நைட் கிளப் அரங்கின் விதிமுறைப்படி பெண்கள் ஆண் துணை இல்லாமல் வரலாம். ஆனால் அப்படி பெண் துணை இல்லாமல் வரும் ஆணை அனுமதிக்க மாட்டார்கள். இந்த விதிமுறை எல்லாம் நன்றாக தெரிந்திருந்தும் பவன் என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தான்.
பவனின் திட்டப்படி நாங்கள் அரங்கின் நுழைவாயில் அருகே காத்திருக்க தொடங்கினோம். நான் அங்கே உள்ளே நுழையும் ஜோடிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். சில ஜோடிகள் தனியாகவும் சிலர் நண்பர்களுடனும் வந்திருந்தனர்.
ஐந்து பெண் நண்பர்களுடன் வந்திருந்த ஒருவனை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். அவனோ அங்கிருக்கும் பவுன்சர்களுக்கு இணையான புஜபலத்தோடு இருந்த அவன் கழுத்தில் தடிமனான தங்கச்சங்கிலி ஒன்று மின்னியது.
பவன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது எங்களைப் போலவே ஆண் துணை இல்லாத இரண்டு பெண்கள். அவர்களுக்கான நுழைவு சீட்டை நாங்கள் எடுத்து விடுவோம். அவர்கள் எங்களோடு உள்ளே வந்தால் மட்டும் போதும்.
உள்ளே சென்ற பிறகு, அவர்கள் வேறு நாங்கள் வேறு என பிரிந்து விடலாம். இதுதான் இங்கு நடைமுறையில் இருக்கும் பெண் துணை இல்லாமல் வருபவர்களுக்கான குறுக்கு வழி.
ஒரு ஜோடிக்கான நுழைவு கட்டணம் பத்தாயிரம் ரூபாய். விலை அதிகம் என்பது ஒரு புறம் இருந்தாலும், எனக்கு “அப்படி தனியாக வரும் பெண்களை எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறோம்?” என்று புரியாமல் இருந்தது.
“யார் நீ? எதற்காக எனக்கு பணம் கொடுக்க வேண்டும்?” என்று யாராவது கோபப்பட்டால் என்ன ஆவது என்ற விசனத்துடன், அங்கே அரைக்கை சட்டை அணிந்து புஜ பலத்தை காட்டிக் கொண்டு நிற்கும் பவுன்சர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அங்கு வரும் எல்லா பெண்களுமே நன்றாக ஒப்பனை செய்து கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார்கள். அதில் யாரேனும் ஒருவர் நடிகையாக கூட இருக்கலாம். நேரில் பார்த்தால் அடையாளம் கண்டுபிடிப்பது சற்று கடினம் என்று சொல்லியிருந்தான் பவன்.
அப்படியே, அங்கு வரும் பெண்கள் எத்தகைய கவர்ச்சியோடு வந்தாலும், அவர்களின் அந்தரங்க பாகங்களை ஏறெடுத்தும் பார்க்க கூடாது என்றதொரு கண்டிப்பான உத்தரவையும் போட்டிருந்தான்.
அங்கிருக்கும் பவுன்சர்கள் எங்களை சந்தேகப்படாமல் இருப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை அது. பவுன்சர்கள் ஜோடிகளை உள்ளே அனுப்ப ஒவ்வொரு முறை கதவைத் திறந்து மூடும் போதும், உள்ளே அதீத சத்தத்துடன் இசை ஒலித்துக் கொண்டிருப்பதும், அதற்கு உள்ளிருந்தவர்கள் மது அருந்திக் கொண்டே நடனமாடுவதும் தெரிந்தது.
இந்த பூமிப்பந்தில் எங்கள் இருவரையும் தவிர எல்லோருக்கும் ஜோடிகள் இருப்பது போல தோன்றியது எனக்கு. அரை மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் அப்படி எவரும் கிடைக்காததால் “சரி கிளம்பலாம்” என்று நாங்கள் புறப்பட தயாரானோம்.
சரியாக அந்த நேரம், வானவில் ஜோடிகள் போலிருந்த இருவர் பெண்கள் அருகில் இருந்த லிப்ட்டில் ஒன்றில் இருந்து வெளியே வந்தனர். அதில் பாய்கட் வெட்டி இருந்த பெண் ஒருத்தி எங்களை பார்த்ததும் நாங்கள் ஆள் கிடைக்காமல் நிற்பவர்கள் என்று புரிந்து கொண்டாள்.
அவள் நேராக பவனிடம் வந்து “ஆர் யு கைஸ் லுக்கிங் பார் என்ட்ரி பார்ட்னர்?” என்றாள்.
“ஆமாம்!” என்றவன் ஒரு நொடியும் தாமதிக்காமல் ஓடிப்போய் இரண்டு ஜோடிகளுக்கான நுழைவு சீட்டை வாங்கி வந்தான்.
அப்படியே நாங்கள் அனைவரும் அரங்கின் உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
உள்ளே நுழைந்ததும் வானவில் ஜோடி மூலையில் இருந்த ஒரு டேபிளை தேடிப்பிடித்து அதை சுற்றி அமர்ந்து கொண்டது.
நாங்கள் நேராக பார் கவுன்ட்டரிலிருந்து விஸ்கி ஊற்றப்பட்டிருந்த இரண்டு கிளாஸ்களை எடுத்துக்கொண்டு கூட்டத்தின் நடுவே போய் அமர்ந்து கொண்டோம்.
காதை பிளக்கும் மேற்கத்திய இசை ஒன்றுக்கு அங்கிருந்தோர் எல்லாம் நடனமாடிக் கொண்டிருந்தனர். இடையிடையே ஹிந்தியில் பாடல்களையும் ஒலிக்க விட்டிருந்தனர். கண்ணை பறிக்கும் வண்ண விளக்குகளை வேறு இங்கும் அங்கும் சுழன்றன.
கவர்ச்சியை ரசிப்பதில் வெளியில் தான் கட்டுப்பாடுகள் உள்ளே அதற்கு தடை ஒன்றும் இல்லை என்பது போல் இருந்தது. எனக்கு அங்கு வந்திருக்கும் அத்தனை பெண்களும் நடிகையைப் போலவே தோன்றினார்கள்.
பவன் தூரத்தில் இருந்த ஒரு பெண்ணை ஜாடையில் கட்டி “அவள் யார் என்று தெரிகிறதா? அவள்தான் ஷர்மி!” என்றான், எனது பதிலுக்கு காத்திராமல்.
ஹைதராபாத்திற்கு நான் வந்து மூன்று வருடங்கள் ஆகி இருந்தாலும், நான் பார்த்திருக்கும் தெலுங்கு படங்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமானது. பார்த்தவுடன் கண்டுபிடிக்கும் அளவிற்கு எந்த நடிகையும் என் நினைவில் இல்லை.
என்னால் எப்படிப்பட்ட நிலையிலும் அடையாளம் காணக்கூடிய ஒரே நடிகை ஜெனிதான். ஹைதராபாத் வந்த பிறகு நான் ஜெனி பற்றிய நினைவுகள் எல்லாவற்றையும் தவிர்த்து விட்டேன். நான் சேகரித்து வைத்திருந்த ஜெனியின் புகைப்படங்கள் புத்தகங்கள் என எதுவும் தற்போது என்னிடம் இல்லை.
என்னிடம் பத்திரமாய் இருப்பது அவளுக்காக நான் எழுதிய காதல் கடிதம் மட்டும்தான். அது “ஃபார் ஜெனிஸ் ஐஸ் ஒன்லி” என்று எழுதப்பட்ட பிங்க் நிற உறையில் பத்திரமாய் இருக்கிறது.
“இந்த மாதிரியான இடத்திற்கு ஒருவேளை ஜெனி வந்தாள் யாருடன் வருவாள், அவளோடு கிசுகிசுக்கப்படும் அந்த இளம் இசையமைப்பாளர் உடன் வருவாளா? அல்லது தன்னுடைய தோழிகளுடன் வருவாளா?” என்ற யோசனையில் மூழ்கிக் கொண்டு இருந்த என்னை சீண்டினான் பவன்.
“ஹேய், அங்க பார் நம்ம என்ட்ரி பார்ட்னர்ஸ் டான்ஸ் ஆடுறாங்க!” என்றான்.
அவன் கைக்காட்டிய திசையில் பார்த்தேன். அங்கே அந்த வானவில் ஜோடிகள் ஜோராக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். பாய்கட் வெட்டி இருந்த பெண் தன்னுடைய பெண் தோழியின் கையைப் பிடித்து இசைக்கேற்றபடி நளினமாக ஆடினாள்.
கூட்டத்தில் ஆடிக் கொண்டே எங்கள் அருகே வந்த அந்த ஜோடி எங்களை அடையாளம் கண்டு கொண்டது.
பாய்கட் பெண் சட்டென “யூ வானா டான்ஸ்? ஜாயின் வித் அஸ்” என்றாள் எங்களை பார்த்து.
அதற்காகவே காத்து கிடந்தது போல் நானும் பவனும் அவர்களுடன் நடனத்தில் இணைந்து கொண்டோம்.
துள்ளல் இசைக்கு ஏற்றபடி வேகத்தை கூட்டியும், குறைத்தும் ஆடினோம். ஆட்டத்தின் போது சிலமுறை அவ்விரு பெண்களில் ஒருத்தி என் கழுத்தை கட்டிக்கொண்டு ஆடினாள். நானும் சில சமயம் அவள் இடுப்பை பிடித்து கொண்டு ஆடியிருந்தேன்.
அரங்கிற்குள் வரும் முன்னர் இருந்த விரசம் தற்போது காணாமல் போயிருந்தது. அப்போதுதான் அறிமுகம் ஆகியிருந்த பெண்களுடன் நான் உரசிக் கொண்டு ஆடி இருந்தாலும், ஆனந்ததில் நான் திளைத்ததை தவிர, வேறு எந்த விதமான உணர்ச்சியும் எனக்குள் எழவில்லை.
நான் போதையில் சூஃபிகளின் சுழல் நடனத்தை போல் அப்போது ஆடியதாக பின்னொரு நாளில் பவன் என்னிடம் சொல்லி சிரித்தான்.
நள்ளிரவு வரை எங்கள் நடனம் தொடர்ந்தது. இடையிடையே சற்று ஓய்வெடுத்துக் கொண்டோம். பாய்கட் பெண் தான் ஒரு பேஷன் டிசைனர் என்றும் பல்வேறு தெலுங்கு படங்களில் பணிபுரிந்து இருப்பதாகவும், அருகே இருப்பவள் தன்னுடைய தோழி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
நாங்கள் இருவரும் வேலை பார்க்கும் கொரிய நிறுவனத்தின் பெயரையும் அப்படியே அமெரிக்கா போவது பற்றியும் கூறினோம். பாய்கட் பெண் என்ன நினைத்தாலோ தெரியவில்லை எங்கள் இருவரின் எண்களையும் வாங்கிக் கொண்டாள்.
மீண்டும் கையில் மது கோப்பைகளுடன் எங்கள் ஆட்டம் தொடர்ந்தது.
வெகு நாளாய் பழகியவர்களைப் போல போதையில் பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம். பவன் செட்-அப் பாக்ஸ் பற்றியெல்லாம் அந்த போதையிலும் விளக்கிக் கொண்டிருந்தான்.
நானோ ரஷ்ய பாணியில் எப்படி வோட்கா குடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் எடுத்திருந்தேன்.
இன்னும் பதினைந்து நிமிடத்தில் டான்ஸ் ஃப்ளோர் மூடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து நாங்கள் ஓடிச்சென்று ஆளுக்கொரு மதுக்கோப்பையை கையில் எடுத்துக் கொண்டோம். மீண்டும் எங்களின் ஆட்டம் தொடர்ந்தது.
டான்ஸ் ஃப்ளோர் மூடப்பட இருப்பதால், ஓய்வு எடுத்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் இறுதிக்கட்ட ஆட்டத்தில் இறங்கி இருந்தார்கள். கூட்ட நெரிசலில் அந்த பவனும் அந்த வானவில் பெண்களும் என்னை விட்டு விலகி எங்கோ போய் ஆடிக் கொண்டிருக்க, நானோ வேறொரு கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தேன்.
சளைக்காமல் ஆடிக் கொண்டிருந்த நான் சற்று தலை சுற்றுவதை போல் உணர்ந்தேன். போதை ஏறி வெறியோடு ஆடிக் கொண்டிருக்கும் கூட்டம் இது. இதில் நான் ஏதேனும் மயக்கம் போட்டு விழுந்தால் கருணை காட்டாது.
ஏறி மிதித்து என் மீதும் தயங்காமல் ஆடிக் கொண்டிருக்கும் என உள்ளுணர்வு எச்சரிக்க, அப்படியே ஒரு ஓரமாய் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டேன்.
கண்கள் இருண்டு எதிரே இருந்த டேபிளின் மீது தலை சாய்த்த என்னை அருகில் வந்தமர்ந்த பெண் ஒருத்தி “ஆர் யூ ஆல்ரைட்?” என்று உலுக்கினாள்.
“யார் அந்த பெண்?” என தலையை தூக்கி பார்த்தேன். அவள் பார்ப்பதற்கு ஜெனியை போலவே இருந்தாள். ஆனால் அவளுக்கு உதட்டுக்கு கீழே இருக்கும் மச்சம் இல்லை.
“போதையில் யாரைப் பார்த்தாலும் எனக்கு ஜெனியை போலவே தோன்றுகிறது” என்று மீண்டும் மேசை மேல் தலை சாய்த்தேன். அந்த பெண் என் கன்னத்தில் லேசாக தட்டி எழுப்பினால். கண் விழித்துப் பார்த்தேன். அவள் கையில் ஒரு கண்ணாடி டம்ளரை வைத்துக் கொண்டு அதை என்னை குடிக்கும்படி கட்டாயப்படுத்தினாள்.
தொண்டை வறண்டு போயிருந்த இருந்த நான் அதை வாங்கி லபக் லபகென அதில் பாதியை ஒரே மூச்சில் குடித்து தீர்த்தேன்.
என் அருகில் அமர்ந்திருந்த பெண்ணை நன்றாக உற்று பார்த்தேன். அவள் அச்சு அசல் ஜெனியை போலவே இருந்தாள்.
“யார் நீங்கள்? எதற்கு ஜெனியை போலவே இருக்கிறீர்கள்?” என்றேன். லைம் சோடா குடித்ததில் தலைசுற்றல் சற்று குறைந்தது போல் இருந்தது.
“நான் ஜெனியை போல இருப்பவள் அல்ல. நான் ஜெனியே தான்!” என்றாள் அவள்.
கடவுளே நான் ஜெனியிடமா பேசிக் கொண்டிருக்கிறேன். என்னால் நம்ப முடியவில்லை. நான் போதையில் இருப்பதால் யாரோ விளையாடுவதாக நினைத்தேன்.
“எங்கே உனது உதட்டோர மச்சம்?” கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்றைக் கேட்டு விட்டதாகத் தோன்றியது எனக்கு.
“ஹேய் முட்டாள்! திரையில் காண்பதை எல்லாம் நீ இன்னமும் உண்மை என்றா நம்பிக் கொண்டிருக்கிறாய்?” என்று சிரித்துக் கொண்டே சொன்னவள் தன்னருகே வைத்திருந்த கைப்பையிலிருந்து கண்மை இடும் பேனா ஒன்றை வெளியே எடுத்து அதனால் உதட்டுக்கு கீழே ஒரு பொட்டொன்றை வைத்தாள். அது பார்ப்பதற்கு மச்சம் போலவே இருந்தது.
“இப்போவாது நம்பிக்கை வந்ததா நான்தான் ஜெனி என்று?” என்று சிறிது நேரம் கண்ணாடியில் முகத்தை பார்ப்பது போல் என்னை பார்த்தாள்.
மீதம் இருந்த லெமன் சோடாவையும் எடுத்து குடித்து தீர்த்தேன் நான். போதை மயக்கம் காணாமல் போயிருந்தது. அவளை நன்றாக பார்த்தேன். ஆமாம்! அவள் ஜெனியே தான்.