நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 2

வருடா வருடம் நடக்கும் புத்தகத் திருவிழாவை அந்த வருடம் முருகன் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னுடைய அலுவலக நண்பர்களில் என்னையும் மோகனையும் தவிர எவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் என்பதே இல்லை.

இருந்தாலும் மற்றவர்கள் புத்தக அரங்குகளை சுற்றி பார்க்கும் நோக்கிலும் அப்படியே நாங்கள் அங்கு கிடைக்கும் காளான் சூப் வாங்கித் தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பியும் உடன் வந்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி இருந்தேன் நான். மண்டபத்தினுள் கடைசி அரங்காக சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கொண்ட அரங்கு ஒன்று இருந்தது.

அரங்கில் இருந்த ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கி வந்து “இந்தா இது உனக்குத்தான்” என்று என்  கையில் திணித்தாள் காயத்ரி. ஜெனி ஆண்டு மலர் என்று தலைப்பிடப்பட்ட புத்தகம். ஜெனியின் இந்த ஐந்து வருடங்களில் அவள் நடித்த படங்கள் பற்றிய செய்தி தொகுப்புகளும் கவர்ச்சி படங்களுமாக நிறைந்து இருந்தது அந்த புத்தகம்.

மாத இதழாக வெளிவந்த செய்திகளை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக மாற்றி இருந்தார்கள். என்னுடன் நெருக்கமாக பழகியிருந்ததில் ஜெனியின் மீது எனக்கு இருக்கும் ஈடுபாட்டை நன்றாக புரிந்து வைத்திருந்தவள் காயத்ரி ஒருத்திதான்.

அரங்கை விட்டு கிளம்பும் போது தமிழ் நடிகர் நடிகைகளின் முகவரிகள் என்ற தலைப்பிடப்பட்ட புத்தகம் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. எடுத்துப் பார்த்தேன். இருநூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகையரின் முகவரிகள் அதில் இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

முதல் நான்கு பக்கங்களில் நடிகர் நடிகைகளின் பெயரும் அவர்களின் முகவரி இருக்கும் பக்க எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த தாள்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற தாள்களை எல்லாம் ஒன்றிணைத்து பெரிய ஸ்டேப்ளர் பின் அடித்து யாரும் முகவரியை பார்க்காத வண்ணம் பாதுகாத்து இருந்தனர்.

புத்தகத்தின் ஆசிரியர் திரைமுரசு திலீப்குமார் என்று பின் அட்டையில் எழுதி இருந்தது. ஆசிரியரை பற்றிய வேறு தகவல்கள் ஏதும் இல்லை. விலை முன்னூறு ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வெறும் முகவரிக்கு முன்னூறு ரூபாய் என்பது அதிகம்தான். ஆனால் நான் இரண்டாம் பக்கத்தில் ஜெனியின் பெயரை பார்த்துவிட்டேன். இது ஒரு பாதுகாக்கபட வேண்டிய புத்தகம் என்பதாலேயே இதற்கு யாரும் முகவரியை பார்க்க முடியாதவாறு ஸ்டேப்ளர் பின் அடித்து வைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த புத்தகத்தின் ஒரே ஒரு பிரதி தான் இருக்கிறது. ஜெனியின் முகவரி வேறு இதில் இருக்கிறது. எனவே அந்த அரிய புத்தகத்தை நான் முன்னூறு ரூபாய் கொடுத்து வாங்கி யாருக்கும் தெரியாமல் என் பையில் திணித்துக்கொண்டேன்.

பதிப்புத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் கம்போஸராக வேலை பார்த்தேன் நான். ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் வேலை பார்க்கும் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தனர்.

பொதுவாக புதன் கிழமைகளில் அலுவலகத்தில் வேலை தலைக்கு மேல் இருக்கும். காலை ஆறு மணிக்கு அலுவலகம் சென்று இரண்டு மணிக்கு வேலை முடிந்து வெளியே செல்பவர்களை கூடுதலாக மேலும் நான்கு மணி நேரம் வேலை பார்க்கச் சொல்லி விண்ணப்பம் வைப்பார்கள்.

அதற்கு பிரதிபலனாக மதிய சாப்பாடு, மாலை வேலையில் ஒரு முட்டை பப்ஸ் அல்லது சமோசா என சிறப்பு கவனிப்பு இருக்கும். அப்படியே அந்த மாத சம்பளத்தில் ஓவர்டைம் செய்ததற்காக கூடுதல் சம்பளமும் கிடைத்துவிடும்.

நான் பொதுவாக ஓவர்டைம் பார்க்குமாறு என்னுடைய மேனேஜர் வேண்டுகோள் வைத்தால் அதை மீறுவது கிடையாது. வீட்டிலும் புதன்கிழமை என்றாலே நான் ஆறு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவேன் என்றொரு பொது கருத்தும் இருந்தது. ஆகவே நான் ஜெனியை தேடி கிளம்பும் நாளாக புதன்கிழமை தேர்ந்தெடுத்தேன்.

காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தால் போதும். யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. பாக்கெட் டைரி ஒன்றில் ஜெனியின் முகவரியை குறித்துக் கொண்டேன்.

நான் அவளை நேரில் பார்க்கும் பட்சத்தில் அவளிடம் கொடுப்பதற்காக ஒரு காதல் கடிதமொன்றை எழுதியிருந்தேன். என் இதயத்தை உருக்கி பேனாவிற்குள் ஊற்றி எழுதியிருந்த எழுத்துக்கள் அவை.

உண்மையில் அதை எழுதியது நான் அல்ல. என்னுள் எங்கோ மறைந்து கிடந்த ஒன்று என் கையை பிடித்து எழுதியது போல இருந்தது. கடிதத்தை ஒரு பிங்க் நிற உறையிலிட்டு அதன் மேல் “ஃபார் ஜெனிஸ் ஐஸ் ஒன்லி” என்றும் எழுதிக்கொண்டேன்.

எனக்கு பிடித்த வெளிர் மஞ்சள் நிற டி-ஷர்ட்டும் நீல நிற ஜீன்ஸையும் அணிந்து கொண்டு பஸ்ஸில் புறப்பட்டு இருந்தேன். ஷாம்பு போட்டு நன்றாக தலை முழுகி இருந்ததால், ஏற்கனவே கழுத்து வரை நீண்டிருந்த என்னுடைய முடி காற்றில் படபடத்தது.

⟢ ⟢ ⟢

பள்ளி நாட்களில் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி மற்றும் தனி நடிப்பு என அத்தனை  போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியிருந்த என்னை பன்னிரண்டாவது வகுப்பு முடிந்ததும் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் சேர்த்து விடுவதாக அப்பா ஒரு முறை சொல்லி இருந்தார்.

எனக்கும் “அதுவும் சரிதான், இவ்வளவு திறமைகளும் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் போது, ஏன் நான் ஒரு திரைப்பட கதாநாயகனாகவோ அல்லது இயக்குனராகவோ ஆகக்கூடாது?” என தோன்றியது.

என்னுடன் படிக்கும் சின்னப்பராஜிடம் “நடிகர் அல்லது இயக்குனர் இவ்விரண்டில் எது எனக்கு பொருத்தமாக இருக்கும்?” என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன்.

எனக்கு தனி நடிப்பு நன்றாக வருவதால் எப்படியாவது என்னை ஒரு நடிகனாகிவிடும்படி சொல்லி இருந்தான் சின்னப்பராஜ்.

நானும் அதுதான் என்னுடைய ஆசை என்றும் அப்படியே நான் நடிகனாகும் பட்சத்தில் என்னுடைய பெயர் திரையில் தோன்றும் போது என் பெயருக்கு முன் எந்த ஒரு அடைமொழியும் இருக்காது என்றும் உறுதி அளித்து இருந்தேன்.

சின்னப்பராஜுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்றதொரு விருப்பம் இருந்ததாகவும் அதற்கு நான் இடையூறாக இருக்க கூடாது என்பதால்தான் என்னை நடிப்பின் பக்கம் தள்ளிவிடுகிறான் எனவும்  பின்னாளில் வேறு ஒரு நண்பன் மூலமாக அறிந்து கொண்டேன்.

நான்தான் எப்படியும் ஒரு நடிகனாகவோ அல்லது ஒரு இயக்குனராகவோ ஆகப் போகிறோமே என்று படிப்பில் சற்று கவனக்குறைவாக இருந்து விட, அதன் பலனாக பன்னிரண்டாவது வகுப்பில் மிக சொற்பமான மதிப்பெண்களில் பாஸ் செய்து இருந்தேன்.

அம்மா உட்பட வீட்டில் எல்லோரும் என்னை ஒரு மாதத்திற்கு மேலாக திட்டிக் கொண்டே இருந்தார்கள். அப்பாவின் கோபம் தனித்திருந்த நாளாக பார்த்து “நீங்கள் என்னை திரைப்பட கல்லூரியில் சேர்ப்பதாய் சொல்லியிருந்தீர்களே?” என்று நினைவூட்டினேன்.

அவர் அடிக்காத குறையாக என் மீது பாய்ந்தார். “இதை மனசுல வச்சுட்டு தான் நீ இந்த கேவலமான மார்க் எடுத்திருக்கியா? ராஸ்கல்!” என்று மீண்டும் ஒரு வாரத்திற்கு என்னை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்.

கடைசியாய் அம்மாவின் வலியுறுத்தலின் பேரில் ஒரு பொறியியல் கல்லூரியில் போனால் போகிறது என்று என்னை பணம் கட்டி சேர்த்து விட்டிருந்தார் அப்பா. அங்கு படித்த நான்கு வருடங்களில் கலை சம்பந்தமான எந்த ஒரு போட்டியிலும்  ஈடுபடாமல் அப்பாவின் உத்தரவுக்கு இணங்க  வாலை சுருட்டிக் கொண்டு இருந்தேன்.

ஒருவேளை நான் அந்த திரைப்படக் கல்லூரியில் படித்து நடிகனாகி இருந்தால், இந்நேரம் ஜெனி எனக்கு ஜோடியாய் நடித்திருப்பாள். அப்படியே என் முன் ஜென்ம காதலியிடம் ஜோடி சேர்வது  மிகவும் எளிதான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த அப்பா வந்து கடவுள் போட்ட கணக்கையெல்லாம் நாசமாக்கி விட்டார்.

இப்படி பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை அசை போட்டுக்கொண்டே சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.

⟢ ⟢ ⟢

சாலிகிராமத்தில் இருக்கும் அந்த முகவரிக்கு போய் ஆட்டோவில் இறங்கினேன். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த தெருவில் இருபக்கமும் கார்கள், மினி-டிரக்குகள் மற்றும் மீன்பாடி வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அந்த தெருவில் அடுத்தடுத்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் புகழ்பெற்ற டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றை காண முடிந்தது. அப்படியே சற்று தூரத்தில் தனியார் கிளினிக் ஒன்றும் இருந்தது. அதன் ஆம்புலன்ஸ் வேன்களை ரோட்டில் நிறுத்தி பாதி வழியை அடைத்திருந்தார்கள்.

அதை தாண்டியதும் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றும், அதை ஒட்டியே பழக்கடை ஒன்றும் அமைந்திருந்தது. அந்த தெருவில் நிச்சயம் பெரிய மனிதர்கள் வசிக்க வேண்டும். என்னால் பிரமாண்ட மாடி வீடுகளையும், பங்களாக்களையும் அங்கே காண முடிந்தது.

பாக்கெட் டைரியில் இருந்த முகவரியை தேடிக் கொண்டே வீதியின் கடைசி வரை வந்து விட்டேன். 23/A என்ற எண் கொண்ட வீடு எங்கும் தென்படவில்லை.

ஒருவேளை நான் கவனக்குறைவாக வீட்டை தவற விட்டு விட்டேனோ என்ற சந்தேகத்தில் திரும்பி நடந்து மீண்டும் ஒருமுறை அவ்வீதியில் உள்ள வீடுகளின் எண்களை கண்களால் ஆராய்ந்தபடி  சென்றேன்.

இந்த முறை நிதானமாக ஒவ்வொரு வீட்டின் முன்பும் பொறிக்கப்பட்டிருந்த எண்ணை கவனமாய் சரி பார்த்தேன். 23/A என்றோ அல்லது ஜெனி என்றோ பொறிக்கப்பட்ட பலகை ஒன்று கூட இல்லை.

தெரு முனையில் இருந்த தேநீர் கடையில் போய் அமர்ந்து கொண்டேன். கடையில் நல்ல கூட்டம் இருந்தது. தேநீர் குடித்தபடியே கடைக்காரரிடம் “அண்ணா இங்கே ஜெனியோட வீடு எங்க இருக்கு?” என்று கேட்டு விடலாம் என தோன்றியது.

ஆனால் “யார் நீ? எதற்க்காக அவள் வீட்டை தேடுகிறாய்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?” போன்ற கேள்விகள் எழுந்தால் நான் என்ன செய்வது.

நான் ஜெனியை பார்த்து காதல் கடிதம் கொடுக்க வந்தவன், அது முடியாமல் போனால் அவள் வீட்டு காவல்காரனையோ அல்லது குறைந்தபட்சம் அவள் வீடு இருக்கும் இடத்தையோ பார்த்து விட்டு போக வந்திருப்பவன் என்று சொன்னால் யார் என்னை நம்புவார்கள்.

நான் பலமுறை சரிபார்த்துக் கொண்டேன். இது கோவிந்தசாமி தெரு தான் சந்தேகமேயில்லை. இங்கிருக்கும் வீடுகளும் பணக்காரர்கள் வசிக்கும் வீடுகள் போலவே இருக்கிறது. நிச்சயம் இங்குதான் ஏதோ ஒரு வீட்டில் என்னுடைய ஜெனி வசிக்க வேண்டும்.

“எனக்கும் அவளுக்கும் பூர்வ ஜென்ம உறவு ஒன்று இருக்கிறது. இல்லை என்றால் எதற்காக எனக்கு அவள் மீது காதல் வர வேண்டும்?”

“அந்த நகை கடை திறப்பு விழாவின் போது கூட, அத்தனை பேர் அங்கே நகைக்கடையில் அவளை பார்ப்பதற்கு தவம் கிடக்க, போகிற வழியில் ஒரு இளநீர் கடையில் என்னை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு சென்றதெல்லாம் தற்செயலானது அல்ல”

“எல்லாவற்றையும் விட, இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் வாங்கிய நடிகர் நடிகையின் முகவரிகள் அடங்கிய புத்தகம், அது வேறு எவருக்கும் கிடைக்காமல் எனக்குத்தானே கிடைத்தது”

இதையெல்லாம் இந்த பிரபஞ்சம் எனக்கு தருகின்ற சமிக்ஞைகள் போல தோன்றியது.

வெகு நேரமாய் அந்த தெருவில் அலைந்து திரியும் என்னை கவனித்திருந்த ஆட்டோக்காரர் ஒருவர் இடைமறித்தார்.

Leave a Comment