இந்தக் கதையில் வரும் நடிகையின் பெயரை மானநஷ்ட வழக்குகள் வாங்காமல் இருக்கும் பொருட்டு தவிர்த்து விடுகிறேன். அதே சமயம் கதை முழுக்க நடிகை என்று மட்டுமே நான் அவளை குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் கதையில் உயிரோட்டம் இருக்காது. எனவே அவளுக்கு நான் கற்பனையாக ஜெனி என்று பெயரிடுவதென தீர்மானித்துள்ளேன்.
ஜெனி என்பது ஜெயவர்த்தினி என்பதன் சுருக்கமாகவோ அல்லது ஜெனிஃபர் என்பதன் சுருக்கமாகவோ இருக்கலாம். அவளின் கல்லூரி நண்பர்கள் மத்தியில் அவள் அவ்வாறே அழைக்கப்படுவதாக ஒரு முறை என்னிடம் சொல்லியிருந்தாள்.
பூனேவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த அவள் மகாராஷ்டிரா மாநில கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவளாக அறிவிக்கப்பட்டிருந்தாள். அது அப்போதைய செய்தித்தாளிலும் வந்திருந்தது.
அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்களை இந்திய சினிமாத்துறை பட்டுக்கம்பளம் வீசி வரவேற்றுக் கொண்டிருந்த காலம் அது. அதற்கேற்றாற்போல் ஜெனியும் சினிமா துறையில் சாதிக்க விரும்புவதாக பெண்களுக்கான ஆங்கில மாத இதழ் ஒன்றில் தன்னுடைய பேட்டியின் போது சொல்லி இருந்தாள்.
புதிய நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்து மக்களின் தீரா கலை தாகத்தை தீர்த்துக் கொண்டிருந்தது தமிழ் திரையுலகம்.
பூனேவோ அல்லது புவனேஷ்வரோ, இந்தியாவில் எந்தவொரு அழகிப்போட்டியில் யார் பட்டம் வென்றாலும் அவர்களின் கலைப்பயணம் தமிழ் திரையுலகில் இருந்துதான் தொடங்க வேண்டும் என தீர்மானித்திருப்பார்கள் போல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்.
கல்லூரி படிப்பை முடித்த கையோடு ஜெனியும் தனது திரையுலக பயணத்தின் முதல் அடியை ஒரு தமிழ் படம் மூலம்தான் எடுத்து வைத்தாள்.
‘ஆ’வில் தொடங்கி ‘ன்’னில் முடியும் அந்த படத்தில் மக்கள் மனதில் ஒரு கதாநாயகனாக இடம் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த முன்னாள் நடன இயக்குனர் ஒருவருடன் ஜோடியாக நடித்திருந்தாள். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஒரு மெல்லிசை, இரண்டு ரொமான்ஸ் மற்றும் இரண்டு குத்து பாடல்கள்.
எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருந்தது. விழாக்களின் போது நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியிலும் கல்லூரி ஆண்டு விழாக்களிலும் அப்படத்தின் குத்தாட்ட பாடல்கள் தவறாது இடம் பிடித்திருந்தன.
எங்கள் கல்லூரியின் ஆண்டு விழாவின் போதும் நான்கு சீனியர் மாணவ மாணவியர் அப்போது அப்பாடலுக்கு நடனமாடியிருந்தனர். எங்கள் கல்லூரி விடுதியில் இருந்து இருபது கிலோமீட்டர்கள் தள்ளி இருந்த ஸ்ரீனிவாசா தியேட்டரில் நானும் குமரேசனும் அப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம்.
திரைப்படம் வந்து ஒரு மாதத்திற்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக அன்றைய தினசரி நாளிதழ் ஒன்றில் ஒரு பக்க அளவிற்கு விளம்பரம் செய்திருந்தார்கள். படம் பார்த்துவிட்டு பஸ்ஸில் வரும் போதெல்லாம் எனக்கு ஜெனியின் நினைப்புதான்.
அதுவும் அந்த ரொமான்ஸ் பாடலுக்கு அவள் கொடுத்திருந்த நுட்பமான முகபாவனையும் மர்மமான புன்னகையும் திரும்பத் திரும்ப என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டே இருந்தது. நாங்கள் வந்து கொண்டிருந்த பேருந்திலும் அப்படத்தின் பாடல்களையே ஒலிக்க விட்டிருந்தார்கள்.
பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் கண்டதும் காதல் என்பதுதான் எழுதப்படாத விதியாக இருந்தது.
அம்மாதிரியான திரைப்படங்களையும் நான் பெரும்பாலும் பார்த்து தொலைத்ததன் விளைவோ என்னவோ தெரியவில்லை. திரைப்படத்தில் அவளை, அதாவது ஜெனியை, பார்த்தவுடன் எனக்கு அவள் மேல் ஒரு காதல் பிறந்து விட்டது.
உண்மையில் அதற்கு முன் நான் யாரையும் காதலித்தது இல்லை. என் நண்பர்கள் சிலர் காதலிக்காக ரத்தத்தில் கடிதம் எழுதியெல்லாம் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இது என்ன காதல்? அது எந்த மாதிரியான உணர்வு? என்றே எனக்கு புலப்படாது.
எனக்கு காதல்தான் புலப்படாத ஒன்றே தவிர காமம் புலப்படாதது இல்லை. விடுதியில் எங்களுடைய அறையில் கட்டு கட்டாக டெபோனெய்ர் மற்றும் பிளேபாய் இதழ்களை தேவையான அளவு வாங்கி குவித்து இருந்தோம். அது பற்றாக்குறைக்கு இருபதுக்கும் மேற்பட்ட சரோஜாதேவி நாவல்கள் எங்கள் அறையில் இருந்தது.
அறைக்கு வந்ததும் கையோடு நான் வாங்கி வந்த கேசட்டை என்னுடைய மியூசிக் பிளேயரில் போட்டு ஒலிக்க விட்டேன். பாடலை கேட்க கேட்க இடுப்பை வளைத்து வளைத்து ஆடும் ஜெனியின் முகமே என் நினைவுக்கு வந்தது.
காலையில் படித்து முடித்த தினசரி நாளிதழை எங்கோ தூக்கி எறிந்திருந்தான் குமரேசன். அதை தேடி கண்டுபிடித்தேன். வெள்ளிக்கிழமை தோறும் வரும் தினசரி நாளிதழுடன் கூடுதலாக இரண்டு இதழ்கள் சினிமா செய்திகளுக்கென்றே தனியாக வரும். அதில் ஒரு பக்க அளவிற்கு வந்த ஜெனியின் கவர்ச்சி புகைப்படமொன்றை பக்குவமாக கத்தரித்து என்னுடைய மேசையின் எதிரில் இருந்த சுவற்றில் ஒட்டி வைத்தேன்.
அதை ஒட்டிய நாள் முதல் பொழுது விடிந்ததும் நான் விழிக்கும் முதல் முகமாக ஜெனி இருந்தாள். தூங்கி எழுந்ததும் கண்களை மூடிக்கொண்டு தடவி தடவி நடந்து போய் எனது மேசையின் எதிரில் இருக்கும் ஜெனியின் போட்டோவில்தான் கண்விழித்தேன்.
அவளின் கிரங்கடிக்கும் அழகும் மயக்கும் கண்களும் எனக்கு அந்நாளைக்கு தேவையான எல்லா புத்துணர்ச்சியையும் கொடுப்பதாக நம்பினேன்.
குமரேசனும் ஒரு நாள் எனக்கு போட்டியாக வேறு ஒரு நடிகையின் புகைப்படத்தை கத்தரித்து அவனுடைய புத்தக மேசையின் எதிரில் ஒட்டிக்கொண்டான்.
ஆனால் அவன் என்னைப் போல காலையில் எழுந்ததும் அவள் முகத்தில் கண் விழித்ததெல்லாம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் மாதத்திற்கு ஒருமுறை நடிகை மாற்றிக் கொண்டே இருந்தான். அப்போதைக்கு எந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடுகிறதோ, அப்படத்தில் நடித்த நடிகையின் படத்தை கத்தரித்து ஒட்டிக் கொள்வான்.
ஊருக்கு செல்வதற்கு பேருந்து நிலையத்தில் ஒரு சமயம் காத்திருந்தபோது ஜெனி என்ற பெயரில் மாத இதழொன்று என் கண்ணில் பட்டது. ஓடிப்போய் வாங்கி கொண்டேன். அந்த பத்திரிகை முழுக்க ஜெனி பற்றிய செய்திகளே நிரம்பி இருந்தன.
அவளின் கல்லூரி வாழ்க்கை குறித்தும், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் குறித்தும், ஏராளமான செய்திகள் அதில் கொட்டி கிடந்தன.
நான் காதலிப்பவளை பற்றி எப்படி தெரிந்து கொள்ளப் போகிறோம் என்பது பிடிபடாமல் இருந்த எனக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது.
ஒரு நாள் முகுந்தனிடம் நான் ஜெனியை எந்த அளவிற்கு காதலிக்கிறேன் என்பதை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அவன் ஜெனி என்ற பெயர் கொண்ட ஆசிரியை ஒருவரை நான் காதலிப்பதாக நினைத்துக் கொண்டு, இது ஒரு பொருந்தா காதல் என்றான். ஆசிரியருக்கும் மாணவனுக்கும் அப்படி ஒரு உறவு முறை வருவது தவறு என்று வியாக்கியானம் பேசினான்.
பிறகு அது ஆசிரியை ஜெனி அல்ல நடிகை ஜெனி என்பதை புரிய வைத்ததும் சொல்லக்கூசும் கெட்டவார்த்தை ஒன்றால் என்னை திட்டி விட்டு சென்றான்.
⟢ ⟢ ⟢
அந்த டான்ஸ் மாஸ்டருடன் நடித்த முதல் படத்திற்கு பிறகு வரிசையாக ஐந்து படங்களில் நடித்திருந்தாள் ஜெனி. அவளின் முதல் படத்திற்கும் ஐந்தாவது படத்திற்கும் அவளது உடலமைப்பில் நிறைய மாற்றங்கள் இருந்ததாக சினிமா பத்திரிகைகள் கிசுகிசுத்தன.
குடும்ப கதைகளுக்கு பெயர் போன மாதாந்திர பத்திரிக்கை ஒன்று அவள் முகத்தில் சில அறுவை சிகிச்சைகளை செய்து தனது தடிமனான மூக்கின் அளவை குறைத்துவிட்டாள் என்று எழுதியிருந்தது.
தொப்பி போட்ட இயக்குனர் ஒருவரால் நடத்தப்படும் பத்திரிகையோ செழுமையான அவளது தொடைகளுக்கு காரணம் ஊசி மூலம் உள்ளே ஒயின் செலுத்தப்பட்ட ஆஸ்திரேலியன் ஆப்பிள்களை சாப்பிடுவதால்தான் என்று ஒரு ஆராய்ச்சி முடிவை போல் எழுதியிருந்தது.
ஒரு நாள் திருவண்ணாமலையில் இருக்கும் எலைட் ஜுவல்லரியின் திறப்பு விழாவிற்கு ஜெனி வரவிருப்பதாக செய்தி அறிந்து நானும் முகுந்தனும் யமஹா பைக்கில் எண்பது கிலோமீட்டர் பயணம் செய்து போயிருந்தோம்.
நான் அவளைப் பார்த்து ஒரு ஆட்டோகிராப் வாங்கிட வேண்டும் அப்படியே முடிந்தால் நீங்கள் என் தேவதை என்றோ அல்லது என் கனவு கன்னி என்றோ எதையாவது அவளிடம் பேசி எனது அன்பை வெளிப்படுத்தி விடுவது என்ற முடிவோடு சென்று இருந்தேன்.
திருவண்ணாமலை சாலை முழுக்க நகைக்கடைக்காரர்கள் ஜெனிக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார்கள். ஜுவல்லரி அமைந்திருக்கும் வீதியில் நிரம்பியிருந்த கட்டுக்கடங்காத ரசிக குஞ்சுகளின் கூட்டம் ஜெனியின் பெயரை விடாமல் கத்திக் கொண்டிருந்தது.
கூட்டத்தை பார்த்து பயந்து போயிருந்தான் முகுந்தன்.
“இங்கே பார் இங்கே முண்டியடித்து போகின்ற எல்லோரும் உன்னை போல அவளை காதலிப்பதாக சொல்லுகிறவர்கள்தான்!” என்று என்னை ஏளனம் செய்தான்.
அங்கே ஜுவல்லரி அருகே குவிந்திருந்த போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.
“எங்கிருந்து வந்தார்கள் இவ்வளவு பயல்களும்? இவர்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லையா?”
நான் புலம்பிக் கொண்டிருந்ததை பார்த்து சிரித்தான் முகுந்தன.
அவர்களும் நம்மை போல வேலையில்லாத வெட்டிப் பயல்கள்தான் என்றும் அதனால்தான் இந்த கொளுத்தும் வெயிலிலும் யாருடைய கடை திறப்பு விழாவிற்கோ வரும் ஒரு நடிகையை காண நாக்கை தொங்க போட்டு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றென்னை சிறுமைப்படுத்தினான் முகுந்தன்.
“அவள் ஒன்றும் சாதாரண நடிகை அல்ல எனக்கு, என்னுடைய காதலி. முன் ஜென்மத்தில் நாங்கள் இருவரும் உயிருக்கு உயிரான காதலர்கள்” என்றேன் நான் மிகவும் சீரியஸான முகத்துடன்.
மீண்டும் என்னை பார்த்து சிரித்தான். நான் சொன்னதை அவன் நம்பியதைப் போல எனக்கு தோன்றவில்லை.
சற்று நேரத்தில் டொயோட்டா கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்கி சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் வழியாக மேலேறி நேராக கடைக்குள் சென்றுவிட்டாள் ஜெனி. அப்படியே போகிற போக்கில் ரசிகர் கூட்டத்தை பார்த்து கை அசைத்து சென்றிருந்தாள்.
அவ்வளவுதான் அதுவரை ஜெனி ஜெனி என்று ஆரவாரம் செய்து கொண்டிருந்த கூட்டம் தற்போது முண்டியடித்துக் கொண்டு கடைக்குள் புக முயற்சி செய்ய, தயார் நிலையில் இருந்த போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைந்து போக சொல்லியது.
ஜெனியை எப்படியும் பார்த்து விடுவது என்ற மனநிலையில் இருந்த என்னிடம் இன்னும் இரண்டு மாதங்களில் இறுதியாண்டு என்று தேர்வு முடிந்ததும் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக என் மாமா சொல்லி இருக்கிறார் ஆதலால் இந்த கூட்ட நெரிசலில் நசுங்கி சாக எனக்கு விருப்பமில்லை எனக் கூறி தெருமுனையில் தன்னுடைய யமஹா பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அதன் மேலேறி அமர்ந்து கொண்டான் முகுந்தன்.
ஜென்மம் கடந்து என் காதலியை பார்க்க வந்திருக்கும் எனக்கு இந்த அற்ப கூட்டத்தை பார்த்து பின் வாங்கலாமா என்று தோன்றிற்று. ரசிக கூட்டத்தினரிடையே கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைக்கடையை நோக்கி முன்னேறினேன்.
ஆரம்பத்தில் முன்னேறுவதற்கு கடினமாக இருந்த எனக்கு கூட்டத்தினுள் செல்லச் செல்ல சுலபமாக இருந்ததைப் போல் உணர்ந்தேன். சிறுக சிறுக முன்னேறிய என்னை ஒருகட்டத்தில் அந்த கூட்டமே உயிரெழுத்து நகைக்கடையின் வாசல் அருகே தள்ளி விட்டது.
அவ்வளவு தூரம் எச்சரிக்கை விடுத்தும் நகைக்கடை உள்ளே நுழைய முயல்பவர்களை கடையின் நுழைவாயில் முன் இருந்த போலீஸ்காரர்களும் பாதுகாப்பிற்காக வந்திருந்த பவுன்சர்களும் மூங்கில் கம்புகளால் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
அடி வாங்கிக் கொண்டிருந்த ரசிக சிகாமணிகளுள் ஒருத்தன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என்பது போல என்னை இழுத்து அவர்கள் முன்னே தள்ளி விட்டு பின் நகர்ந்து கொண்டான்.
⟢ ⟢ ⟢
யமஹா பைக்கை மேடு பள்ளங்களில் விடாமல் பக்குவமாக ஓட்டிச் சென்றான் முகுந்தன். தோள்பட்டை கழன்று விடுவது போன்ற வலி எனக்கு. முகுந்தன் மேல் முழுதாக சாய்ந்து கொண்டேன். இருந்தாலும் என்னால் வெகு நேரம் பைக்கில் உட்கார்ந்து நிலையில் செல்ல முடியவில்லை. இடுப்பு எலும்பு வேறு உயிர் போகும் அளவிற்கு வலியை கொடுத்தது. ஒரு தடிப்பயல் அடித்த அடியை தடுக்க முயன்றதில் வலது ஆள்காட்டி விரலில் வாங்கிக் கொண்டேன்.
பேனா பிடித்து எழுதுவதில் ஏதாவது சிரமம் இருக்குமா என்று கேட்டதற்கு இறுதித் தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது என்றும் அதுவரை இது போல வேறு எங்காவது சென்று அடி வாங்காமல் இருந்தால் நிச்சயமாக என்னால் தேர்வு எழுத முடியும் என்றான் முகுந்தன்.
போகும் வழியில் இளநீர் கடை ஒன்றில் நிறுத்தி இளநீர் குடித்துக் கொண்டிருந்தோம். ரோட்டில் டொயோட்டா கார் ஒன்று மின்னல் வேகத்தில் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நகை கடைக்கு ஜெனி வந்திறங்கிய காரை போலவே இதுவும் இருந்தது. சந்தேகத்தில் ஜெனி உள்ளே இருக்கிறாளா என பார்வையை காருக்குள் ஓடவிட்டேன்.
உள்ளே டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவள் சாட்சாத் ஜெனிதான். வெள்ளை வெளேரென்ற தேகம். நன்கு ஒப்பனை செய்யப்பட்ட முகத்தில், சிவப்பு நிற உதட்டுச்சாயம். கருப்பு கண்ணாடியும் கருப்பு மிடியும் அணிந்திருந்தாள். அப்படியே கழுத்தில் மெலிதான வைர நெக்லஸ் ஒன்றும் மின்னியது.
தேங்காய் குவியல் அருகே ஒரு கல்லின் மீது அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எனக்கு வலியெல்லாம் பறந்து போய்விட்டது. இரு கைகளை ஆட்டிக்கொண்டு ஜெனி ஜெனி என்று கத்தியபடி எம்பி குதித்தேன்.
என்னை கவனித்திருப்பாள் போல ‘ஹாய்’ என்று கை அசைத்தாள். இளநீர் கடைக்காரரிடம் காசு கொடுத்துவிட்டு முகுந்தன் திரும்பி வருவதற்குள் டொயோட்டா கார் வெகு தூரம் சென்று மறைந்து விட்டது.
நான் எவ்வளவு சொல்லியும் முகுந்தன் என்னை நம்பவில்லை. ஜெனியின் மீதுள்ள பைத்தியத்தில் எனக்குப் பார்க்கும் யாவரும் ஜெனியை போல தெரிவதாகவும் போலீஸ் கொடுத்த அடியில் ஏதாவதொன்று என் மண்டையில் விழுந்திருக்கிறதா என்று யோசித்துப் பார்க்குமாறும் அறிவுறுத்தி கொண்டே வண்டியை ஓட்டிச் சென்றான்.
அடுத்த நாள் தினசரிகளில் ஜெனி நகை கடைக்கு வந்து சென்ற செய்தி வெளியாகியிருந்தது. நகைக்கடை முதலாளி வாய் முழுவதும் பல்லை காட்டிக் கொண்டு ஜெனியுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்திருந்தார். அதில் ஜெனி கருப்பு மிடியும் வைர நெக்லசும் அணிந்திருந்தாள்.
தொடரும்..