டாக்டர் தேவசகாயம் – பகுதி 3

அப்போதுதான் கவனித்தேன். டாக்டர் அறையிலிருந்து ஒவ்வொரு நோயாளியும் சராசரியாக மூன்று நிமிட இடைவெளியில் கையில் மருந்து சீட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

டாக்டர் தேவசகாயத்துக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை போலிருக்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக அழைத்து பார்க்க வேண்டியவர், பேட்ச் ப்ராசஸிங் போல ஐந்து ஐந்து பேராக அழைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் அவர் அறை ஒருவேளை பெரியதாக இருக்கும்; அதனால்தான் அனைவரையும் தைரியமாக உள்ளே வரச் சொல்லி மருத்துவம் பார்க்கிறார். எனவே அவர்களின் அந்தரங்கத்திற்கு ஒரு குறையும் வராது என்று நம்பி இருந்தேன். ஆனால் அது நான் அவர் அறைக்குள் நுழைந்த நொடியே பொய்த்துப் போனது.

ஒரு பெஞ்சில் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நான்கு பேராக நாங்கள் அமர்ந்திருந்தோம்.

எதிரே இருந்த மேசைக்கு இந்தப் பக்கம் ஒரு பெண் நோயாளியும், அந்தப் பக்கம் தேவசகாயமுமாக அமர்ந்திருந்தனர். எங்கள் ஐந்து பேரில் அவர் பெண் என்பதால் முன்னுரிமை கொடுத்திருந்தார்.

அந்தப் பெண் தனக்கு இரண்டு நாட்களாக சளி இருப்பதாகவும், தற்போது சளியோடு இருமலும் சேர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தாள். தேவசகாயம் நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் லைட் அடித்துப் பார்த்தார். பிறகு பெண்மணியின் இதயத்துடிப்பைப் பார்த்துவிட்டு சில மாத்திரைகளை எழுதி, அதில் எந்த மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் என்று விளக்கம் அளித்து, வளாகத்தினுள் சற்று தள்ளி அமர்ந்திருந்த மெடிக்கலில் போய் வாங்கிக் கொள்ளுமாறு அனுப்பி வைத்தார்.

என்னுடைய அருகில் டோக்கனை வைத்திருந்தவன் அடுத்து நான் என்று அவனாகவே முந்திக் கொண்டான். அவனுக்கும் கிட்டத்தட்ட அதே பிரச்சனைதான்; ஆனால் இவன் முதலில் இருமல்தான் வந்தது என்றும், இரண்டு நாட்களுக்குப் பிறகு சளியும் வந்து ஒட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தான்.

அவனுக்கும் இதற்கு முன்பு செய்ததைப் போலவே வாய்க்குள் டார்ச் அடித்துப் பார்த்தார். பிறகு இதயத்துடிப்பைச் சரிபார்த்து மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.

அடுத்தது நான்.

எனக்கு எல்லோர் முன்னிலையிலும் என்னுடைய மூளைப் பிரச்சனையை வெளிப்படையாகச் சொல்வது ஒரு கௌரவக் குறைச்சலாக இருந்தது. அவரிடம் நான் கடைசியாகப் பார்த்துக் கொள்கிறேன் என்றேன்.

டாக்டர் எனக்கு ஏதோ பாலியல் பிரச்சனை இருக்கிறது என நினைத்திருப்பார் போல. ஒரு மார்க்கமாக என்னைப் பார்த்திருந்தார்.

அடுத்தடுத்து இரண்டு பேரும் டாக்டரிடம் தங்களுடைய ரோகங்களைச் சொல்லி மருந்து சீட்டு வாங்கிச் சென்றார்கள்.

நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்கு சங்கடமாய் இருக்கக் கூடாது என்றெண்ணி, பார்வையை மாற்றி அறையில் ஒட்டப்பட்டிருந்த வசனங்களில் ஓட விட்டேன்.

அறை முழுக்க தேவ வசனங்கள் நிரம்பி இருந்தது. மருந்து மாத்திரையால் ஒருவரை இவர் குணமாக்கிறாரோ இல்லையோ, இந்த தேவ வசனங்களை வைத்தாவது ஒருவரை இவர் குணப்படுத்திவிடுவது நிச்சயம்.

கடைசியாக என் முறை வந்ததும் நான் போய் மேஜையில் அமர்ந்து கொண்டேன்.

“சொல்லுங்க… என்ன பிரச்சனை?”

“கொஞ்ச நாளா தலைவலி இருக்கு டாக்டர்.”

“எவ்வளவு நாளா இருக்கிறது?” என்றார் சிறு புன்னகையுடன்.

இந்தத் தலைவலியைச் சொல்வதற்கா இவன் இவ்வளவு சங்கடப்பட்டான் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.

“ஒரு வாரமா இருக்குது டாக்டர். காலைல ஆபீஸ் போன உடனே ஒரு அரை மணி நேரம். அதே மாதிரி ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் ஒரு அரை மணி நேரம் தலைவலி இருக்கும்.”

“ஓகே. மைகிரேன் இருக்கு உங்களுக்கு. எப்படி போறீங்க ஆபீஸ்க்கு?”

“என்னோட கார்லதான் போயிட்டு இருக்கேன் டாக்டர்.”

“நம்ம ஊர்ல இருக்கிற ட்ராபிக் நெரிசலுக்கு, இப்படி சின்னதா ஒரு தலைவலி கூட வரலனா எப்படி! ஆமா… எத்தனை வருஷமா சென்னைல கார் ஓட்டுறீங்க?”

“எதுக்கு கேக்குறீங்க?”

“இல்ல… இந்த டிராபிக் உங்களுக்கு இந்நேரம் பழகி இருக்கணுமே!”

“நான் மூணு மாசத்துக்கு முன்னாடிதான் காரே வாங்கினேன் டாக்டர்.”

“ஓ… கரெக்ட். அப்போ உங்களுக்கு புதுசா டிரைவ் பண்றதுனால ஒரு ஆங்ஸிட்டி இருக்கும். அதோட இந்த டிராபிக் ஜாமும் சேர்ந்து உங்களுக்கு இந்தத் தலைவலியை கொடுத்திருக்கு.”

என் தலைவலியின் மூல காரணத்தை கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்தில் மருந்து சீட்டில் சில மாத்திரைகளை எழுதத் தொடங்கினார் தேவசகாயம்.

டாக்டரிடமும் வக்கீலிடமும் உண்மையை மறைக்க கூடாது என்ற கூற்றுப்படி எனக்குள் இருந்த மனபிராந்தியை எப்படியாவது அவரிடம் கொட்டி விடுவது என்ற முடிவில் இருந்தேன். 

“டாக்டர் என்னோட ஆபீஸ் கலீக் ஒரு ஒருத்தர் ரொம்ப நாளா தலவலில கஷ்டப்பட்டு இருந்தார். ஆரம்பத்துல அவர் அத சீரியஸா எடுத்துக்கல, பிறகு தலவலி ரொம்ப சிவியராக ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி, டெஸ்ட் பண்ணதுல அவருக்கு ப்ரைன் ட்யூமர் இருக்கிறது தெரிய வந்தது. ஒரு வாரத்துக்கு முன்னாடி அவர் ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல இறந்துட்டார்!” 

நான் குரல் மங்கி போய் வாயில் கை வைத்துக் கொண்டு அழாத குறையாக சொன்னேன்

“சரிங்க,  அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்!”

“எனக்கும் அந்த மாதிரி பிரைன் ட்யூமர் ஏதாவது இருக்குமான்னு பயமா இருக்கு டாக்டர். எனக்கு தலவலியை விட, இந்த பயம்தான் ரொம்ப ரொம்ப மன உளைச்சலை தருது டாக்டர்!” கெஞ்சாத குறையாக  அவரிடம் சொன்னேன்.

தேவசகாயம் சிரிக்க ஆரம்பித்து விட்டார். அவர் என் கவலைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டவர் போல் தெரியவில்லை.

“ஒரு வியாதி இவங்களுக்குத்தான் வரும் இவங்களுக்கு வராது என்று யாராலயும் உத்தரவாதம் கொடுக்க முடியாதுங்க” என்றவர் மேலும் தொடர்ந்தார். 

“நான் முப்பது வருஷமா வைத்தியம் பார்த்துட்டு இருக்கேன்! எனக்கு நாளைக்கே அந்த வியாதி வரணும்னு விதி இருந்தா, அதை யாரால மாத்த முடியும். அதனால நீங்க எதிர்காலத்தை பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க! இப்போ உங்களுக்கு இருக்கிறது ஒரு சாதாரண தலைவலி தான்” அப்படியே கடமைக்கென எதோ ஒரு மருந்தை எழுதி தந்து என்னை வழியனுப்ப பார்த்தார்.

எனக்கு அவர் அறையை விட்டு செல்வதற்கே மனமில்லை.

“இது சாதாரண தலைவலி தானே டாக்டர்!” 

“நூறு சதவீதம்  இது சாதாரண தலைவலி தான்”

நான் திருப்தியே இல்லாமல் மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு வெளியேற முயன்றேன்.

“ஒரு நிமிஷம் அந்த மருந்து சீட்டை குடுங்க” என்று அதை வாங்கி சரசரவென ஏதோ எழுத ஆரம்பித்தார் டாக்டர்.

“எனக்கு தெரியும், உங்களுக்கு இருக்கிறது சாதாரண தலவலிதான்னு.  கார் ஓட்டறதாலையோ இல்ல டிராஃபிக்னாலையோ வர்றது. ஆனா உங்க மனசுக்குள்ள இருக்கற நோய்க்கு மருந்து இதான்” என்று அடித்து எழுதப்பட்ட மருந்து சீட்டு நீட்டினார். 

“இது என்ன டாக்டர்?” புரியாமல் விழித்தேன் நான்.

“எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கச் சொல்லி இருக்கேன். அந்த வசதி நம்ம கிளினிக்ல இல்ல. இங்க பக்கத்துல ஆல்வின் ஸ்கேன் சென்டரோட பிரான்ச் ஒன்னு இருக்கு. சிட்டியில நம்பர் ஒன் அவங்கதான். இருபத்திநாலு மணி நேரமும் திறந்திருப்பாங்க போய் எடுத்துட்டு வாங்க”

என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல் மேசையிலிருந்த மணியொன்றை அழுத்தினார் டாக்டர். வெளியில் இருந்து நர்ஸ் அடுத்த ஐந்து நபர்களை கூப்பிட்டபடி காத்திருப்போர் அறைக்கு ஓடிச் சென்றாள்.

நான் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து மீண்டும் கிளினிக்கிற்கு வருவதற்குள் மணி பத்து ஆகிவிட்டது. காத்திருப்போர் அறையில் யாரும் இல்லை.

பார்க்க ஆளில்லாத போதும் ஏதோ ஒரு ஊமை நாடகம் ஒன்று தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஓர் ஆணும் பெண்ணும் கொஞ்சி பேசி காதலித்துக் கொண்டிருந்தார்கள்.

செக்யூரிட்டியிடம் நான் வந்த விஷயத்தை சொல்லி உள்ளே வராண்டாவில் இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன்.

டாக்டர் உள் நோயாளிகள் பிரிவிற்கு ரவுண்ட்ஸ் சென்றிருப்பதாக நர்ஸ் சொல்லியிருந்தார். ஒரு அரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் வராண்டாவிற்கு வந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

அறைக்குள் செல்லாமலேயே என் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி படித்துப் பார்த்தார்.

“நான் சொன்னல்ல. நான் சொன்னததான் இந்த ரிப்போர்ட்டும் சொல்லுது. உங்களுக்கு மூளைல எந்த பிரச்சினையும் இல்ல! யூ ஆர்  ஆல் குட்” என்றார் சிரித்துக்கொண்டே.

எனக்கு இப்போதுதான் முழு திருப்தி வந்தது. உயிர் பயம் விலகிய  சந்தோஷத்தில் மண்டையை நங்நங்கென ஆட்டினேன்.

“இனி உங்களுக்கு இருக்கற தலவலியும் தானாக போய்விடும்” என்றென்னை அனுப்பிவைத்தார்.

அவர் சொல்வதும் உண்மைதான் அதுவரை இருந்த தலைவலி இப்போது காணாமல் போயிருந்தது. ஆனால் புது தலைவலி ஒன்று வந்து தொற்றிக் கொண்டது. நான் ஸ்கேன் சென்டரில் ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்து இருந்தேன்.

உமாவிடம் தலைவலிக்கு ஐந்தாயிரம் செலவழித்தேன் என்று எப்படி சொல்வதென தெரியாமல் முழித்துக் கொண்டே வீட்டிற்கு கிளம்பினேன்.

—•◦ முற்றும் ◦•—

Leave a Comment