நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 6

திரையில் தோன்றுவதை போன்ற அதே பளபளக்கும் கேசம். வெள்ளை வெளேரென்ற தேகம். அழகான நெற்றி. எடுப்பான மூக்கு. ரோஜா இதழ் போன்ற உதடு. அதன் கீழே இருக்கும் மச்சம். 

“இத்தனை வருடங்களாக என் கனவில் மட்டுமே வந்திருந்த கனவு கன்னியின் முன்பா நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன்” என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இது கனவல்ல நிஜம் தான். 

திரும்பிப் பார்த்தேன் பவன் தற்போது அந்த இரண்டு பெண்களுடன் கண்டபடி ஆடிக் கொண்டிருந்தான். எங்கள் இருவரை தவிர எல்லோருமே அங்கு ஆட்டத்தில் படு பிஸியாக இருந்தனர்.

“நீங்கள் தனியாகவா வந்திருக்கிறீர்கள்” என்றேன். அவளுடன் ஆண் நண்பர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலுடன்.

“பிரண்ட்ஸோடு வந்திருக்கிறேன். அவங்க எல்லோரும் அதோ அங்க ஆடிக்கிட்டு இருக்காங்க பாருங்க” என்று அங்கே டான்ஸ் ஃப்ளோரில் ஆடிக் கொண்டிருக்கும் நான்கு பெண்களை காண்பித்தாள் ஜெனி.

“இப்போ என்ன படம் நடிச்சிட்டு இருக்கீங்க?” என்னையும் அறியாமல் அந்த கேள்வி என்  வாயிலிருந்து வந்து விட்டது, நான் ஏதோ அவளை பேட்டி எடுக்க வந்திருப்பவனை போல.

“ஒக்கசிவிரி உதயம்ன்னு ஒரு தெலுங்கு படம். ஜூன் மாதம் ரிலீஸ். நிரஞ்சன் ராவ் ஹீரோ. வேற ஏதாவது டீடைல் வேணுமா?” என்றபடி என்னை பார்த்து சிரித்தாள். நான் வெட்கத்தில் சற்று தலை குனிந்தேன்.

“நான் ஹரி” என்றேன். அப்படியே நான் வேலை பார்க்கும் கொரியன் கம்பெனியின் பெயரையும் சொல்லி வைத்தேன்.

“நல்லது” என்றபடி புன்னகைத்தாள்.

“நான் உங்களுடைய தீவிர ரசிகன்! எனக்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்கும்”

“தெரியும்”

“இல்ல, நீங்க நினைக்கிற மத்த ரசிகர்கள் மாதிரி இல்ல, நான் உங்களை ஆத்மார்த்தமாக, உயிருக்கு உயிராக நேசிப்பவன்”

“தெரியும்” 

எல்லாம் தெரிந்தவளை போல தலையை ஆட்டினாள் ஜெனி. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“எப்படி தெரியும்? என் தலையில் இவன் ஜெனியை காதலிப்பவன் என்றா எழுதி வைத்திருக்கிறது?”

“நீ என்னோட முதல் படத்தை பார்த்தவுடனே, ரொம்ப பிடிச்சு போயி என் மேல பைத்தியமா இருந்த, ஒரு தடவ நான் திருவண்ணாமலை கோல்ட் பேலஸ் திறப்பு விழாவிற்கு வந்தப்ப, நீ என்னை பார்க்க வந்து போலீஸ் கிட்ட அடி வாங்கி இருந்த, ஹா.. ஹா.. ஹா.. கூட்டமா இருந்தா, திரும்பி போக வேண்டியது தானே உன்னை யாரு வர சொன்னது?”

எனக்கு தலை கால் புரியவில்லை. அதெப்படி கூடவே இருந்து பார்த்தவள் போல் அந்த திறப்பு விழாவில் நான் அடி வாங்கியதை பற்றி சொல்லுகிறாள்.

“நான் போலீசில் அடி வாங்கியது எப்படி உனக்கு தெரியும்?”

“எனக்கு எல்லாம் தெரியும் ஹரி. நான் திரும்ப சென்னைக்கு போகும்போது நான் உன்னை பார்த்தேன், நீயும் என்னை பார்த்தவுடன் ஜெனி ஜெனி என்று கத்தினாயே நினைவில்லையா?”

“அப்போ! என்னை உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா? அது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்குமே!”

“நன்றாக நினைவிருக்கிறது ஹரி”

கண்ணை கசக்கி கொண்டேன். இங்கு நடப்பதெல்லாம் நிஜம்தானா இல்லை கனவா ஒன்றும் புரியவில்லை எனக்கு. திரும்பி பவனை பார்த்தேன். பவன் அந்த வானவில் பெண்கள் மீது தற்போது சாய்ந்து கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருந்தான்.

“அது மட்டும் இல்லாமல், நீ என்னை தேடி சாலிகிராமில் அலைந்ததும் எனக்கு தெரியும். போயும் போயும் ஒரு புத்தகத்தில் படித்தா என் வீட்டு முகவரியை தெரிந்து கொள்வாய்?”

“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்”

நான் ஏதேனும் மாயவித்தைகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேனோ என்ற அச்சம் எழுந்தது.

“நீ ஒரு முறை என் கனவில் வந்து என்னிடம் சொல்லி இருக்கிறாய். என் மேல் உனக்கிருக்கும்  காதலையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதி, அதை என்னிடம் கொடுப்பதற்காக சாலிகிராமில் அலைந்து திரிந்தாய் என்று”

“என்னது நான் உனக்கு கனவில் வந்தேனா”

“நான் உன் கனவில் வரும்போது, ஏன் நீ என் கனவில் வரக்கூடாதா”

தொடர்ச்சியான அறிவிப்புக்கு பிறகு ஒரு வழியாக டிஜே இசை நிறுத்தியிருந்தார். கடைசியாக ஒருமுறை ஹேஹே வென கத்திவிட்டு கூட்டம் தள்ளாடி தள்ளாடி கலைந்து செல்ல ஆரம்பித்தது.

“எங்கே அந்த காதல் கடிதம் ஹரி”

“அதை நான் பத்திரமாக என்னிடம்தான் வைத்திருக்கிறேன். மீண்டும் நாம் எப்போது சந்திக்கலாம்?”

அந்நேரத்தில் அவளுடைய நண்பர்கள் ஆட்டம் முடிந்து அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

“ஏன் நாளைக்கே நாம் சந்திக்கக் கூடாது”

“எங்கே சந்திக்கலாம்? உன்னுடைய போன் நம்பரை கொடு?”

“போன் மூலம் என்னை தொடர்பு கொள்ள முடியாது ஹரி. என்னுடைய எல்லா அழைப்புகளையும் என்னுடைய பிஆர்ஓ தான் எடுப்பான். அவனுக்கு தெரிய வேண்டாம். நீ நாளை என்னுடைய வீட்டிற்கே வந்து விடு”

“சரி, முகவரி?”

அவளை வா போகலாம் என்று அழைத்திருந்த நண்பர்களை ஒரு நிமிடம் காத்திருக்க சொன்னவள்  அவசர அவசரமாக அவளுடைய முகவரியை எனக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்.

“வில்லா எண் 7பி, எமரால்ட் கிராண்ட் அவென்யூ, பஞ்சாரா ஹில்ஸ். இதுதான் என்னுடைய வீட்டு முகவரி. நாளைக்கு நேராக வீட்டிற்கு வா ஹரி. மறக்காமல் அந்த காதல் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு வா” 

ஓடிப்போய் அவளுக்காக காத்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அந்த அரங்கை விட்டு டக்கென வெளியேறினாள்.

அதுவரை இறங்கி இருந்த போதை தற்போது கடகடவென தலைக்கு ஏறியது.

நீ எதை தேடிக்கொண்டிருக்கிறாயோ, அதுவும் உன்னையே தேடிக் கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை.

நானும் ஒருத்தியால் அதுவும் என்னுடைய கனவுக்கன்னி ஜெனியால் தேடப்பட்டு இருக்கிறேன் என்பதே எனக்கு கர்வமாக இருந்தது.

முதலில் அப்பாவிற்கு போன் போட்டு மணப்பெண் தேடும் முயற்சியை கைவிட சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

நடிகை என்பதால் ஒருவேளை வீட்டில் அம்மா ஒத்துக் கொள்ள மாட்டார்களோ என்ற சந்தேகமும் மெல்ல எட்டிப் பார்த்தது. ச்சே ச்சே இவ்வளவு அழகான மருமகள் என்றால் கசக்குமா அம்மாவுக்கு என யோசனையில் ஆழ்ந்திருந்த என்னை உலுக்கினான் பவன்.

“எல்லோரும் கிளம்பி விட்டார்கள், வா போகலாம்” என்றான்.

எனக்கு எழுந்து நின்றால் தலை சுற்றுவதை போல் இருப்பதாக சொன்னேன் பவனிடம். அவன் என்னை கைத்தாங்கலாக ஹோட்டலை விட்டு வெளியே கூட்டி சென்றதுடன் அப்படியே ஒரு டாக்ஸி பிடித்து என்னை நான் தங்கி இருக்கும் சில்வர் ப்ரீஸ் மெடோஸுக்கு அனுப்பி இருந்தான்.

⟢ ⟢ ⟢

நேற்று இரவு குடித்திருந்ததில் மறுநாள் எழுந்திருக்கவே மதியம் ஆகிவிட்டது. என் மண்டையை பிளந்து கொண்டு இருக்கும் தலைவலியை போக்க ஒரு வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக் கொண்டு பஞ்சாரா ஹில்ஸ் புறப்பட தயாரானேன்.

லைட் க்ரீம் நிறத்தில் டிசைனர் லைன்ஸ் இருக்கும் டீ ஷர்ட்டும் அதற்கு பொருத்தமான காக்கி நிற ஜீன்சும் பூமா ஷூவும் அணிந்து கொண்டேன்.

“ஒரு நடிகையை பார்க்க போகும் நான் ஹீரோ மாதிரி இருக்க வேண்டாமா?” என்று, எனக்கு தெரிந்த அனைத்து ஒப்பனைகளையும் செய்து கொண்டேன். சில்வர் ப்ரீஸ் மெடோஸில் இருந்து எனது கார் பஞ்சாரா ஹில்ஸ் நோக்கி புறப்பட்டது.

பவன் ஏன் ஆபீஸ் வரவில்லை என்று கேட்டு ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தான். இன்னும் சற்று நேரத்தில் ஜெனியுடன் ஒரு செல்பி எடுத்து உனக்கு அனுப்பி இதற்காகத்தான் நான் வரவில்லை என்று சொல்லப் போகிறேன்.

நேற்று நான் அவனிடம் எவ்வளவு சொல்லியும் அவன் நம்பவில்லை. நான் போதையில் ஜெனியை பற்றி உளறுவதாகவே நினைத்து விட்டான்.

என் மார்பு பகுதியில், டீ-ஷர்ட்டின் மேல் அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ஜெனிக்காக நான் எழுதிய காதல் கடிதம் பத்திரமாக எனது இதயத்திற்கு அருகே இருந்தது.

இன்று அவளைப் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது நிச்சயம் அவள் இதழ்களில் முத்தம் வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அதை கைவிட்டேன்.

கார் பயணத்தின் போது நான் சாலிகிராமத்தில் ஜெனியை தேடி அலைந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒருவேளை இந்த முகவரியும், கடந்த முறை போலவே ஒரு சலுனுக்கோ அல்லது ஏதேனும் ஒரு பியூட்டி பார்லருக்கோ கொண்டு போய் விட்டால் என்ன செய்வது.

ச்சே நிச்சயம் இருக்காது. யாரோ ஒரு பேடிப்பயல் டுபாக்கூர் முகவரிகளை தொகுத்து நடிகர் நடிகையின் முகவரிகள் என்ற பெயரில் விட்டிருக்கிறான். அதைப்போய் நான் ஜெனியே தன் வாயால் சொன்ன முகவரியோடு ஒப்பிடுவது தவறு.

அவள் காதலை நேற்று அவள் கண்களில் நான் பார்த்தேன். நான் வேறு யாரோ ஒருவனை கரம் பிடிக்கும் முன் “வா, வந்து கூட்டி செல்” என்பது போன்ற ஒரு ஏக்கம் இருந்தது அவளிடம். 

பஞ்சாரா ஹில்ஸ் வரைபடத்தை பார்த்துக் கொண்டே வந்ததில், எமரால்ட் கிராண்ட் அவென்யூவை கண்டுபிடித்து விட்டேன். அவென்யூ முகப்பில் மிகப்பெரிய நுழைவாயில் ஒன்று இருந்தது. அதனுள் செல்லும் வாகனங்களை கருப்பு சீருடை அணிந்த வாயிற்காவலர்கள் நன்றாக சோதித்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

என்னை எதிர்கொண்ட காவலாளி ஒருவன் என்னுடைய காரின் முகப்பு கண்ணாடியில் அனுமதி சீட்டு போன்று எதாவதொன்று ஒட்டப்பட்டிருக்கிறதா என முதலில் ஆராய்ந்தான். அப்படியே ஏதும் இல்லையென்பதால் என்னை விசாரிக்க ஆரம்பித்தான்.

“வில்லா நம்பர்”

“ 7பி”

“ஓனர் ஆர் கெஸ்ட்”

‘கெஸ்ட்”

விருந்தினர் என்று சொன்னதன் பின்பு காவலாளி என்னையும் என் காரையும் பார்த்துவிட்டு “அங்கு யாரை பார்க்க போகிறீர்கள்?” என்றான்.

“ஜெனி” என்றேன் நான். பாவம் அவனுக்கு தெரியாது நான் ஜெனியின் காதலன் என்று.

திடீரென என் அடையாள அட்டையை காண்பிக்குமாறு நிர்ப்பந்தித்தான், கூடவே எங்கிருந்து வருகிறேன்? வந்திருப்பதற்கான நோக்கம்? போன்றவற்றை எல்லாம் ஏதோ ஒரு காவல் அதிகாரியை போல கேட்க ஆரம்பித்தான்.

நான் பதட்டப்படாமல் என்னுடைய கொரியன் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி என்னிடம் இருந்த கம்பெனி அடையாள அட்டையை நீட்டினேன்.

அவனுடைய ஏதோ ஒரு சந்தேகத்தை என்னுடைய கொரியன் கம்பெனி அடையாள அட்டை தீர்த்து வைத்திருக்கும் என நினைக்கிறேன். அடையாள அட்டையை வாங்கி பார்த்தவன் “சரி போகலாம்” என்று என்னை அவன்யூவின் உள்ள செல்ல அனுமதித்தான்.

உள்ளே தெருக்கள் விசாலமாகவும் ஆனால் ஆள் நடமாட்டம் குறைவாகவும் இருந்தது. ஜெனியின் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் எனக்கு இருக்கவில்லை. நான் காரை சரியாக 7பி வில்லா முன்பு போய் நிறுத்தினேன்.

சந்தேகமே இல்லை அது ஜெனியின் வீடு தான். சாதாரண வீடு அல்ல பங்களா என்று தான் சொல்ல வேண்டும். வீட்டின் மொத்த பரப்பளவு குறைந்தது ஐந்தாயிரம் சதுர அடிகளாவது இருக்க வேண்டும்.

வீட்டின் முன்பு மோட்டாரால் இயங்கக்கூடிய கேட் ஒன்று இருபது அடிக்கு போடப்பட்டிருந்தது. அதன் அருகே சிறிய அளவிலான திறந்து மூடக்கூடிய கேட் ஒன்றும், அதை ஒட்டி காவலாளிக்கான அறை ஒன்றும் இருந்தது.

நிச்சயம் அந்த கேட் என் காரை பார்த்ததும் திறக்கப் போவதில்லை என்று தெரியும். அறையினுள் இருந்த செக்யூரிட்டி என்னையும் என் காரையும் ஏற இறங்க பார்த்தான்.

காரில் இருந்து கொண்டே அவனுக்கு கட்டளை இடுவது போன்ற தொணியில் “ஓபன் த கேட்” என்றேன். அதற்கு அவன் மதியாமல் என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்ததால், காரில் இருந்து இறங்கி போய் “ஓபன் பண்ணுங்க! ஜெனியை பார்க்க வந்திருக்கிறேன்” என்றேன் உரிமையுடன்.

“யார் நீங்க?”

“ஜெனியோட பாய் பிரண்ட்”

“மேடம் வீட்ல இல்ல. அவங்க வீட்ல வச்சு யாரையும் பார்க்க மாட்டாங்க” என்று என்னை சந்தேகத்துடன் பார்த்தான்.

“அவன் மேடம் வீட்ல இல்லை” என்று சொன்னதுமே நான் ஒருவித நிம்மதி பெருமூச்சு அடைந்தேன். இது அவள் வீடு தான். நான் ஒன்றும் குடித்துவிட்டு பவனிடம் உளரவில்லை. செக்யூரிட்டியை பரிதாபமாக பார்த்தேன். நான் யார் என்று தெரிய வரும்பொழுது, பாவம் அவன் எத்தனை முறை என்னிடம் மன்னிப்பு கேட்க போகிறானோ.

Leave a Comment