கதைப்படி அதில் வரும் கதாநாயகி கொழுக் மொழுக்கென்று இருக்க வேண்டும். ஆனால் ஜெனியோ இந்த நாற்பது வயதிலும் சிக் என்று ஒடிசலாக இருப்பவள். சிராஜ் எதிர்பார்த்த நடிகைகளில் இருவர் இயக்குனருக்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை என நிராகரித்து விட்டனர்.
மூன்றாவது இடத்தில் இருந்த ஒரு மலையாள நடிகைக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் கால்ஷீட் கிடைக்கும் என்ற நிலை.
கடைசியாக சிராஜ் தேடிப் போய் பார்த்தவள்தான் ஜெனி. எடுத்து எடுப்பிலேயே ஓகே சொல்லிவிட்டார் என சிராஜ் தெரிவித்திருந்தான். இது ஒரு அரசியல் நையாண்டி படம் என்று தெரிந்தும் “பரவாயில்லை, யாராவது ஒருவர் பூனைக்கு மணி கட்ட வேண்டும் தானே?” என்றாளாம் ஜெனி.
ஏழு மாதங்கள் இராப்பகலாய் உழைத்து படத்தை எடுத்தான் சிராஜ். பலதரப்பட்ட சவால்களுக்கு பின் படம் இறுதியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
எனக்குத் தெரிந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த ஒரு தமிழ் படம் தான் ஜெனியின் கடைசி படம். டொரோண்டோவில் மேப்பில் கிராஸ் தியேட்டரில் குடும்பத்துடன் போய் பார்த்துவிட்டு வந்திருந்தோம்.
ஜெனிக்கு தற்போது வெளியாகி இருந்த திரைப்படம் நல்ல ஒரு கம்பேக்காக அமைந்திருந்தது. பிரிமியர் ஷோ ஈசிஆரில் உள்ள ஒரு பிரைவேட் திரையரங்கில் திட்டமிட்டிருந்தான் சிராஜ். ஒரு கோஸ்ட் ரைட்டர் ஆக என்னையும் அழைத்து இருந்தான்.
நான் தான் மறுத்துவிட்டேன். நான் வெறுமென ஒரு நிழல் எழுத்தாளன் தான். திரையில் என்னுடைய பெயர் வரப்போவதில்லை, சிராஜும் என்னை யாருடனும் அறிமுக படுத்த போவதில்லை.
ஆதலால் தவிர்ப்பது நலம் என வீட்டிலேயே இருந்துவிட்டேன். என்னதான் இருந்தாலும் வீட்டு சோஃபாவில் படுத்து கொண்டே பார்க்கும் வசதி வேறு எங்கும் கிடைக்காது.
திரையில் அழகாக தோன்றியிருந்தாள் ஜெனி. இளமை மாறாமல் அப்போது பார்த்த அதே ஒடிசலான தேகத்துடன், புடவையில் அங்கும் இங்கும் விசுக் விசுக் என்று கைகளை வீசிக்கொண்டு நடந்து நான் எழுதித்தந்த வசனங்களை பேசி நடித்திருந்தாள்.
அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய எழுத்து. படத்தில் அவள் பெயர் பூங்கொடி. சிராஜ் எவ்வளவு சொல்லியும் நான் பெயரை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.
திரைப்படத்தில் நட்சத்திர மதிப்பு கொண்ட ஒரே நடிகை ஜெனிதான். திரைப்பட விமர்சகர்கள் எல்லாம் இவ்வளவு காலம் ஜெனியை திரையில் காணாமல் காய்ந்து போய் இருப்பார்கள் போல இருந்தது.
ஒருவரும் கதையை பற்றி பேசவில்லை. எல்லாம் “ஜெனி அப்படி இருக்கிறாள்! ஜெனி இப்படி இருக்கிறாள்” என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்கள்.
எனக்கு ஜெனிதான் இதில் நடிக்கப் போகிறாள் என்று முன்னமே தெரிந்து இருந்தால், கதையில் அவளுக்கு ஏற்றவாறு, அவளுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய வகையில் மாற்றங்களை செய்திருப்பேன்.
ஆனால் இந்த இருபது வருடங்களில் எப்போதாவது இணையத்தில் தென்படும் அவள் திரைப்பட பாடலை பார்ப்பதோடு சரி மற்றபடி முழுதாக அவளை மறந்து போய் இருந்தேன்.
இப்போதெல்லாம் நஷ்டமான படத்திற்கே தயாரிப்பாளர்கள் வெற்றி விழா கொண்டாட தயங்குவதில்லை. அதிலும் இது சுமாராக ஓடிய படம். வளரும் இயக்குனரான சிராஜுக்கு வணிகரீதியிலான முதல் வெற்றி படம். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி ஜெனிக்கு ஒரு நல்ல கம்பேக்.
பெண்ணியம் சார்ந்த படங்களில் இனி அவள் நடிக்கலாம். இல்லை ஏதேனும் வயதான ஹீரோவுக்கு ஜோடியாக வந்து டூயட் பாடி விட்டு செல்வார் என எதிர்பார்க்கலாம்.
சிராஜ் காட்டிலும் மழை தான். கம்மி பட்ஜெட்டில் மார்க்கெட் இல்லாத நடிகைக்கு ஏற்றார் போல ஒரு கதையை தயார் பண்ணி அதை வெற்றி படமாக மாற்றும் சக்சஸ் ஃபார்முலா அவனிடம் இருப்பதாக எண்ணி நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
இவற்றையெல்லாம் கொண்டாடும் விதமாக, ஒரு மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான் சிராஜ். அப்படியே இந்த நிழல் எழுத்தாளனுக்கும் கட்டாயம் வரவேண்டும் என தொலைபேசியில் அழைப்பு விடுத்து இருந்தான்.
“ஜெனி வருவாளா” என்றேன்.
“மேடம் கண்டிப்பாக வரேன்னு சொல்லிட்டாங்க, மோஸ்ட்லி அவங்க ஹஸ்பண்ட் கூட வருவாங்கன்னு நினைக்கிறேன். டேய்! அவங்கள அவ இவன்னு வேற எங்கேயாவது சொல்லிட போற! அவங்க ஸ்டார் ஆர்டிஸ்ட். இந்த படம் அவங்களுக்காக மட்டும் தான் ஓடி இருக்கு!”
“தெரியும்! தெரியும்! என்னை ஜெனியிடம் அறிமுகம் செய்து வைக்க முடியுமா!”
“நிச்சயமா. ஷீ ஈஸ் வெரி கேஷுவல் டைப். அவங்களுக்கும் தெரியும் எனக்கு ஒரு கோஸ்ட் ரைட்டர் இருக்காங்கன்னு. நான் உன்னை என்னோட கோஸ்ட் ரைட்டராவே அறிமுகப்படுத்துகிறேன். ஒன்னும் பிரச்சனை இல்ல”
“நல்லது”
“அப்புறம் உனக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லணும்”
“சொல்லு”
“நமக்கு புதுசா ஒரு புரொடியூசர் கிடைச்சிருக்காங்க! நல்ல கதையா ரெடி பண்ணிட்டு நெக்ஸ்ட் வீட்ல வந்து பார்க்க சொல்றாங்க”
“வெரி குட்! யாருடா அந்த புண்ணியவான்?”
“வேற யாரு? ஜெனி மேடம் தான். ஜெனியோட கணவர் நம்மளோட சேர்த்து படம் பண்றதுல ஆர்வமாய் இருக்கார் ”
“ஓ கதை உன்கிட்ட ரெடியா இருக்கு அப்போ!”
“டேய் நீ தாண்டா என்னோட கோஸ்ட் ரைட்டர்! என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. இந்த வாரத்துக்குள்ள ஒரு நாலு பக்க கதை ரெடி பண்ணிட்டு வா நாம டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று போனை வைத்தான்.
⟢ ⟢ ⟢
பஞ்சாரா ஹில்ஸ் நைட்கிளப் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை நான் நிஜத்தையும் கற்பனையையும் பிரித்தெரியும் தன்மையை இழந்து நின்றேன்.
அன்று நைட்கிளப்பில் வந்த என்னுடைய கற்பனை அச்சு அசல் நிஜம் போல் இருந்தது. ஆனால் இப்போதோ என் முன்னே ஜெனி நின்று கொண்டிருக்கிறாள். அவளிடம் சிராஜ் இத்திரைப்படத்தில் பங்காற்றியவர்களை எல்லாம் எல்லாம் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கு இது ஏதோ ஒரு கற்பனை இருப்பதை போன்ற உணர்வை தந்தது.
இல்லை இது நிஜம்தான் என்று எனக்கே நிரூபிப்பதற்காக ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், சிராஜின் உத்தரவுப்படி விஐபி தவிர மற்ற எல்லோரிடமிருந்து மொபைல் போன்கள் இந்த புல்வெளி மைதானத்திற்குள் வரும் முன்பே பறிக்கப்பட்டு இருந்தன.
அங்கே சிராஜ் அறிமுகப்படுத்திய ஒருவரிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். எப்படி இவள் இன்னும் கட்டுக்குலையாமல் இருக்கிறாள். வயதாகாமல் இருப்பவன் மார்க்கண்டேயன் மட்டுமல்ல இவளும்தான் என தோன்றியது.
என்னை விட சற்று குறைவான உயரம். அலை பாயும் கரும் கூந்தல். மையிட்ட அகன்ற விழி. எடுப்பான மூக்கு. செந்நிற உதடு. அதற்கும் கீழே அந்த மச்சம்.
மையால் வைக்கப்பட்ட பொய் மச்சத்தை இப்போதுமா வைத்துக் கொண்டிருக்கிறாள் என யோசனையில் இருக்கும் போதே ஜெனியுடன் என்னருகே வந்து விட்டான் சிராஜ்.
“மேடம் இவர்தான் அன்பு நிலவன்” என்றான் சிராஜ்.
ஆம் அன்பு நிலவன் அது தான் என்னுடைய புனைப்பெயர். அந்த பெயரில் தான் நான் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வந்தேன்.
“ஹலோ ஹவ் ஆர் யூ?” எனக்காக காத்திருக்காமல் சட்டென கையை நீட்டினாள் ஜெனி.
அவளது வெண்மையான பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்தாள். அது இயல்பான புன்னகையா? அல்லது நடிக்கிறாளா? என்பது கூட எனக்கு தெரியவில்லை.
நானும் பதிலுக்கு சிரிக்க முயன்றேன். அவள் அளவிற்கு இல்லை என்றாலும் அவள் புன்னகையில் பாதியளவாவது நானும் பதிலுக்கு புன்னகைத்திருந்தேன்.
எவளை காண இந்த ஜென்மம் முழுதும் என் ஆன்மா ஏங்கி தவித்ததோ அவள் இதோ நான் தொடும் தூரத்தில் என் முன்னே நின்று கொண்டிருக்கிறாள்.
நான் இப்படி உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டே ஒரு பொம்மையை போல நிற்க முடியாது. அவளுடன் கை குலுக்கியாகி விட்டது. நான் என் தரப்பிலிருந்து பேச்சை தொடங்கியாக வேண்டும்.
ஆனால் நான் எங்கே பார்த்து பேசுவது? ஒரு பண்புள்ள ஆண்மகன் பெண்ணின் கண்ணை பார்த்து பேசுவான். ஆனால் அவள் கண்கள் என்னை நிலை குலைய செய்ததால், என் பார்வையின் குவி மையத்தை அவளின் இதழ்களுக்கு மாற்றிக் கொண்டேன். பிங்க் நிற இதழ்களும் எனக்குள் எதையோ தூண்ட, பார்வையை இன்னும் சற்று கீழே இறங்கினேன். உதட்டுக்கு கீழே இருந்த அந்த அழகான மச்சம் தெரிந்தது. நன்றாக உற்றுப் பார்த்தேன். என் கண்களுக்கு பொய்யாய் வரையப்பட்ட மச்சத்தை இனம் காணும் கூட சக்தி கூட இல்லாமல் இருந்தது.
“ஹலோ என்ன ஆச்சு! ஆர் யூ ஓகே மிஸ்டர் அன்பு நிலவன்”
என் தோளை தொட்டு லேசாக உலுக்கினாள் ஜெனி.
“நான் உங்ககிட்ட தனியா பேச முடியுமா!” என்றேன் நான்.
யாரை இவ்வளவு காலம் என் ஆன்மா தேடியதோ அவளிடம் நான் பேசிய முதல் நான்கு வார்த்தைகள்.
அதை சற்றும் எதிர்பார்க்காத சிராஜ் “டேய்! என்னடா சொல்ற” என்றான் அதிர்ச்சியாய்.
தயக்கத்துடன் “ஓகே” என்றவள் அப்படியே சிராஜை நகர்ந்து கொள்ள சொன்னாள்.
“ஏதாவது ஏடாகூடமாய் பேசினாய் அவ்வளவுதான் ஜாக்கிரதை” என்பது போல் ஆள்காட்டி விரலால் என்னை எச்சரித்துக் கொண்டே அங்கு வந்திருக்கும் மற்றவர்களை வரவேற்க நகர்ந்து கொண்டான்.
அந்த புல்வெளி மைதானத்தில் எங்களை சுற்றி இருந்தவர்கள் கையில் மது பாட்டில் கோப்பைகளை வைத்துக்கொண்டு அங்கே ஒலித்துக் கொண்டிருந்த இசையில் லயித்துக்கொண்டும், மும்முரமாக பேசிக் கொண்டும் இருந்தனர்.
எங்கள் அருகே இருந்த சிலர் என்னையும் ஜெனியையும் ஓரக்கண்ணால் நோட்டம் விட்டார்கள். நான் என்ன பேசப் போகிறேன் என புரியாமல் ஜெனியும் மிரட்சியுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா?”
“சாரி! நாம இதுக்கு முன்னாடி எங்காவது மீட் பண்ணி இருக்கோமாங்க! நிறைய பேரை மீட் பண்ணி இருக்கிறதுனால, எல்லோரையும் ஞாபகம் வச்சிக்கிறது கஷ்டமா இருக்கு!”
“நிஜமா என்னை தெரியலையா?”
நான் அவள் அந்த ஹைதராபாத் சம்பவத்தை நினைவில் வைத்திருக்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன்.
“ஏதாவது ஹின்ட் கொடுங்களேன் ப்ளீஸ்”
“ஒரு காலத்தில் நான் உங்களை கண்மூடித்தனமாக காதலித்திருந்தேன்”
எப்படி சொன்னேன் என எனக்கே தெரியவில்லை.
கண்கள் விரிய அதிர்ச்சியாய் என்னை பார்த்தாள்.