நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 3

“தம்பி இங்க வா! நான் ரொம்ப நேரமா ஒன்ன பாத்துகினு இருக்கேன். நீ இந்த முனைக்கும் கடசிக்கும் நடையா நடந்துட்டு இருக்கியே! இன்னாதான் வோணும் வொனக்கு?”

எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன்வந்தார் ஆட்டோக்கார அண்ணன் ஒருவர்.

பாக்கெட் டைரியிலிருந்த முகவரியை காண்பித்து, ஒரு மணி நேரமாக இந்த கோவிந்தசாமி தெருவில் அலைந்தும் என்னால் 23/A எண்ணுள்ள வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன்.

“தம்பி! ஒன்னால ஊட்ட கண்டுபிடிக்க முடியலன்னா யாராண்டையாவது கேக்கணும்! இப்படி நடந்துகினே இருந்தா ஊடு கெட்சிடுமா” என்று ஆட்டோக்கார அண்ணன் அன்போடு கடிந்து கொண்டார்.

“ஆமாம். தவறு என்னுடையதுதான்” என்பதுபோல் தலையாட்டினேன்.

சாலிகிராமத்தில் இரண்டு கோவிந்தசாமி தெருக்கள் இருப்பதாகவும். அதில் நான் நின்று கொண்டிருப்பது புதிய கோவிந்தசாமி தெரு என்றும் பழைய கோவிந்தசாமி தெரு அந்த மேம்பாலத்தை தாண்டி இருக்கிறது என்றார் ஆட்டோக்காரர்.

இங்கே எல்லோரும் புதிதாக வந்திருப்பவர்கள், ஆதலால் அவர்களுக்கு இந்த தெரு பெயர் மாற்றம் குறித்து ஏதும் தெரியாது என்றார். அப்படியே ஐம்பது ரூபாயில் அங்கு கொண்டுபோய் விடுகிறேன் எனவும், நான் சந்தேகம் அடையாமல் இருக்க, 23/A கோவிந்தசாமி தெரு என்ற விலாசத்தை பார்த்த பிறகு காசு கொடுத்தால் போதும் என்றும் சொல்லியிருந்தார்.

உச்சி மண்டையை பிளக்கும் அந்த வெயிலில் நடந்து நடந்து சோர்வாக இருந்த நான் பேரம் எதுவும் பேசாமல் ஆட்டோவில் போய் அமர்ந்து கொண்டேன்.

“என்ன ஊர் தம்பி?” ஆட்டோ ஓட்டிக்கொண்டே என்னிடம் பேச்சு கொடுத்தார் ஆட்டோக்காரர்.

எக்காரணத்தைக் கொண்டும் சொந்த ஊரை சொல்லி விடக்கூடாது என்ற முடிவோடு இருந்தேன் நான்.

“இங்கதாண்ணா கிண்டி”

“கிண்டில எங்க?” விடாமல் கேட்டார் ஆட்டோக்காரர்.

“என்னடா இது கிண்டி என்றால் அத்தோடு விட வேண்டியது தானே எதற்கு இவருக்கு என்னுடைய பூர்வீகம் எல்லாம்” என தோன்றிற்று.

“அதெல்லாம் எதுக்குண்ணா உங்களுக்கு!” பேச்சில் ஒரு கடுமை காட்டினேன்.

ஆட்டோக்காரரும் அதை புரிந்து கொண்டு, அதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்கவில்லை. பழைய கோவிந்தசாமி தெருவிற்குள் 23/A வை  தேடிக்கொண்டே ஆட்டோவை ஓட்டினார்.

எப்படியும் வாசலில் செக்யூரிட்டி இருக்கத்தான் போகிறான், நேராக போய் அவனிடம் “ஜெனியை பார்க்க வந்திருக்கிறேன். நான் அவளுடைய பரம ரசிகன்” என்று சொல்லப் போகிறேன்.

அவன் என்னை அனுமதிக்க மறுத்ததால் “அவளை பார்க்காமல் இங்கிருந்து கிளம்ப போவதில்லை!” என்று சொல்லப் போகிறேன்.

அதிகபட்சம் என்ன செய்வான் வெளியே துரத்துவான். நான் அங்கே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டால் எப்படியும் ஜெனிக்கு விஷயம் தெரிய வரும். ஆகவே அப்போது அவளை நான் பார்க்க முடியும் தானே.

ஒருவேளை அவள் இங்கு இல்லாமல் வெளியூருக்கோ அல்லது ஷூட்டிங்கிற்கோ சென்று இருந்தால், அதை போன் மூலம் அவளிடம் பேசி உறுதிப்படுத்திக் கொண்ட பின், கையோடு கொண்டு வந்த இந்த காதல் கடிதத்தை செக்யூரிட்டி இடம் கொடுத்துவிட்டு வரப்போகிறேன்.

தோளில் மாட்டியிருந்த பக்கவாட்டு பையினுள் தடவி பார்த்து கொண்டேன். நான் என்னவளுக்காக எடுத்து வந்திருந்த காதல் கடிதம் பிங்க் நிற உறையினுள் பத்திரமாக இருந்தது. உறையின் மேல் எழுதியிருந்த “ஃபார் ஜெனிஸ் ஐஸ் ஒன்லி” என்ற வாசகத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்.

“தம்பி! இதோ இருக்கு நீ தேடி வந்த அட்ரஸ்” சட்டென பிரேக் போட்டு நிறுத்தினார் ஆட்டோக்காரர்.

ஒரு மாட மாளிகையை எதிர்பார்த்திருந்த எனக்கு அங்கு சலூன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாய் இருந்தது.

ஆட்டோக்காரர் ஏதோ வழி தவறி வந்து விட்டாரென “இல்லண்ணா! இந்த அட்ரஸ் இல்ல, அது 23/A”  என்றேன்.

“இல்ல தம்பி, நம்ம சரியான அட்ரஸுக்கு தான் வந்திருக்கோம். சலூன் மேலே பாரு” என்றார்.

மேலே இருந்த போர்டில் ஆர்கே சலூன் என்று நன்றாக கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. அடுத்த வரியில் தெள்ளத் தெளிவாக 23/A, கோவிந்தசாமி தெரு என்ற முகவரியும் எழுதியிருந்தது.

ஆட்டோக்காரர் காற்றில் அலைபாய்ந்திடும் கழுத்து வரை படர்ந்த எனது தலைமுடியையும், ஆர்கே சலூனையும் மாறி மாறி பார்த்தார்.

“ஹூம்! இந்த முடிய வெட்றத்துக்குதா கிண்டியிலர்ந்து இங்க கெளம்பி வந்த! ஏன் அங்க சலூன் இல்லையா” என கலாய்த்து விட்டு என்னிடமிருந்து ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.

⟢ ⟢ ⟢

ஊருக்குப் போகும் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கை ஒன்றை பிடித்து அமர்ந்து கொண்டேன். அந்த நடிகர் நடிகைகளின் முகவரிகள் என்ற புத்தகத்தில் அவன் ஸ்டேப்ளர் பின் அடித்து வைத்திருக்கும் போதே எனக்கு தெரிந்திருக்க வேண்டும் அதில் இருப்பது எல்லாம் டுபாக்கூர் முகவரிகள் என்று.

அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்து, பஸ் பிடித்து, மூன்று மணி நேரம் பயணம் செய்து, இங்கு வந்து மற்றொரு மூன்று மணி நேர அலைச்சலுக்கு பின் அட்ரஸை கண்டுபிடித்து பார்த்தால் அவன் கொடுத்திருப்பது ஒரு சலூனின் அட்ரஸ்.

போயும் போயும் ஒரு சலூனின் முகவரியையா ஜெனிக்கு கொடுத்திருக்க வேண்டும். அயோக்கியப் பயல்! அதென்ன பெயர்? ஆம் திலீப்குமார்! இல்லை இல்லை, திரைமுரசு திலீப்குமார். அந்த நாய் மட்டும் என் கையில் கிடைத்தான், அவனை நார் நாராக கிழித்து தொங்க விட வேண்டும் என்பது போல் இருந்தது எனக்கு.

சென்னையிலிருந்து புறப்படும் போது சமீபத்தில் திரைக்கு வந்திருந்த திரைப்படத்தின் போஸ்டர்களை வழிநெடுக காண முடிந்தது. அதில் ஜெனியும் இடம் பெற்றிருந்தாள். போஸ்டர்களின் வழியாக அவள் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

அங்கு இருப்பவர்களிடம் கேட்பதன் மூலமாகவோ அல்லது கோடம்பாக்கம் போய் அங்கிருக்கும் யாரிடமாவது விசாரிப்பதன் மூலமாகவோ ஒருவேளை என்னால் ஜெனியின் முகவரியை தெரிந்து கொண்டிருக்க முடியும். ஏன் அந்த ஆட்டோ ஆட்டோக்காரரிடம் நான் வந்த காரணத்தை சொல்லி இருந்தால் கூட எனக்கு ஏதேனும் உதவி கிடைத்திருக்கலாம்.

ஆனால் அப்படி செய்வதன் மூலம் நான் யாரோ ஒருவரால் ஒரு பைத்தியக்காரனைப் போலவோ அல்லது ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனை போலவோ நடத்தப்படுவதை விரும்பவில்லை. 

இந்நாள் வரை நான் குறைந்தது நூறு தமிழ் படங்களையாவது பார்த்திருப்பேன். அதில் நடித்திருக்கும் நடிகைகளின் மேல் வராத ஈர்ப்பு எனக்கு ஜெனியின் மீது மட்டும் தான் வந்திருக்கிறது.

அவள் என்னை நினைத்து உருகி உடைந்து போவதில் எனக்கு அப்படி ஒரு ஆனந்தம். ஒரு நாள் ஜெனி என்னிடம் நேரில் பேசுவது போன்ற ஒரு கனவு வந்திருந்தது. நானும் அவளும் கைகோர்த்து யாரும் இல்லா கடற்கரை ஒன்றில் நடந்து போகிறோம். நாங்கள் என்ன பேசினோம் என்பது என் நினைவில் இல்லை.

ஆனால் கனவில் அவளுடன் ஏற்பட்ட அந்த ஸ்பரிசத்தை என்னால் இறுதி மூச்சு வரை மறக்க முடியாது. என் ஆன்மாவின் ஒரு பகுதி அவளை சுற்றி வருவது போலவே இருந்தது எனக்கு.

கேட்பதற்கு மிக மிக எளிமையாக ஆனால் கருத்தாழம் மிக்க ஜப்பானிய பழமொழி ஒன்று எனக்குத் தெரியும்.

ஒருவர் இங்கே இல்லை என்றால், அவர் வேறு எங்கோ இருக்கிறார் என்பது அதன் பொருள்.

ஆம். என்னோடு இருக்க வேண்டியவள் ஜெனி. அவள் என்னுடன் இல்லாததால் வேறு எங்கோ இருக்கிறாள்.

⟢ ⟢ ⟢

அந்த சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களில் நான் ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளானேன். ஏதோ தவறு செய்கிறேன் என்பதை மட்டும் உணரமுடிந்ததே தவிர என்னால் எது உண்மை எது பொய் எனப் பிரித்தரிய முடியாமல் போனது.

என்னுடைய நண்பர்களில் நானும் விதிவிலக்கு அல்ல. அவர்களுக்கும் எல்லா நடிகைகளையும் பிடித்திருந்தது. கேரளாவிலிருந்து தமிழுக்கு அறிமுகம் ஆகி இருந்த இளம் நடிகை ஒருத்திக்கு எங்கள் அலுவலகத்தில் கணேஷ் என்பவன் தீவிர ரசிகனாக இருந்தான்.

‘இ’ல் தொடங்கி ‘ம்’ல் முடியும் அவள் நடித்த படத்தை ஒருமுறை நான் பார்த்ததாக கூறிய உடன், “எப்படி இருக்கா என் செல்லம்! செம க்யூட் இல்ல! செம  அழகு இல்ல!” என்றான் கணேஷ்.

பார்ப்பதற்கு நன்றாக காட்டெருமை போல இருக்கும் அவன் அந்த கேரள நடிகையை “செல்லம்! செல்லம்!” என பேசியது எனக்கு தாங்க முடியாது எரிச்சலை தந்தது.

ஆயிரம் பேர் வேலை பார்க்கும் எங்கள் அலுவலகத்தில் சரி பாதி பெண்கள். அலுவலகம் எப்போதும் பார்ப்பதற்க்கு காதலர்கள் பூங்கா போல இருக்கும். அங்கு அலுவலக நேரம் முடிந்ததும் எல்லோரும் தத்தம் ஜோடியோடு வெளியில் வருவதைக் கண்டு, இந்த கம்பெனியில் எப்படியாவது வேலை வாங்கி விட வேண்டும் என்று தீவிர முயற்சி எடுப்பவர்களுக்கும் உண்டு.

அங்கே வேலை கிடைத்துவிட்டால் போதும் எப்பேர் பட்டவனுக்கும் ஒருத்தி கிடைத்து விடுவாள். அவன் உடல் பருத்தவனோ அல்லது ஒல்லி தேகத்தானோ, சொட்டை விழுந்தவனோ அல்லது கொண்டை போட்டவனோ, நெட்டையனோ அல்லது குட்டையனோ,  அவரவருக்கு ஏற்ற பொருத்தமான ஜோடி கிடைத்துவிடும்.

சில கள்ள காதல் ஜோடிகள் கூட அவ்வாறு உருவாகி அலுவலகத்தின் புனித தன்மையை கெடுத்து விட்டதாக பின்னாளில் சிலர் என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

கம்பெனியில் இருந்து ஜோடி எதுவும் இல்லாமல் முரட்டு சிங்கிளாய் வெளியேறியது நான் மட்டும்தான்.

இன்னும் நான் நினைத்து நினைத்து நெகிழக்கூடிய அளவிற்கு என்னிடம் அன்பு காட்டிய பெண்கள் எல்லாம் அங்கு என்னுடன் நண்பர்களாக இருந்தார்கள்.

என் மனதிற்கு மிகவும் நெருக்கமான காயத்ரி ஒரு முறை அலுவலகத்தில் யாரும் இல்லா நேரம் என்னுடைய அருகில் வந்து “நேற்று முழுவதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்றாள்.

அதிலேதும் எனக்கு ஆச்சரியம் இல்லை. நானும் உண்மையில் அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

“நான் இப்படி ஒருவனிடம் வெட்கத்தை விட்டு சொல்வேன் என நினைத்ததில்லை” என்று மேலும் தொடர்ந்தாள்.

“நீயும் பேரழகுடன்தான் இருக்கிறாய்! இங்கிருக்கும் எல்லோருக்கும் உன் மீதுதான் கண்!” என்றேன். வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“ச்சீ போடா!” என்று செல்லமாய் தலையில் தட்டி விட்டு சென்றாள்.

ஆரம்பத்தில் வெறும் நண்பர்களாக இருந்த நாங்கள், நாட்கள் செல்ல செல்ல நெருங்கிய நண்பர்களாக மாறி இருந்தோம். அலுவலகம் முடிந்ததும் நேராக கடற்கரைக்கு போவது எங்கள் வழக்கமாக இருந்தது.

எங்கள் நெருக்கத்தை பார்த்து மற்ற நண்பர்கள் நாங்கள் காதலர்கள் என்றே முடிவு கட்டிவிட்டனர்.

Leave a Comment