நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 12

எனக்கு போன் மேல் போன் போட்டு நான் ஜெனியிடம் என்ன பேசினேன் என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான் சிராஜ்.

ஜெனியிடம் இருந்தது திரைப்பட தயாரிப்பு சம்பந்தமான முடிவுக்கு கடந்த ஒருவாரமாக காத்திருந்தான் சிராஜ். அவளிடமிருந்து பதில் ஏதும் வராததால் இவற்றிற்கெல்லாம் காரணம் நான் தான் என பொருமிக்  கொண்டிருந்தான்.

சிராஜின் காத்திருப்பு ஒரு வாரம் இரண்டு வாரம் என சென்றது. ஜெனியிடமிருந்தோ அல்லது அவள் கணவனிடமிருந்தோ இருந்தோ எந்த பதிலும் இல்லாததால், முன்னாள் கல்வி தந்தையாக இருந்து தற்போது பட தயாரிப்பாளராக மாறி இருந்த ஒருவரிடம் கதை சொல்ல நேரம் கேட்டிருந்தோம்.

அவர் முதலில் சிராஜின் ஜாதகத்தை வாங்கி பார்த்துவிட்டு, மேஷத்திற்கு ரிஷபத்திற்கும் தற்போது ஒத்து வராது என்றும் அடுத்த ஆண்டு சனி பெயர்ச்சி முடிந்ததும் இது பற்றி பேசலாம் என்றும் அன்போடு சொல்லிவிட்டதாக சிராஜ் கூறினான்.

சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு, ஒரு இனிய மாலை பொழுது ஒன்றில், சிராஜ் அங்கிள் பேசுவதாக சொல்லி ஜெனி என்னிடம் மொபைல் போனை கொடுத்துவிட்டு மீண்டும் விளையாட சென்று விட்டாள். 

டிவியின் சத்தம் காதை துளைத்தெடுத்தது. நாடக நேரம் என்பதால் உமாவிடம் சத்தத்தை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

மொபைல் போனை எடுத்துக் கொண்டு என்னை போய் நேராக என் அறைக்குள் புகுந்து கொண்டேன்.

“ஹலோ, இப்ப கேக்குதா? ஹலோ” என்றேன் மறுமுனையில் இருக்கும் சிராஜுக்கு.

“மச்சி! ஜெனி இப்பதான் போன் பண்ணாங்க. அவங்க ஹஸ்பண்ட் நம்மளோட சேர்ந்து படம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டாராம்”

“ஹேய்!  தட்ஸ் எ குட் நியூஸ் டா. ஏன் இவ்வளவு நாளாச்சாம் உனக்கு பதில் சொல்ல?”

“அடேய்! அவங்க நம்மளோட சேர்ந்து படம் பண்றதே பெரிய விஷயம். இதுல அவங்கள போய் ஏன் லேட்டா பதில் சொன்னீங்கன்னு வேற கேட்கணுமா! இனி ஒரு நாளும் ஜெனி வர்ற இடத்துக்கு உன்னை கூப்பிட மாட்டேன் டா!”

“நானே வரமாட்டேன் போதுமா! சரி அப்போ நான் கதையை ரெடி பண்றேன்” என்று போனை துண்டிக்க இருந்தேன்.

“அப்புறம் உன்னை இனிமேல் கோஸ்ட் ரைட்டரா இந்த கதையை எழுத வேண்டாம்னு சொல்லிட்டாங்க”

என் மேல் ஜெனிக்கு இன்னும் கோபம் தீரவில்லை போல் தெரிந்தது. இனி பழையபடி நாவலுக்கே திரும்பிவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டேன்.  

“இந்த படத்தோட கதை மற்றும் திரைக்கதையை ஒரு நிஜ எழுத்தாளனா உன்னையே பண்ண சொல்றாங்க!” என்று திருவாய் மலர்ந்தான் சிராஜ்.

எனக்கு கிடைத்த நிஜ எழுத்தாளன் வாய்ப்பை விட ஜெனிக்கு என் மீது கோபம் இல்லை என்பதே அளவு கடந்த மகிழ்ச்சியை தந்தது.

“ஆமா! உன்ன போய் எதுக்கு மைண்ட் ரீடர்ன்னு ஜெனி சொல்றாங்க? எனக்கு ஒண்ணும் புரியலை” என்று போனை வைத்தான்.

ஜெனி அழகானவள் மட்டுமல்ல சமர்த்தியமானவளும் தான் என்பதை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

எனக்கு தெரிந்த ஜப்பானிய பழமொழி ஒன்று மூளைக்குள் ஓடியது. ஒருவர் இங்கே இல்லை என்றால் அவர் வேறு எங்கோ இருக்கிறார்  என்பது அதன் பொருள்.

புதிய படத்திற்கான கதையை எழுத பேப்பர் பேனாவை தேடினேன்.

Leave a Comment