நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 7

“நான் ஜெனியோட பிரண்ட். அவள் தான் இன்று என்னை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாள்” என்றேன்.

நான் நடிகை ஜெனியை அவள் இவள் என்று உரிமையோடு பேசுவதை பார்த்து “சார் நீங்க மேடமோட பிரண்டுன்னு சொல்றீங்க, அப்ப நீங்க அவங்களுக்கு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்றான். 

அவன் கேட்பது நியாயம்தான். ஆனால் அவள் மொபைல் எண்ணை வாங்குவதற்கு முன்பு அவருடைய தோழிகள் அவசர அவசரமாக அவளை கூட்டிச் சென்று விட்டார்கள்.

“அவங்களோட போன் நம்பர் என்கிட்ட இல்ல, ஆனா அவங்கதான் இந்த அட்ரஸுக்கு என்னை வரச்சொல்லி இருந்தாங்க”

செக்யூரிட்டிக்கு என் மீது மெல்ல சந்தேகம் வந்திருக்க வேண்டும். அது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். அவளுடைய போன் நம்பர் கூட தெரிந்திருக்காத இவன் எப்படி பிரண்டாக இருக்க முடியும் என நினைத்திருப்பான்.

“நான் பர்சனல் விஷயமா வந்திருக்கிறேன். என்னோட பேரு ஹரி. நீங்க அவங்களுக்கு போன் செஞ்சு கொஞ்சம் இன்பார்ம் பண்ணுங்க. இல்ல நம்பரை குடுங்க நான் பேசுகிறேன்”

“எனக்கு அவங்க நம்பர் தெரியாது. வேண்டுமென்றால் உதய் ஷர்மா சாரிடம் தகவல் தெரிவிக்கிறேன்” என்றான் செக்யூரிட்டி.

“யாராவர் உதய் ஷர்மா?”

“அவர்தான் ஜெனி மேடத்தோட பிஆர்ஓ”

என்னது பிஆர்ஓ வா? எதற்காக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்? நான் என்ன ஜெனியின் கால்ஷீட் கேட்டு வந்திருக்கிறேனா? ஒருவேளை அவனிடம் நான் பேச வேண்டி இருந்தால் என்ன பேசுவது?  நான் ஜெனியும் நேற்று நைட்கிளப்பில் சந்தித்தோம். அப்போது அவள்தான் இந்த முகவரியை கொடுத்து என்னை வரச் சொல்லியிருந்தாள் என்றால் முதலில் அவன் நம்புவானா? அப்படியே நம்பினாலும் அவன் எனக்காக எப்படி ஜெனியிடம் பேசுவான்? கால்ஷீட் டீல் பண்றவனிடம் எதற்கு இதையெல்லாம் கொண்டு போக வேண்டுமென தோன்றியது.

“வீட்டில் ஜெனி இருக்காங்களா”

“அதான் சொன்னேனே சார், மேடம் வீட்டில் இல்லை என்று”

“எப்ப வருவாங்கன்னு தெரியுமா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது”

அவன் சொல்வதும் சரிதான். ஒரு செக்யூரிட்டியிடமா தான் எங்கே போகிறேன், எப்போது வருவேன் என்ற விவரங்களை சொல்லிவிட்டு போவாள். 

ஏதோ ஒக்க சிவிரி உதயம் என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடித்து கொண்டிருப்பதாக சொன்னாளே. ஒருவேளை அந்த ஷூட்டிங்கிற்கு போயிருக்கலாம் என யூகித்தேன்.

“நான் அவங்க வர வரைக்கும் இங்கயே வெயிட் பண்றேன்”

“உங்க இஷ்டம்”

அதைப் பற்றி தனக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது போல் திரும்பிக் கொண்டான்.

தெருவில் நடந்து கொண்டும், கால் வலிக்கும் போது காரில் வந்து அமர்ந்து கொண்டும் நேரத்தை கடத்தினேன். நான் அப்படி ஜெனியின் வருகைக்காக காத்திருப்பேன் என செக்யூரிட்டி எதிர்பார்த்து இருக்க மாட்டான். 

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான் இடத்தை விட்டு போகாததால் அவன் அறையில் இருந்தபடி என்னை அதட்டினான்.

“ஹலோ! நீங்க இங்க இப்படி எல்லாம் வெயிட் பண்ண கூடாது!”

சட்டென கோபம் தலைக்கேறியது எனக்கு. 

“அதைக் கேட்க நீ யார். நான் காரை நிறுத்தி இருக்கும் இடம் ரோடு. அது பொது இடம். உன்னுடைய அதிகாரம் எல்லாம் அந்த பங்களாவிற்குள் தான், வெளியில் அல்ல”

ஜெனி வரட்டும், இவனை ஒரு வழி பண்ணுகிறேன் என்று மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தேன்.

இங்கு யாரென தெரியாத ஒருவன் வந்து பிரச்சனை பண்ணுகிறான் என அவென்யூ காவலாளிகளை அழைக்கப் போகிறேன் என மிரட்டி பார்த்தான் செக்யூரிட்டி.

“ராணுவமே வந்தாலும் நான் இங்கிருந்து ஒரு அடி கூட நகர போவதில்லை. நான் யாரென்று தெரியும் வரும்போது பார், உனக்கு தகுந்த பாடம் புகட்டுகிறேன்” என்று ஆள்காட்டி விரலால் காட்டி அவனை பதிலுக்கு எச்சரித்தேன்.

என்னுடைய பிடிவாதமும், அதிகார பேச்சும் அவனை யோசிக்க வைத்திருக்க வேண்டும். அவனுடைய அறைக்குள் ஓடிப்போய் யாருக்கோ போன் செய்தான். என்னையும் என்னுடைய காரையும் மாறி மாறி பார்த்துவிட்டு மறுமுனையில் இருப்பவருக்கு ஏதோ தகவல் தந்தான்.

எவன் வேண்டுமானாலும் வரட்டும். என்னை இங்கிருந்து போ என்று சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது. என் வாழ்க்கையில் ஜெனியை பார்க்க நான் எடுத்திருக்கும் இரண்டாவது முயற்சி இது. இதில் நிச்சயம் வெற்றி எனக்குத்தான் என கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டேன்.

செக்யூரிட்டியுடனான எனது காரசாரமான பேச்சு சத்தத்தை கேட்டு விட்டு பக்கத்து வீட்டில் இருந்த வேலையாட்கள் சிலர் யார் இவன் என எட்டிப் பார்த்து விட்டு சென்றனர்.

மார்புக்கு குறுக்கே கைகட்டி காரின் மீது சாய்ந்து கொண்டு நின்ற என்னிடம் ஓடி வந்தான் செக்யூரிட்டி.

“சார் உங்ககிட்ட பேசணும்னு சொல்றார்”

“எந்த சார்”

“உதய் சார். மேடமோட பிஆர்ஓ”

ஒரு வகையில் அந்த பிஆர்ஓ உடன் பேசுவதும் நல்லது தான். அப்படியே ஜெனியிடம் அவரை பேச சொல்லலாம். முடிந்தால் அவரிடமே ஜெனியின் நம்பரை வாங்கிக் கொள்ளலாம்.

செக்யூரிட்டியின் அறைக்குள் சென்று போன் ரிசீவரை காதில் வைத்தேன். மறுமுனையில் ஒரு ஆண் குரல்.

“ஹலோ மிஸ்டர்! உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு அங்க பிரச்சனை பண்றீங்க?”

“சார், என்னோட பேரு ஹரி. ஜெனியோட பிரண்ட். அவங்கள பாக்குறதுக்கு வந்திருக்கிறேன்”

“நீங்க அவங்க பிரண்டாக இருக்கலாம். அதற்காக அவங்களுக்கு இன்போர்ம் பண்ணாம, நீங்க எப்படி அங்க போகலாம்? செக்யூரிட்டிக்கு நானோ இல்ல மேடமோதான் விசிட்டர்ஸ் லிஸ்ட்  கொடுப்போம். அந்த லிஸ்டில் இல்லாத யாரையும் அவர் உள்ளே அனுமதிக்க மாட்டார்”

“ஒருவேளை ஜெனி மறந்திருக்கலாம். நீங்க அவங்களுக்கு கொஞ்சம் போன் பண்ண முடியுமா? இல்லனா எனக்கு அவங்க போன் நம்பரை கொடுங்க நான் பேசுகிறேன்”

“ஹலோ,இந்த மாதிரி வந்து நிக்கிற ஒவ்வொருத்தருக்கும் நான் அவங்களுக்கு போன் பண்ணனும்னா, ஒரு நாளைக்கு பத்து தடவ அவங்களுக்கு நான் போன் பண்ண வேண்டி இருக்கும். உங்களுக்கு ஐந்து நிமிஷம் டைம் தரேன் மிஸ்டர், அதுக்குள்ள போகலனா அவென்யூ செக்யூரிட்டீஸ் வருவாங்க” வேகவேகமாய் பேசிவிட்டு போனை துண்டித்தான் பிஆர்ஓ.

இவன் என்ன என்னை அவளின் ரசிக்க குஞ்சுகளில் ஒருவன் என நினைத்து விட்டானா? ஐந்து நிமிடம் இல்லை ஐந்து நாட்களே ஆனாலும் ஜெனியை பார்க்காமல் இங்கிருந்து போக போவதில்லை என மீண்டும் போய் என் கார் மீது சாய்ந்து கொண்டேன்.

அவன் கொடுத்த கெடு முடிந்து ஒரு மணி நேரம் ஆக போகிறது. மற்ற வில்லாவாசிகள் அந்தப்பக்கம் போகும் போதும் வரும் போதும் என்னை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டே சென்றனர்.

நேரம் மணி மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருவேளை இது ஜெனி ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வரும் நேரமாக கூட இருக்கலாம். எனவே அவளை பார்க்க நிச்சயம் வாய்ப்பு இருப்பதாகவே எனக்கு தோன்றியது.

செக்யூரிட்டி மீண்டும் ஒருமுறை என்னிடம் உதய் பேச விருப்பதாக கூறி வரச்சொல்லி போன் ரீசீவரை தந்தான்.

“நான் மேடம் கிட்ட பேசிட்டேன். அவங்க ஹரி என்ற பெயரில் நண்பர்கள் யாரும் இல்லை என சொல்லிட்டாங்க நீங்க அங்கிருந்து கிளம்பலாம்”

“நான் எப்படி உங்களை நம்புறது?”

“ஹலோ நான் அவங்களோட பர்சனல் அசிஸ்டன்ட் தான். இப்போதுதான் மேடம் கிட்ட போன்ல கேட்டேன். உங்கள யாருனே தெரியாதுன்னு சொல்லிட்டாங்க”

இவன் பொய் சொல்கிறான். அதெப்படி என்னிடம் முகவரி தந்து வீட்டிற்கு வரச் சொல்லியவள் என்னை தெரியாது என்று சொல்ல முடியும்.

ஒருவேளை ஏதேனும் ஒரு பெண்ணை ஜெனியை போல் பேச வைத்து கூட என்னை தெரியாது என்று சொல்ல வைத்து விடுவார்கள். ஆகவே நான் ஜெனியை பார்க்காமல் இந்த இடத்தை விட்டு கிளம்ப போவதில்லை என்பதை தீர்க்கமாக தெரிவித்தேன்.

என்னுடைய பிடிவாதம் மறுமுனையில் உதய் ஷர்மாவை கோபப்படுத்தி இருக்க வேண்டும்.

“முட்டாளே நீ நின்று கொண்டிருக்கும் இடத்தை சுற்றிலும் இரண்டு சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது பார்! அதன்மூலம் நான் உன்னை பற்றி சொன்ன உடனேயே ஜெனி உன்னை திரையில் பார்த்து விட்டு உன்னை யார் என்றே தெரியாது என்கிறார்கள். இப்போதும் கிளம்பவில்லை என்றால் நடப்பதே வேறு” என்று போனை துண்டித்தான் உதய்.

ஆம் அந்த இருபதடி நீள கேட்டின் வெளியே நடப்பதை கண்காணிக்க இருபுறமும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒருவேளை உதய் ஷர்மா சொல்வது உண்மையாக கூட இருக்கலாம். 

என்னை தெரியாது என்கிறாள். அவளும் என்னைப் போல நேற்று போதையில் இருந்திருப்பாளோ. ஒருவேளை இப்போதும் அவள் என்னை சிசிடிவி கேமரா மூலமாக பார்த்துக் கொண்டிருக்க கூடும்.

கேமராவில் நன்றாக நான் தெரியும்படி அதன் எதிரில் போய் நின்று கொண்டேன். ஹலோ சொல்வது போல் கையசைத்தேன். எம்பி எம்பி குதித்தேன்.

“ஜெனி ஹரி வந்திருக்கிறேன்! நேற்று நீ தானே என்னை வரச்சொல்லி இருந்தாய்! பப்பில் சந்தித்தோமே நினைவில்லையா!”

உரக்கக் கத்தினேன். சிசிடிவி கேமராவின் வழியே நான் சொல்வதை அவள் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்ற குருட்டு நம்பிக்கையில்.

அப்போது, நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் செக்யூரிட்டி ஓடி வந்து “கேமரா முன் நிற்காதே!” என்று கத்திகொண்டே என்னை பிடித்து தள்ளினான். இரண்டு அடிகள் தள்ளாடி பின்னே விழ இருந்த நான் ஒருவாறு சமாளித்து நின்றுகொண்டேன். 

அப்போது உதய் சொல்வது உண்மைதான். ஜெனி என்னை கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதை தவிர்ப்பதற்காகவே இந்த செக்யூரிட்டி என்னை தள்ளி விடுகிறான்.

வீராப்பாய் மீண்டும் அந்த இடத்திலேயே போய் ஜெனி ஜெனி என்று கத்திக் கொண்டு, எம்பி எம்பி குதித்தேன். இம்முறையும் என்னை தள்ள அருகில் வந்தான் செக்யூரிட்டி. ஆனால் நான் முந்திக் கொண்டேன். அவன் மார்பில் இரண்டு கையையும் வைத்து என்னுடைய முழு பலத்தையும் வைத்து தள்ளினேன்.

எகிறிப் போய் கீழே விழுந்த அவன் அப்படியே இரண்டு அடிகள் உருண்டான். இனி நிச்சயம் அவன் என் அருகில் வர பயப்படுவான் என்பதில் சந்தேகமேயில்லை. மீண்டும் நான் ஜெனி ஜெனி என்று கத்திக் கொண்டே கேமரா முன் வந்து நின்றேன்.

இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி கம்மென்று இருப்பாள் ஜெனி. ஒருவேளை இவற்றையெல்லாம் அந்த உதய் தான் பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.

தன் மேல் ஒட்டி இருந்த மண்ணை தட்டி விட்டுக் கொண்டே வந்த செக்யூரிட்டி, அப்படியே ஓரமாக ஒதுங்கிக் கொண்டான். சற்று நேரத்தில் ஒரு ஜீப் சர்ரென்று வந்து நின்றது. அதிலிருந்து கட்டுமஸ்தான அவென்யூ காவலாளிகள் வந்திறங்கினார்கள்.

அவர்களின் ஒருவரையும் நான் அவென்யூ நுழைவாயிலில் பார்க்கவில்லை. வந்தவர்களில் பராக்கிரமசாலியாய் இருந்த ஒருவன், என் பின்னந்தலையில் மின்னல் வேக அடி ஒன்றை வைத்தான்.

தலை குப்புற விழுந்தேன். என் மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. எழுந்திருக்க முயன்ற நேரத்தில் வேறொருவன் ஓடிவந்து  பூட்ஸ் காலால் என் வயிற்றில் உதைத்தான். அப்படியே சுருண்டு விழுந்தேன்.

பகுதி 8 (விரைவில்)

Leave a Comment