்டே முன் சென்றான்.
அவர் நிச்சயம் ஒரு விஐபியாகத்தான் இருக்க வேண்டும் என தோன்றியது எனக்கு. சன்னதிக்குள் இருந்த ஒரு குருக்கள் வெளியே ஓடி வந்து, அந்த கரைவேட்டிக்காரரையும் அவரது சகாக்களையும் பவ்யமாக உள்ளே அழைத்துச் சென்றார்.
“இப்போ இவாளெல்லாம் கரை வேட்டி கட்டிண்டு வர்றவாளுக்கும், ஜீன்ஸ் பேண்ட் போட்டுண்டு வர்றவாளுக்கும் தான் மரியாதை தர்றா. அங்கவஸ்திரம் கட்டிண்டு பாரம்பர்யமாய் வர்றவாளை ஒருத்தரும் மதிக்கறதில்ல. இதையெல்லாம் அந்த பெருமாள் பார்த்துண்டேதான் இருக்கான்,” என்று அந்த கோடாரிக்காம்பு அவாளை சபித்தார்—வைணவ சகோதரர்களில் மூத்தவர்.
அந்த விஐபி சென்றதன் பின்னர், அவருக்குப் பின்னால் வந்த விஐபி அல்லாதோரும், “நாங்கள் மட்டும் என்ன இளித்தவாயர்களா?” என்று வரிசையை கண்டு கொள்ளாமல், நேராக நுழைவாயில் வழியாக சன்னதிக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.
என்னதான் அங்கு நடக்கிறது? எப்படி அவர்கள் உள்ளே செல்லுகிறார்கள் என்பதை அறிய, கொஞ்சம் உள்ளே எட்டிப் பார்த்தோம். பள்ளிக்காலத்தில் வரிசையில் நின்று பேருந்தில் ஏறிய அப்பாவி மாணவர்களைப் போல, இங்கே நாங்கள் காத்துக் கொண்டு நிற்க, ஒரு பக்கம் பைபாஸில் எந்தவித நெரிசலும் இல்லாமல் செல்லும் வாகனங்களைப் போல, மற்றவர்கள் நேராக சன்னதிக்குள் நுழைந்து, தரிசனம் முடித்து வெளியே வந்தனர்.
இந்த காட்சியை கண்டதும், வைணவ சகோதரர்களில் பெரியவர் கொதித்து போய், வரிசையில் இருந்து வெளியே வந்து, நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்றார்.
“இப்படி எல்லோரும் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்கிறீர்களே! உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என உள்ளே போக முயன்றவர்களைத் தடுத்தார்.
அவர்களில் சிலர், “நீ யார்?” என்று கேட்க, அதற்குள் அவர் சட்டையை கழட்டி தம்பியிடம் கொடுத்துவிட்டு, தன் உடம்பைச் சுற்றி இருந்த பூணூல் தெரியும்படி பார்த்துக் கொண்டார்.
“இது என் கோயில்! நான் கேட்காட்டி வேற எவன் கேட்பான்?” என்றார்.
உள்ளே நுழைய முயற்சி செய்த வேற்று மாநிலக் கூட்டத்தினரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசி துவம்சம் செய்து, வரிசைக்குள் வரும்படி செய்தார்.
அய்யரின் தாண்டவம் தொடங்குவதற்கு முன்பாகவே, எனக்கு தலைவரை தெரியும் என்று வரிசையின் இடைவெளி வழியே உள்ளே சென்றிருந்த எருமை மாட்டுக் கூட்டத்திலிருந்து, ஒரு எருமை மாடு தடுப்பிலிருந்து வெளியேறி, பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரிய மாலை ஒன்றை வாங்கிக் கொண்டு, கோவில் நுழைவாயிலில் வந்து நின்றது.
அங்கிருந்த அய்யரிடம், தன்னுடைய கூட்டம் உள்ளே வரிசையில் நின்று கொண்டிருப்பதாகவும், தான் மட்டும் மாலை வாங்கவேண்டி வெளியில் போய் வந்ததாகவும், ஆகவே தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
ஏற்கனவே அந்த எருமைக் கூட்டத்தின் மேல் கடுப்பில் இருந்தவர், அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். அப்படியே இரு கைகளையும் நீட்டி, முழு நுழைவாயிலையும் மறைத்துக் கொண்டு நின்றார்.
அவரின் தினவெடுத்த தோள்களைப் பார்த்து, மாலையோடு வந்திருந்த எருமை மாடு சற்று பயந்து போயிருக்கக் கூடும். ஏதேனும் கைகலப்பு ஏற்பட்டால் எருமை மாட்டை காயடித்து விடும் அளவிற்கு, புஜபல பராக்கிரமசாலியைப் போல இருந்தார் அந்த வைணவர்.
அதற்குள், வரிசையில் நின்று கொண்டிருந்த எல்லோரும் சத்தம் போடத் தொடங்கி விட்டனர்.
“தம்பி வா! வந்து வரிசையில் நில்!” என்று எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
“எல்லாம் இந்த ஐயரால் வந்தது!” என்று சும்மா இருந்தவன்களும் இப்போது சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்களே என்று புலம்பிக்கொண்டு, தன்னுடைய கூட்டத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்து வரவழைத்து அந்த எருமை.
உள்ளிருந்து கூட்டமாய் வந்த தடியன்கள் அவரிடம் பேசிப் பார்த்தார்கள்; அவர் மசியவில்லை.
“நீ யார் எங்களை வழிமறிக்க?” என்று அதட்டிப் பார்த்தார்கள். அதற்கும் அவர் மசியவில்லை.
“எங்களுக்கு தலைவரையே தெரியும்!” என்று மிரட்டி பார்த்தார்கள்.
அதற்கு அவர், “தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அந்த பெருமாள்தான். அவர் மீது ஆணையாக, நான் சன்னதிக்குள் வரிசையில் வராத ஒருவரையும் அனுமதிக்கப் போவதில்லை” என்று முன்பைவிட உத்வேகமாக, இரு கைகளையும் நீட்டிக் கொண்டு வழியை மறைத்துக் கொண்டு நின்றார்.
எருமை மாடுகள் அவரை நெட்டித் தள்ளி அடிக்க முயற்சி செய்வது போல பாவ்லா காட்டத் தொடங்கின. அவைகளில் ஒன்று மேலிருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்துவிட்டு, மற்றவர்களுக்கு சைகை செய்தது. சிசிடிவி மூலம் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று பயந்து பாவ்லாவை நிறுத்திவிட்டு, அவரை ஒருமையில் வசைப்பாடத் தொடங்கியது.
அவரோ, இந்த வசைப்பாடல்கள் எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்பது போல, கம்பீரமாய் நின்று கொண்டார். சொர்க்கவாசல் திறப்பைக் காண வந்தவர், இப்படி தடம் மாறிப் போய் கோவிலின் வாயிற்காவலன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த அமளிதுமளியில், வரிசையிலிருந்து விலகி நேராக நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் வருவோரின் கூட்டம் கூடிக் கொண்டே போனது.
அவருக்கு முன், ஒரு புறம் தரிசனம் முடிந்து கோயிலுக்கு வெளியே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள்; மற்றொரு புறம் எப்போது இந்த மனுஷன் நகருவான், அந்த இடைவெளியில் கோவிலுக்குள் நுழையலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் கூட்டம்.
“இப்படி ஒரு ஆம்பளையா, ஒத்தையா இவன் மட்டும் இப்படி தட்டிக் கேட்கிறானே! மத்தவா யாராவது உதவிக்கு வராம, வாய மூடிட்டு கம்முனு இருக்கா!” என்று அண்ணன் அருகிலிருந்த அவரது தம்பி, வரிசையில் நின்றிருந்தவர்களைப் பார்த்து சாடையாக பேசிக் கொண்டிருந்தார்.
அதற்குள், நான் அவர்களைத் தாண்டி வரிசையில் வெகு தூரம் வந்திருந்தேன். கூட்டம் சேரச் சேர, அவரால் தாக்குப் பிடிக்க முடியாமல், “எக்கேடாவது கெட்டு ஒழிந்து போங்கள்!” என்று சொல்லிவிட்டு, தன் தம்பியுடன் எனக்கு முன்னால் வந்து நின்று கொண்டார்.
இதற்கிடையே, பேண்ட்–சர்ட் அணிந்து உள்ளே சென்றிருந்த நாமதாரி, சொர்க்கவாசல் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார். அவர் சொன்னது போல, அவருடைய குடும்பத்தினர் யாரும் அவருடன் இல்லை. ச்சே… என்ன ஒரு சாமர்த்தியம் அவரிடம்! யாரிடமும் எந்த எதிர்ப்பையும் சம்பாதிக்காமல், தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் சொர்க்கவாசல் தரிசனத்தை முடித்துக் கொண்டு, பூனையைப் போல இப்போது நழுவிக்கொண்டிருக்கிறார்.
எனக்கு முன்னே நின்றிருந்த வைணவ சகோதரர்கள், இப்போது இந்தப் பொது ஜனத்தை வசைபாடிக் கொண்டிருந்தனர். இந்த வரிசையில் நிற்கும் பாவப்பட்ட ஊமை ஜனங்களுக்கு கேள்வி கேட்கும் தைரியம் இல்லை என்றும், இப்படியே நின்று கொண்டிருந்தால் ஒரு நாள் முழுக்க நின்றுகொண்டிருக்க நேரிடும் என்றும் புலம்பிக் கொண்டிருந்தனர்.
இடையே, ஜீன்ஸ் அணிந்தவாளுக்கும் கரைவேட்டி கட்டியவாளுக்கும் தான் இங்கு மரியாதை இருக்கிறது என வருத்தப்பட்டனர். லெவிஸ் ஜீன்ஸ் அணிந்திருந்த நான் அவர்களை கவனிக்காதது போல வேறு எங்கோ திரும்பிக் கொண்டேன்.
உள்ளே, பெருமாள் நன்கு அலங்கரிக்கப்பட்டு, சொர்க்கவாசலோடு காட்சி தந்து கொண்டிருந்தார். கருவறை வரை பொருமிக் கொண்டு வந்த அவர்கள், உள்ளே இருந்த குருக்களை பார்த்ததும், நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்லி நியாயம் கேட்டனர். உண்மையில், அந்தக் குருக்கள் தான் இதற்கு முன்னர் வந்த கரைவேட்டிக்காரரையும் அவரது சகாக்களையும் உள்ளே பவ்யத்துடன் அழைத்துச் சென்றிருந்தவர்.
குருக்களோ—
அவர் விஐபி, அதனால் நேரடியாக அழைத்து வந்தோம் என்றோ,
நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் என்றோ,
ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருக்கலாம்.
அல்லது குறைந்தபட்சம் ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்.
மாறாக,
“கூட்டமா இருந்துச்சுன்னா கோயிலுக்கு வராதீரூம் ஓய்”
என்று கூலாக சொல்லிவிட்டு, துளசி தீர்த்தம் வாங்கிக் கொண்டு கிளம்பச் சொன்னார்.
சகோதரர்களுக்கு வந்தது பெருங்கோபம். தம்பியானவர் கருவறை என்றுகூட பார்க்காமல் கத்தத் தொடங்கினார்.
“அப்ப நாங்க சொர்க்கவாசல் திறக்கறச்ச வரக்கூடாதா? ஏதாவது நான்-ஆஸ்பிஷஸ் டேய்ல வந்து பாக்கச் சொல்றீரா? நல்லாயிருக்கு ஓய் உங்க நியாயம்!”
“எல்லாத்தையும் அந்த பகவான் பார்த்துண்டு இருக்கான்! இப்படி காசு வாங்கிண்டு பாவம் பண்ணாதேள்,” என்று குருக்களை எச்சரித்தார் அண்ணன்.
பின்னாலிருந்தவர்களைப் பார்த்து, சொர்க்கவாசல் என்று ஏதுமில்லை என்றும், எல்லாம் நம்ம மனசுலதான் இருக்கிறது என்றும், அது புரியாம இந்த மனுஷாளெல்லாம் ஆடிண்டு இருக்கிறார்கள் என்றும் தத்துவம் பேசினார்.
அதற்குள், குருக்கள் அருகிலிருந்த ஒருவர், “இப்படி வந்து பேசுங்க சாமி… எல்லாரும் லைன்ல வெயிட் பண்றாங்க,” என்று சகோதரர்கள் இருவரையும் இழுத்து ஒரு பக்கமாக விட்டார். அவர் என்னையும் இழுப்பதற்கு கை நீட்டுவதற்கு முன்பே, நானாகவே அவர் பக்கம் சென்றுவிட்டேன்.
வெளியே வந்த சகோதரர்களில் ஒருவர் தன்னுடைய மொபைல் போனை எடுத்து கடகடவென யாருக்கோ போன் செய்தார். எஸ்பி ஆபிஸ்க்கு தான் போன் செய்கிறார்கள் என்பதை ஓரக் கண்ணால் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.
“ஆத்தாடி… இவர்களுக்கு உண்மையிலேயே எஸ்பிஐ தெரியும் போல!” என்று நினைத்துக் கொண்டு, வேக வேகமாக அந்த இடத்தைத் தாண்டி நகர்த்துவிட்டேன்.
“விளிம்பு நிலையில் வாழும் மிகச் சாதாரணமானவன் நான். எனக்கு எந்த ஒரு காவல் அதிகாரியையும் அல்லது பதவியில் இருக்கும் அரசு பணியாளரையும் தெரியாது. வரிசையில் நிற்கும் போது யாரேனும் என்னைத் தாண்டிச் சென்றால், அதிகபட்சம் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஒரு சிறு சலசலப்பை மட்டுமே என்னால் ஏற்படுத்த முடியும். எருமை மாடுகளைத் தடுத்து நிறுத்தி ஒழுக்கம் கற்பிப்பது என்னுடைய வேலையல்ல” என்று தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க, இவற்றையெல்லாம் எனக்குள்ளாகவே நான் சொல்லிக் கொண்டேன்.
வெளியே வரும்போது, நுழைவாயிலில் இப்போதும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். முன்புபோலவே, சிலர் “வழி… வழி…” என்று தங்களுக்கு ஏதாவது ஒரு தலைவரையோ, அல்லது விஐபியையோ தெரியும் என்று சொல்லிக்கொண்டு புத்திசாலித்தனமாக முன்னேறிக் கொண்டிருந்தது. வரிசையை மதிக்காத மக்களின் கூட்டம் ஒருபுறம் நேராக சன்னதிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. நான் கோவிலின் நுழைவாயிலில், முகம் தெரியாத ஒருவரை பார்த்து, அங்கிருக்கும் வரிசையில் வருமாறு அறிவுறுத்திவிட்டு வந்திருந்தேன்.
— ரா. சிவராமன்