டாக்டர் தேவசகாயம் – பகுதி 2

தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை முடிந்ததும் ஊமை நாடகம் மீண்டும் தொடர்ந்து. அளவுக்கதிகமாக ஒப்பனை செய்யப்பட்ட அந்த மூன்று பெண்களின் முகத்தையே திரும்ப திரும்ப திரையில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது.  மீண்டும் அத்தைக்காரி  ஏதேதோ சொல்லி அவர்களை குமுறி குமுறி அழ வைக்காமல் விடுவதில்லை என்ற முடிவோடு  இருந்தாள்.

வரும் ஆத்திரத்திற்கு எனக்கு அந்த டீவி பெட்டியை தூக்கி போட்டு உடைத்து விடலாமா எனத் தோன்றியது. கடந்த அரை மணி நேரமாக அந்த நான்கு பெண்களை மட்டும் மாற்றி மாற்றி காட்டிக் கொண்டிருந்தால் யாருக்குத்தான் கோவம் வராது. 

பார்வையை டீவியிலிருந்து விலக்கி ரிசப்ஷன் அறை முழுவதும் ஓட விட்டேன். அவ்விடமே ஒரு ஜெபக்கூடம் போல் அலங்கரித்து வைத்திருந்தார்கள். இடதுபுற சுவற்றில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மர சிற்பம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதை தவிர அரை முழுக்க தேவ வசனங்கள் அடங்கிய போஸ்டர்களாக காட்சியளித்தது.

“சோர்ந்தவர்களும் பாரம் சுமப்பவர்களும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்றொரு வசனம் எனக்கு மட்டுமல்லாமல் இங்கிருக்கும் எல்லோருக்கும் பொருத்தமானதாக இருந்தது.

அதன் அருகே “கர்த்தரை நம்பு; உன் முழு இருதயத்தோடும் அவர் மேல் சார்ந்திரு” மற்றும் “தேவனுடைய சமாதானங்கள் உங்கள் இருதயங்களை ஆளட்டும்” என அடுத்தடுத்து இரண்டு வசனங்கள் இருந்தன.

அப்படியே அந்த வசனங்களுக்கு அடியில் இந்த வசனங்களை உங்களுக்கு வழங்குவோர் “கார்டியோ கேர்” என்பது போல ஒரு பிபி மாத்திரை விற்பனை செய்யும் கம்பெனியின் விளம்பர போஸ்டரை ஒட்டி வைத்திருந்தார்கள்.

தேவன் ஆளக்கூடிய இருதயம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது தற்செயலாகவோ இது நிகழ்ந்திருக்கலாம்.

ஆர்வமிகுதியால் அங்கு சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்த வசனங்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்.

“அவர் என் எலும்புகள் அனைத்தையும் காக்கிறார். அவைகளில் ஒன்றும் உடைக்கப்படாது“ என்றும், அப்படியே ”என் எலும்புகள் கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைகின்றன” என்று மற்றொன்றும் எலும்பு துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்தது.

ஆனால் நான் இருதயத்திற்காகவோ அல்லது எலும்பு பிரச்சனைக்காகவோ வந்தவன் அல்ல. எனக்கு மூளையில் தான் ஏதோ பிரச்சனை. எனவே என்னை ஆசுவாசப்படுத்த மூளை சம்பந்தமான  ஏதேனும்  வசனம் இருக்குமாவென்று தேடிப்பார்த்தேன்.

டீவியில் ஓடிக்கொண்டிருக்கும் ஊமை நாடகத்தையோ அல்லது மொபைல் போனையோ பார்த்து கொண்டிராமல் சுற்றி இருக்கும் தேவ வசனங்களை தேடி தேடி படித்துக் கொண்டிருக்கும் என்னை அங்கிருந்தோர் விநோதமாய் பார்த்திருக்கக்கூடும்.

அப்படி தேடிப் படித்ததில் மூளை சம்பந்தமாக ஒன்றும் கிடைக்க வில்லை. ஆனால், இரத்தம் சம்பந்தமான பல வசனங்களை அங்கு காண முடிந்தது உதாரணத்திற்கு “இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது” என்ற போஸ்டர் ஒன்று எனக்கு பின்புற சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.

தற்போது செக்யூரிட்டி கடைசியாக எந்த டோக்கன் எண்ணை உள்ளே அனுப்பி இருக்கிறார் என தெரியவில்லை. ஒரு வேளை நான் தேவ வசனங்களை படித்து கொண்டிருந்ததில் கவனக் குறைவாக அவருடைய அறிவிப்பை தவற விட்டுவிட்டேனோ என ஒரு சந்தேகம் எனக்குள் எழுந்தது.

அப்போது ஹாலுக்குள் நுழைந்த இருவர் நேராக கேட் அருகே சென்று செக்யூரிட்டியிடம் டோக்கனை காட்டிவிட்டு உள்ளே நுழைய முயற்சித்தனர்.

ஊமை நாடகம் பார்த்திருந்த அனைத்து நோயாளிகளும் சற்று சலசலத்தனர். அதெப்படி இங்கே வந்து எங்களுடன் காத்திருக்காமல் அவர்கள் மட்டும் நேராக உள்ளே செல்லலாம் என்றும் சிலர் குரல் எழுப்பினர்.

வந்த இருவரும் செக்யூரிட்டியின் காதில் ஏதோ கிசுகிசுக்க “சார் நீங்க டோக்கன் வாங்கிட்டு நேரா வீட்டுக்கு போய்டுவீங்க! அப்பறம் ஒருமணி நேரம் கழிச்சு, வந்த உடனே உள்ள போகணும்னா எப்படி சார்? வெயிட் பண்ணுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு அனுப்பறேன்” என்று அவர்களை காத்திருக்க சொல்லிவிட்டு அடுத்த ஐந்து பேரை உள்ளே அனுப்பினான்.

கிளினிற்கு உள்ளே செல்வதற்க்கும் வெளியே வருவதற்குமான ஒரே வழி அந்த இரும்பு கேட் போடப்பட்ட வழிதான். நீட்டி மடக்கக்கூடிய அந்த இரும்பு கேட் இருபுறமும் நன்றாக தள்ளி மடக்கி வைக்க பட்டிருந்தது. உள்ளே மருத்துவரை பார்த்து முடித்து, மருந்துகள் வாங்கிய கையோடு திரும்புவர்களை கண்டதும் ஹாலில் காத்து கொண்டு இருப்பவர்கள் அடுத்த அழைப்பு எப்போது வரும் என எதிர்பார்க்க துவங்கிவிடுவார்கள்.

வெளியே வந்து கொண்டிருந்தவர்களின் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிந்தது. நான் ரிசப்ஷன் ஹாலுக்கு வந்த சமயத்தில் உள்ளே சென்ற ஒருவரை கவனித்தேன். மங்கி குல்லாவும் ஸ்வெட்டரும் அணிந்து நடுங்கிக்கொண்டே உள்ளே சென்றவர் தற்போது டாக்டரை பார்த்து விட்டு திரும்பும்போது புத்துணர்வு பெற்றவரை போல் நடந்து வந்தார்.

அவர் மட்டுமல்ல பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என உள்ளே சென்று டாக்டர் தேவசகாயத்தை பார்த்து திரும்பிய அனைவரும் சுகவாசிகள் ஆகிவிட்டதை போல நான் உணர்ந்தேன்.    

திடுமென ஒரு கூட்டம் ஒரு ஆளை வெள்ளை வேஷ்டியில் சுற்றி தூக்கிக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தது. அவர்களுடன் “அய்யா எம்புருஷன காப்பாத்துங்கய்யா” என  பெண்ணொருத்தி தலையில் அடித்துக் கொண்டே ஓடி வந்தாள்.

செக்யூரிட்டியும் நர்ஸும் துரிதமாக செயல்பட்டனர். முதலுதவி அறையின் உள்ளே ஒரு படுக்கையில் அவரை பத்திரமாக வைக்க சொல்லிவிட்டு இரண்டு அறை தள்ளி இருந்த தள்ளி இருந்த டாக்டர் அறைக்குள் ஓடிப்போய் தகவல் தந்தாள் நர்ஸ்.

அதற்குள் அவரை தூக்கி கொண்டு வந்தவர்கள் முதலுதவி அறைக்குள் நெருக்கிக் கொண்டு நுழைந்திருந்தார்கள். 

அறைக்குள் இருந்த உறவினர் கூட்டத்தை பார்த்த டாக்டர் “கூட வந்தவங்க எல்லோரும் வெளியே போய் நில்லுங்க முதல்ல! இது என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க” என்று கத்தினார்.

உறவினர் கூட்டம் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு வெளியில் சென்று நின்றது. அவர் ஆணையிட்டபடியே ஒருவரும் ஹாஸ்பிடல் கட்டிடத்திற்குள் இல்லை. உள்ளே பாதிக்கப்பட்டவரின் மனைவி மட்டும் விம்மி கொண்டு நின்றிருந்தாள்.

முதலுதவி அறையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்களுடன் வந்த பெண்ணை எனக்கு முன்பாக இரண்டு வரிசை தள்ளி அமர வைத்திருந்தார்கள்.

முதலுதவி அறையைவிட்டு வெளியே வந்த டாக்டர் தேவசகாயம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களில் யாரேனும் இரண்டு பேரை மட்டும் அழைத்து வரச் சொல்லி இருந்தார்.

நான்கு பேர் ஓடிவந்த நின்றார்கள்.

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைய்யா!  எப்படியாவது காப்பாத்துங்கய்யா!”

“இங்க பாருங்க, விக்டிமுக்கு எழுவது சதவீதம் உடம்பெல்லாம் எரிஞ்சு போச்சு! பொழைக்கிறது ரொம்ப கஷ்டம்! நான் என்னால முடிஞ்ச வரைக்கும் மேலோட்டமான முதல் உதவியைத்தான் செய்திருக்கிறேன்”

 அவர்களிடத்தில் எந்த பதிலும் இல்லை. எனக்கோ சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டது.

“உங்களுக்கு நான் தான் ட்ரீட்மென்ட் பண்ணனும்னா நானே  பண்றேன். ஆனால், ஆள் போயிட்டார்னா நீங்க ஒரு பிரச்சனையும் பண்ணாம பாடிய வாங்கிகிட்டு போயிடனும்! பாத்துக்கோங்க!”

நம்பிக்கையான டாக்டர் எப்படியாவது காப்பாற்றி கொடுத்து விடுவார் எனற நம்பிக்கையில் வேறு எங்கும் செல்லாமல் அவரை ஆட்டோவில் வைத்து கூட்டி வந்திருந்தார்கள்.

இப்படி அவர் கை விட்டதும் நம்பிக்கை இழந்து செய்வதறியாமல் அவர்கள் நின்று கொண்டிருக்க, அந்த நால்வரிடமும் தன் வயிற்றுப் பகுதியை தடவி காண்பித்து “இந்த இடம் நல்லா எரிஞ்சு போச்சு! கிட்டத்தட்ட முடிஞ்சிடிச்சு! கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடுங்க அவங்க ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் பாத்துக்குவாங்க!” என்றார் டாக்டர்.

கண்ணீரும் கம்பலையுமாக வந்தவர்களுக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் உடைந்து போயிருக்கும். “அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு!” என்றால் என்ன அர்த்தம்? உடம்பு முழுக்க எரிந்து போனவனை யாரால் பிழைக்க வைக்க முடியும்? அப்படியே அவன் பிழைத்து வந்தாலும், அவனது உருக்குலைந்த உடலை வைத்து இனி எவ்வளவு காலம் வாழ முடியும் ஆதலால் அவன் இறப்பதே மேல் என நினைத்திருப்பார் போல டாக்டர் தேவசகாயம்.

அதுவரை அழுதுகொண்டிருந்த உறவினர்களும் அந்தப் பெண்ணும் அவர்களுக்குள்ளாகவே அமைதியான முறையில் பேசி ஒரு முடிவு எடுத்துக் கொண்டார்கள்.

டாக்டரின் அறிவுறுத்தலின்படி, அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பாதிக்கப்பட்டவரை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்.

நான் சென்ற வாரம் தான் என்னுடைய அலுவலக நண்பர் கணேசனின் மறைவிற்கு சென்று வந்திருந்தேன். மனிதவள பிரிவின் மேனேஜராக இருந்த அவர்தான் என்னை இறுதி சுற்றின் போது நேர்காணல் செய்தவர்.

வெளிப்படையாய் பேசுவார். பேச்சில் எப்போதும் ஒரு நகைச்சுவை இருக்கும். கடுமையான உழைப்பாளி. வருடா வருடம் நடக்கும் ஆண்டு விழாவில் எப்படியும் ஒரு அவார்டையாவது எங்கள் கம்பெனி முதலாளி கையால் வாங்கி விடுவார். அலுவலகத்தில் நாங்கள் எப்போதாவது பார்க்க நேர்ந்தால் பரஸ்பரம் விசாரித்துக் கொள்வோம். 

ஆறு மாதமாக அடிக்கடி தலைவலி என்று சொல்லி வந்தவர் அதற்கான மருத்துவம் பார்க்க நீண்டதொரு மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். பிறகு திடீரென ஒரு நாள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு வந்தது.

செய்தியை கேள்விப்பட்டு நான் மற்றும் அலுவலக நண்பர்கள் எல்லோரும் காரில் புறப்பட்டு போய் கணேசனின் திருவல்லிக்கேணி இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்திவிட்டு வந்தோம்.

பிறகு அவருடன் பணிபுரிந்தவர்களிடம் விசாரித்ததில் அவருக்கு ஆறு மாதங்களாய் தொடர்ச்சியான தலைவலி இருந்ததாகவும், பிறகு ஒருநாள் ஸ்கேன் செய்து பார்த்ததில் அது பிரைன் டியூமர் என தெரியவந்ததாகவும்  கூறினார்கள்.

பல வகையில் அதற்கான மருத்துவம் பார்த்தும் எதுவும் பயன் இல்லாமல் கடைசியில் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்ததாக சொன்னார்கள்.

அன்றிலிருந்து எனக்கு இந்த தலைவலியை பற்றிய பயம் மனதுக்குள் வந்து புகுந்து கொண்டது.

“எனக்கு அடிக்கடி வரும் இந்த தலைவலியும் கூட ஒருவேளை பிரைன் ட்யூமரின் அறிகுறியாக இருக்கலாம்!” என்ற என்ற கவலையே தலை வலியை விட அதிக வலியை தந்தது.

உமா சற்று சென்டிமென்ட் ஆனவள் கணேசனின் இறப்பின் போது கூட “ஏன் புது காரை எடுத்துட்டு போறீங்க? ஆட்டோவிலோ அல்லது டாக்ஸியிலோ போலாம் இல்ல?” என்று சொல்லியிருந்தாள்.

நான் தான் “நம்முடைய கார் இருக்கும்போது எதற்கு டாக்ஸியில் போக வேண்டும்?” என்று உடன் வந்த அலுவலக நண்பர்களையும் அழைத்துக் கொண்டு போய் ஒரு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தேன்.

என்னை சிறு வயது முதல் பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று இந்த நோசோபோஃபியா அதாவது ஏதேனும் ஒரு நோய்க்கான அறிகுறிகளை படித்தாலோ அல்லது யார் மூலமாக தெரிந்து கொண்டாலோ அது அப்படியே எனக்கும் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இந்த மருத்துவ பெயரை நானே கூகுளில் தேடிதான் தெரிந்து கொண்டேன்.

கணேசனின் இறப்பிற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் காலை அலுவலகத்திற்கு வந்த பின்னரும் அதேபோல் வீட்டிற்கு சென்ற பின்னரும் நல்ல தலைவலி இருப்பதை உணர்ந்தேன்.

என்னதான் நான் இது வெறுமனே நோசோபோஃபியா என்று மனதை தேற்றிக்கொண்டாலும், எனக்கு வரும் தலைவலி நிஜம். என்னால் தலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து காண்பிக்க முடியாது. ஆனால் முன்தலை முழுவதும் வலி பரவி இருக்கும்.

வலி என்னவோ தாங்கிக் கொள்ளக்கூடிய அளவில் தான் இருந்தது. ஆனால் எனக்குள் எழுந்த பயம் என்னை பாடாய் படுத்தியது. எனவே ஏதேனும் ஒரு டாக்டரை பார்த்து என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வது என முடிவெடுத்தேன்.

சென்னையின் சிறந்த மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. அங்கே கன்சல்டேஷன் பீஸ் மட்டும் இரண்டாயிரம் ரூபாய். ஆன்லைனில் அனுப்பி வைக்கும் முன் உமாவிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தேன். இல்லையென்றால் ஏதேனும் ஒரு சமயம் என்னுடைய வங்கி பரிவர்த்தனையில் வெளிச்சத்திற்கு வராத ஒரு இரண்டாயிரம் ரூபாயை நான் செலவு செய்திருக்கிறேன் என்று தெரிய வந்தால் ஒரு உலக யுத்தத்தையே மூட்டிவிடுவாள்.

“சாதாரண தலைவலிக்கெல்லாம் போய் டாக்டரை பார்க்கிறதே அதிகம்! அதிலும் நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவது, தலைவலியை தலையில தூக்கி வச்சு கொண்டாடுறத போல இருக்கு. நமக்கு இருக்கவே இருக்காரு தேவசகாயம். ரொம்ப கைராசிக்காரர்னு பெயர் எடுத்தவர். ஊரில் இருக்கிறவங்க எல்லாம் அவர போய் பார்க்கும்போது, நீங்க பாக்க மாட்டீங்களா?” என வலுக்கட்டாயமாக இங்கு நான் அனுப்பி வைக்கப்பட்டிருந்தேன்.

“என்பது என்பதஞ்சி உள்ள வாங்க” என்று சத்தமாய் குரல் கொடுத்தாள்  நர்ஸ். என்னிடமிருந்த டோக்கன் எண்ணை பரிசோதித்து விட்டு உள்ளே அனுப்பி வைத்தார் செக்யூரிட்டி.

உள்ளே வராண்டாவிலும் “நானே சத்தியமும் வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்ற ஒரு பதாகை இருந்தது. அதன் அடியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு மீண்டும் நான் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு மேலாக டாக்டரை பார்க்க காத்திருந்தேன்.

Leave a Comment