அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்ததும் அலுவலகத்தின் வெளியே அவளுக்காக காத்திருந்தேன். நண்பர்களோடு வெளியே வந்தவள், நேராக போய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள். என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அவளது இயந்திரத்தனமான நடத்தையால் நான் வெகுவாக குழம்பிப் போனேன். “சரி நாளை நேரில் பேசிக் கொள்ளலாம்” என இருந்த எனக்கு மறுநாளும் அதிர்ச்சியாய் இருந்தது. அவளை என்னால் நெருங்க கூட முடியாத படி பார்வையால் நெருப்பை அள்ளி கொட்டினாள்.
அவள் என் மீது கோபமாக இருக்கிறாள் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். என் தலை வெடித்துவிடும் அளவிற்கு யோசித்து பார்த்துவிட்டேன். என்னால் அப்படி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நானே வலிய போய் அலுவலக வேலை சம்பந்தமாக ஏதாவது பேச முயன்றாலும் பத்து கேள்விகளுக்கு ஒன்று என்ற வீதத்தில்தான் பதில் சொல்வாள். அந்த பதிலும் அதிகபட்சமாக மூன்று வார்த்தைகளுக்குள் இருக்கும்.
“உண்மையில் காயத்ரி என்னிடம் அன்பாக பழகி இருந்தாளா? அல்லது ஜெனியை மறப்பதற்கு நானே அப்படி கற்பனை செய்து கொண்டேனா?” என்றெல்லாம் சந்தேகம் வந்தது எனக்கு.
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவளை இடைமறித்து பேச முயன்றதற்கு “யார் நீ? நான் எதற்காக உன்னிடம் பேச வேண்டும்?” என்றாள் காட்டமாக. பேருந்துக்காக காத்திருந்தவர்களில் சிலர் என்னை முறைத்து பார்த்துவிட்டு திரும்பி கொண்டனர்.
வாழ்க்கையில் என்னை யாரும் இதுவரை வெறுத்து ஒதுக்கியது இல்லை. அதுவும் என்னை பார்த்தாலே தீட்டு என்பது போல் திரும்பி கொள்பவர்களை நான் கற்பனையில் கூட நினைத்து பார்த்ததில்லை.
எல்லோரிடமும் பேசி பழகி அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் ஒருத்தி என்னை பார்த்ததும் திரும்பிக் கொள்வது ஏதோ நவீன தீண்டாமையை போல இருந்தது.
ஒருவனுடைய இருப்பை நிராகரிப்பதே அவனுக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச அவமானம்.
அந்த அவமானத்தை மூட்டை மூட்டையாய் என் முதுகில் சுமந்தபடி ஆறு மாதங்கள் அங்கே அவளுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தேன்.
என்னுடைய தன்னம்பிக்கை எல்லாம் காற்றோடு காற்றாக கரைந்து போய் தாழ்வு மனப்பான்மை என்னும் புதை மணலில் சிக்கிக் கொண்டேன்.
வருடாந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு அலுவலகத்தில் பெரும்பாலோனோர் விழா அரங்கிற்கு சென்றிருந்தனர். நாங்கள் வேலை பார்க்கும் மூன்றாவது தளத்தில் என்னையும் காயத்ரியையும் தவிர வேறு ஒருவரும் இல்லை.
இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு முடிவு கட்டி விடுவது என விறுவிறுவென்று அவள் அருகே சென்றேன். “காயத்ரி! என்னடி ஆச்சு உனக்கு!” என்றபடி அவள் கையை பிடித்து இழுத்தேன்.
கையை உதறி எழுந்தவள் “பளார்” என்று என் கன்னத்தில் ஒன்று வைத்தாள்.
⟢ ⟢ ⟢
ஊர்க்காரர்களுக்கு அசிங்கப்பட்டு ஊரை விட்டு ஓடுவது போல. அந்த வருடாந்திர ஆண்டு விழா நாளே அந்த அலுவலகத்தில் என்னுடைய கடைசி நாளாகிப் போனது.
வீட்டில் நான் இனிமேல் அங்கு வேலைக்கு போக முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி விட்டேன். அம்மா ஆயிரம் தடவை கேட்டிருப்பாள் அங்கே யாரிடமாவது ஏதாவது பிரச்சனையா என்று. நான் வாய் திறக்க மறுத்து விட்டேன்.
காயத்ரி தவிர மற்ற அனைத்து நபர்களும் வீட்டிற்கு போன் செய்தார்கள். உடம்பு சரியில்லை என்றும், என்னால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை என்றும் பதில் சொல்லியிருந்தேன்.
அங்கே நான் மூன்று வருடத்திற்கு வேலை பார்க்க வேண்டும் என்று கம்பெனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக கம்பெனியின் மனிதவள பிரிவிலிருந்து வீட்டிற்கு போன் செய்தார்கள். உங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று போனை துண்டித்தேன்.
வீட்டிற்கு வாரத்துக்கு ஒரு முறை கடுதாசி அனுப்பி நான் வேலைக்கு வர வேண்டும் என மிரட்டி பார்த்தார்கள். அப்பா இந்த லெட்டரை எல்லாம் தூக்கிக்கொண்டு இனிமேல் வீட்டுக்கு வர வேண்டாம் தபால்காரரிடம் கடிந்துகொண்டார்.
அந்த கம்பெனியில் சேரும் முன்னர் “இது என்ன ஐடி கம்பெனியா?” என்று அப்பா கேட்டதற்கு “இல்லை ஐடி மாதிரி” என்று சொல்லியிருந்தேன்.
தற்போது நான் வேலையிலிருந்து நின்றதற்கான காரணத்தை பற்றி அவர் ஒன்றும் கேட்கவில்லை. “இனியாவது ஒரு ஐடி வேலையாய் தேடு”என்று மட்டும் அறிவுரை சொல்லி இருந்தார்.
எனக்கு அந்த மன உளைச்சலில் இருந்து மீண்டு வர ஏறக்குறைய ஒரு வருடம் ஆனது. அடிக்கடி ஜெனி என்னை வந்து ஆறுதல் படுத்துவது போல நான் கற்பனை செய்து பார்ப்பேன். அந்த கற்பனை என்றாலும் எனக்கு அது கற்பனை சுகம் அளித்தது.
ஒரு நாள் ஜெனியிடம் “ஏன் காயத்ரி என்னிடம் இப்படி நடந்து கொண்டாள்? அதற்கு விடை தெரியாமல் என் தலையே வெடித்து போல் இருக்கிறது!” என்றேன்.
அதற்கு அவள் தான் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவளுடைய தெருவில் நாய்க்குட்டி ஒன்று இவள் பள்ளியில் இருந்து வரும் போதெல்லாம் வாலாட்டிக் கொண்டு நிற்கும் என்றும், அப்படி ஏற்பட்ட பழக்கத்தில் தினமும் பள்ளியில் இருந்து வரும் பொழுது சில பிஸ்கட்டுகளை வாங்கி வந்து அந்த நாய்க்குட்டிக்கு கொடுத்து வந்ததாகும் சொன்னாள்.
ஆனால் அதே நாய்க்குட்டி அந்த தெருவில் நண்பர்களுடன் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்தபோது தன்னை துரத்தி வந்து காலில் கடித்து விட்டதாகவும் கூறினாள்.
இறுதியாக “நான் ஒருபோதும் உன்னை போல் எதற்காக அந்த நாய்க்குட்டி என்னை கடித்தது?” என்று நினைத்து நினைத்து மண்டையை உடைத்துக் கொண்டதில்லை என்றாள்.
⟢ ⟢ ⟢
மாறிக்கொண்டே வரும் இவ்வுலகில் எதுவும் நிலையானது அல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு வரை பயன்பாட்டின் உச்சத்தில் இருந்த ஒரு சாதனம் இன்று ஓரங்கட்டப்பட்டு இருக்கலாம். அதற்கு தொழில்நுட்ப கருவிகளும் விதிவிலக்கல்ல.
உதாரணத்திற்கு காம்பெக்ட் டிஸ்க்குகள். இன்று காம்பெக்ட் டிஸ்க்குகளை மியூசியத்தில் கூட பார்க்க முடியாது. நானே நூற்றுக்கும் மேற்பட்ட காம்பெக்ட் டிஸ்க்குகளை தூக்கி குப்பையில் வீசி இருக்கிறேன்.
காலத்தின் ஓட்டத்தில் மேம்பட்ட தொழில்நுட்பம் ஒன்று வந்து பழையதை விழுங்கி கொள்கிறது.
அம்மாதிரியான மறைந்து போனதொரு தொழில்நுட்பக் கருவிதான், தொலைக்காட்சியில் இணைத்து பார்க்கக்கூடிய செட்-அப் பாக்ஸ். இன்று இருக்கும் ஓடிடி சாதனங்களுக்கும், ஸ்மார்ட் டிவிகளுக்கும் செட்-அப் பாக்ஸ் தான் முன்னோடி.
அந்த செட்-அப் பாக்ஸ் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கும், பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முழு நேர பணியாளர் நான். ஹைதராபாத் கச்சிபௌலியில் இருக்கும் மென்பொருள் பூங்காவில் ஏழாவது மாடியில் இருந்தது எங்கள் அலுவலகம்.
எங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுகள் எல்லாம் உலகத்தின் தலைசிறந்த நிறுவனங்களில் நடத்தப்படுவதை போன்று இருந்தாலும் சம்பளம் என்பது சொற்ப அளவில்தான் கிடைக்கும்.
அவ்வளவு கடினமான தேர்வுகளை எல்லாம் கடந்து நிறுவனத்தில் சேர்பவர்களுக்கு சம்பளத்தை குறைத்து அதற்கு பதிலாக கம்பெனியின் பங்குகளை வாரி வாரி கொடுப்பார்கள்.
கம்பெனி இன்னும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்காததால் பங்குகளின் மதிப்பு என்பது கிட்டத்தட்ட செல்லாக்காசு தான். அந்த செல்லாக் காசுகள் கூட மூன்று வருடங்கள் அந்நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே ஒருவருக்கு கிடைக்கும்.
மற்ற கம்பெனிகள் எல்லாம் சம்பளத்தை கை நிறைய கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் எங்கள் கம்பெனி மட்டும் சம்பளத்தை காக்காய் கடி கடித்து கொடுத்துக் கொண்டிருந்தது.
ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணிநேரமாவது வேலை பார்க்க வேண்டி வரும். வார இறுதியில் ஓய்வு கிடைக்கும் என்பது நிச்சயம் என்றும் சொல்ல முடியாது.
“போதும்டா சாமி! நீயும் உன் வேலையும்!” என்று ஒரு வருடம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தப்பி ஓடியவர்கள் பலர்.
எனக்கும் அப்படி ஓடிவிட ஆசை தான். ஆனால் “போறது தான் போறோம் அந்த மூன்று வருடத்தை நிறைவு செய்துவிட்டு சென்றால் அந்த பங்குகள் நமக்கே கிடைத்துவிடும். அதற்குள் அந்த பங்கின் விலையும் ஏற வாய்ப்பிருக்கிறது” என்று எனக்கு அதன் மேல் ஒரு நப்பாசை இருந்து.
என்னுடைய நம்பிக்கையும் வீண் போகவில்லை, சரியாக மூன்றாம் ஆண்டு இறுதியில் கொரியன் நிறுவனம் ஒன்று நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து எங்கள் கம்பெனியை வாங்க முன்வந்தது.
மொபைல் உலகில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் அது, ஆறு மாதங்கள் பல்வேறு விதமான நிறுவன உருமாற்ற பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. நான் பிளாட்பார்ம் டீம் என்று அழைக்கப்படும் டெவலப்பர் குழுவில் ஒருவன்.
சிந்தாமல் சிதறாமல் எங்கள் பெல்ஜியம் கம்பெனி ஐந்து வருடங்களாக உருவாக்கிய செட்-அப் பாக்ஸ் தொழில்நுட்பத்தை கொரியன் கம்பெனிக்கு தாரை வார்த்து கொடுத்தோம்.
இந்த மூன்று வருடங்களாக என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெல்ஜியம் கம்பெனியின் அடையாள அட்டை தற்போது மாறி இருந்தது. அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன்.
கொரியன் கம்பெனியின் பெயரைச் சொன்னதும் குஷியாகி விட்டார். தான் இப்போதே கல்யாண புரோக்கருக்கு போன் செய்து, என்னுடைய பயோடேட்டாவில் திருத்தம் செய்யப் போவதாக சொன்னார்.
அம்மாவிற்கு அது கொரியன் கம்பெனியா அல்லது பெல்ஜியம் கம்பெனியா என்பதெல்லாம் பிரச்சனை இல்லை, நான் எப்படியாவது வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டு அப்படியே ஒரு கல்யாணத்தை பண்ணிக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
எங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் இத்துடன் தன்னுடைய தொழிற்முறை வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பித்து, தோல்வி மேல் தோல்வியை சந்தித்த மைக்கேலுக்கு இந்த செட்-அப் பாக்ஸ் தான் வெற்றியை கொடுத்தது.
அவர் முற்றாக எங்களிடமிருந்து விடைபெறும் முன் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
நான் மைக்கேலிடம் கணினி வழியாக மட்டுமே இதுவரை பேசி இருக்கிறேனே தவிர நேரில் பார்த்தது இல்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் செட்-அப் பாக்ஸ் செயலியை எந்தெந்த வழிகளிலெல்லாம் மேம்படுத்தலாம் என்றொரு கருத்தை எங்கள் எல்லோரிடமும் கேட்டிருந்தார்.
கடும் பணிச்சுமைகளுக்கு நடுவே சிரத்தை எடுத்து வெகு சிலர் மட்டுமே அதற்கு பதில் அளித்து இருந்தனர். அதில் நானும் ஒருவன். நான்கு பக்கத்திற்கு செயலியை மேம்படுத்துவது குறித்த கோப்பு ஒன்றை தயாரித்து அவருக்கு இமெயிலில் அனுப்பி இருந்தேன்.
சில மாதங்கள் கழித்து மைக்கேலிடமிருந்து எனக்கு வந்த பதில், நான் பரிந்துரைத்த வசதி பிடித்திருப்பதால் அதை வரும் ஆண்டில் செயலியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக கொண்டு வந்து விடலாம் என்று உறுதியளித்திருந்தார்.
பார்ட்டியில் நானும் பவனும் அருகருகே அமர்ந்து கொண்டோம். பார்ட்டி தொடங்குவதற்கு முன்பு சில அறிமுக உரைகளும், அதைத் தொடர்ந்தார் போல் சில நினைவு கூறல் உரைகளுமாக நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்து.
பிறகு கடைசியாக மைக்கேல் உரையாற்ற ஆரம்பித்திருந்தார். சுருக்கமான உரை செட்-அப் பாக்ஸ் வந்ததன் மூலம் வீடியோ-ஆன்-டிமாண்ட் எளிமையாகி விட்டதாகவும், அது தொலைக்காட்சி உலகில் ஒரு மைல்கல் என்றும் பெருமை அடைந்தார்.
இதன் மேலதிக வளர்ச்சியை கொரிய நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்பதில் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்பதாகவும் அப்படியே இத்தனை வருடங்கள் கடும் நிதி நெருக்கடியிலும் தன் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி அமர்ந்தார்.
கீழே அமர்ந்திருந்த அனைவருக்கும் மைக் தரப்பட்டு கேள்வி ஏதேனும் இருந்தால் கேட்க சொன்னார்கள்.
என்முறை வந்த போது “ஓய்விற்கு பின்னர் நீங்கள் உடனடியாக என்ன செய்யப் போகிறீர்கள் மைக்கேல்!” என்றேன்.
“நான் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரமாவது இனி உறங்க போகிறேன். தற்சமயம் எனக்கு பணத்தை விட அதிக மதிப்பு வாய்ந்தது உறக்கம் தான்” என்றார்.
எனக்கும் “கிடைத்திருக்கும் பங்குகளை விற்று விட்டு, இந்த மென்பொருள் துறையை விட்டே ஒதுங்கிக் கொள்ளலாமா?” என்று தோன்றியது. ஆனால் கொரிய நிறுவனம் எங்கள் குழுவை அப்படியே அமெரிக்காவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டிருந்தது. ஆகையால் அப்படி ஓய்வு எடுக்கும் திட்டத்தை கைவிட்டு இருந்தேன் நான்.
பார்ட்டியில் நானும் பவனும் லேசாக குடித்து இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்திருந்த பாட்டு மற்றும் நடனத்திற்கு மாறாக அங்கே ஸ்டேஜில் வெளிநாட்டவர் ஒருவர் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தார்.
ஒன்பது மணிக்கு எல்லாம் அவரவர் புறப்பட தொடங்கியிருந்தனர். மைக்கேலுக்கு கைகுலுக்கி விடை கொடுத்து விட்டு வெளியே வந்த என்னை பவன் நேராக டிஸ்கோதே கூடம் இருக்கும் அந்த நட்சத்திர விடுதியின் ஏழாவது மாடிக்கு கூட்டிச் சென்று விட்டான்.
“நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்? சரக்கடிக்க வேண்டும் என்றால் கச்சிபௌலியில் இருக்கும் ஏதாவது ஒரு பப்புக்கு போய் இருக்கலாமே!” என்றேன்.
“கச்சிபௌலியில் நாம் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் நாம் இங்கே பஞ்சாரா ஹில்ஸில் இருக்கிறோம். தெலுங்கு திரையுலக நடிகர் நடிகையர் வந்து செல்லும் இடம் இது. உள்ளே போய் எப்படி இருக்குன்னு பாக்கலாம்!” என்றான் பவன்.
அதுவும் சரிதான் இன்னொரு முறை நான் இப்படி ஒரு நட்சத்திர விடுதிக்கு வருவோமா அல்லது மாட்டோமா என தெரியாது, அதனால் ஏன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என எனக்கு தோன்றியது.