டாக்டர் தேவசகாயம் – பகுதி 1

“நிறுத்துங்க! எங்க அண்ணன யாருன்னு நினைச்சிட்டு இருக்கீங்க? சின்ன வயசுல உங்க எல்லோரையும் தவிக்க விட்டுட்டு போய் சேந்துட்டா உங்க அம்மா! அன்னைக்கு உங்க அப்பாவுக்கு சொந்தத்துலேயே பல பேரு பொண்ணு கொடுக்க தயாரா இருந்தாங்க. ஆனா  எங்க ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னோட குழந்தைகள பாத்துக்க முடியாம போயிடுமோன்னு, கல்யாணம் பண்ணிக்காம இருவது வருஷமா உங்களுக்காகவே வாழ்ந்தவருடி அவரு… அவரோட தியாகத்துலையும் உழைப்புலையும் படிச்சி ஆளாகிட்டு, இன்னைக்கு நீங்க அவரையே எதிர்த்து கேள்வி கேக்கிறீங்களா? ஏதோ அவர் ஆபிஸ்ல வேலை பாக்கற ஒரு பொண்ணு, அவருக்கு உடம்பு சரியில்லைன்னு வந்து பார்த்துட்டு போறதுக்கு, இப்படி கண்ணு மூக்கு காது வச்சு தப்பு தப்பா பேசுகிறீங்களே! உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு வெட்கமா இருக்கு! நீங்கல்லாம் மனுஷங்கதானா?  ச்சீ!!”

கழுத்தை சுற்றி தகதகவென மின்னும் ஆரமும், கை நிறைய தங்க வளையல்களும் மற்றும் ஜொலிக்கும் பட்டுப் புடவையும் அணிந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி தன் அண்ணனுக்காக பரிந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடி அவள் கண்டிப்பானவள் என்றும் அதேசமயம் தன்னம்பிக்கை மிகுந்தவள்  என்றும் எடுத்துக்காட்டும்படி இருந்தது.

அவளின் முன்னே இரண்டு திருமணமான பெண்களும் தத்தம் கணவன்மார்களுடன் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.  அவள் தன் அண்ணன் மகள்கள் மீது அளவுகடந்த ஆத்திரத்தில் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன், தலை கவிழ்ந்து நின்றவர்களிடம் விடாது தனது அண்ணனின் தியாக செயல்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

ஒரு பக்கம் தந்தையின் தியாக செயல்களை தனது அத்தை சொல்ல சொல்ல மற்றோரு பக்கம் மகள்கள் இருவரும் கண்கலங்கியபடி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் கணவர்களோ தங்களின் மோவாயை தடவிக்கொண்டு எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் அருகில் நின்றிருந்தனர். 

“இது எதோ மத்திம வயது காதல் விவகாரம்தான், ஏன் ஐம்பது வயதில் ஒருவனுக்கு, அதுவும் இவ்வளவு காலமாக தனிமையில் வாழும் ஒருவனுக்கு காதல் வரக்கூடாதா? தன் வாழ்க்கையையே தன் பிள்ளைகளுக்காக அர்பணித்துக்கொண்ட ஒருவன், தன் கடமை முடிந்தும் கூட தனிமையிலே உழன்று இறக்க வேண்டுமா?” என இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கே அந்த தியாக செம்மலை பார்க்க வேண்டும் என தோன்றிற்று.

நான் மட்டும் அல்ல என்னுடன் அந்த ரிசப்ஷன் ஹாலில் காத்திருந்த அனைவருக்கும் அந்த தந்தை மீது ஒரு கரிசனம் ஏற்பட்டிருக்க வேண்டும். ரிசப்ஷன் ஹாலில் இருந்த எல்லோரும் கொஞ்சம் கனத்த இதயத்தோடு இருந்ததனால் இடையில் யாரோ  சில எண்களை சொல்லி அழைத்திருந்ததை ஒருவரும் கவனித்திருக்கவில்லை .

நீல நிற சீருடை அணிந்த செக்யூரிட்டி ஒருவர் சரசரவென ஒரு ரிமோட்டை தூக்கி கொண்டுவந்து, ஹாலின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டியின்  ஒலி அளவை முழுவதுமாக குறைத்தார். அதே நேரத்தில் நாடகத்தில் விளம்பர இடைவேளையும் விடப்பட்டிருந்தது. விளம்பரத்தில் துணி சோப்பு நிறுவனம் ஒன்று வெண்மைக்கான சேலஞ் என்ற பெயரில் இரு பெண்களை துணி துவைக்க விட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தது.

நாங்கள் அமர்ந்திருந்த ரிசப்ஷன் ஹாலுக்கும் வலது புறத்தில் இருக்கும் வராண்டாவிற்கும் நடுவே ஒரு இரும்பு கேட் போடப்பட்டிருந்தது. தொலைக்காட்சியின் சத்தை நிறுத்திய செக்யூரிட்டி அந்த கேட் அருகே இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டான்.

“அறிவு கெட்டவன், சவுண்ட கம்மி பண்ணிட்டு போனா போதாதா  இப்படி சுத்தமா சவுண்ட நிறுத்திட்டா போவாங்க?” என்று செக்யூரிட்டியின் செயலால் ஏமாற்றமடைந்த சிலர் முணுமுணுத்தனர்.

இதற்காகவே காத்திருந்தது போல் வெள்ளை யூனிஃபார்ம் அணிந்த நர்ஸ் ஒருவர் “எவ்ளோ நேரம் கத்திட்டே இருக்கறது? டோக்கன் நம்பர் இருவது  இருவத்தஞ்சி உள்ள வாங்க!” என சத்தமாய் சொல்லிவிட்டு வராண்டாவினுள் நகர்ந்து கொண்டார்.

காத்திருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டோக்கன் எண்கள்  இருபதிலிருந்து இருபத்தைந்திற்குள் இருந்தால் அவர்கள் உள்ளே வராண்டாவிலிருக்கும் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்ளலாம். நர்ஸின் குரலைக் கேட்டு எழுந்த சென்ற சிலரின் டோக்கன் எண்ணை நன்கு சரிபார்த்த பின்னர் உள்ளே செல்ல அனுமதித்தார் செக்யூரிட்டி.

நான் பத்து ரூபாய் கொடுத்து வாங்கியிருந்த டோக்கனை சட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்து பார்த்தேன். ஒரு பெரிய ஸ்டாம்ப் சைஸ் அட்டையில் அருள் கிளினிக் என்று முத்திரையிடப்பட்டு எண்பத்திமூன்று என எழுதியிருந்தது.

இப்போதுதான் இருபது முதல் இருபத்தைந்து வரையிலான டோக்கன்காரர்கள் உள்ளே போயிருக்கிறார்கள். என்னுடைய நம்பர் வருவதற்கு குறைந்தது இரவு ஒன்பது மணி ஆகிவிடும் என்பதால் உமாவிற்கு போன் போட்டு ஒரு வார்த்தை சொல்லியிருந்தேன்.

ரோட்டில் நிறுத்துவதற்கு இடம் கிடைக்காமல் இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த பெருமாள் கோவில் அருகே என்னுடைய காரை  நிறுத்திவிட்டு வந்திருந்தேன். கார் வாங்கிய ஆறு மாதத்தில் மாதத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் கார் ஆறு இடங்களில் கோடு வாங்கியிருந்தது.

எனக்குத் தெரிந்து தி எலைட் மால் பார்க்கின் சுவற்றில் உரசி ஒரு முறையும் ஐடி பார்க் சிக்னலில் ஷேர் ஆட்டோவில்  உரசி ஒரு  முறையும் கார் கீறல் வாங்கியிருந்தது. மற்ற நான்கு கோடுகளும் எப்படி வந்து  என்றே எனக்கு தெரியாது.

அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்க்கும் சீனிவாசன் ஆளில்லாத இடத்தில் நீண்ட நேரம் நிறுத்தி இருக்கும் காரில் சும்மா ஜாலிக்கு கீறல் போடும் சைக்கோ மனிதர்கள் உண்டென்றும் அவர்களால்தான் என் காரில் இருக்கும் மற்ற கீறல்கள் தோன்றியிருக்கும் என்றும் ஒரு முறை விளக்கம் கொடுத்திருந்தான் என்னிடம்.

வாங்கி ஆறு மாதம் கூட ஆகாத காரின் மீது இனிமேலும் கீறல்கள்  வாங்க விருப்பமில்லை. அப்படியே போய் காரை எடுத்துக்கொண்டு நேராக வீட்டுக்கு சென்றுவிடலாமா என்றால் உமா என்னிடம்  காலையிலே திட்டவட்டமாக சொல்லியிருந்தால் நான் இன்று கட்டாயம் தேவசகாயம் டாக்டரை பார்த்து விட்டுதான் வர வேண்டும் என்று.

நான் சென்னைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில்  முதன்முறையாக இப்போதுதான் ஒரு டாக்டரை பார்க்க வருகின்றேன். எப்போதாவது வரும் ஜுரம், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு எங்கள் தெருவின் முனையில் இருக்கும் துபாய் மெடிக்கல்ஸ்லிருந்தே  மாத்திரை வாங்கி போட்டுக் கொள்வேன்.

துபாய் மெடிக்கல் ஷாப் ஓனர் ஷாநவாஸுக்கு தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் டாக்டருக்கு படிக்க முடியாமல் இன்ஜினியர் ஆகி விட்டார் போலும். வேலைக்காக துபாய் போனவர் அங்கேயே  செட்டில் ஆகி, பிறகு இருபது வருடம் கழித்து ஊருக்கு வந்தவர், தன்னுடைய இன்ஜினியர் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆரம்பித்ததுதான் துபாய் மெடிக்கல்ஸ்.

கேன்சர், மாரடைப்பு போன்ற கொடிய வியாதிகள் தவிர்த்து ஏனைய மற்ற பிரச்சனைகளுக்கு தேவையான எல்லா மருந்துகளின் பெயர்களும் அவருக்கு அத்துப்படி. வெள்ளைக் கோட்டும், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும் அணியாத டாக்டராக தனது இளம் வயது கனவை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

துபாய் மெடிக்கல்ஸின் பயனாளர்களின் நானும் ஒருவன். எப்போதும் அவர் கொடுக்கும் இரண்டு வேளை மாத்திரைகளே எனக்கு போதுமானதாக இருக்கும். சளியோ காய்ச்சலோ இரண்டு நாட்களில் காணாமல் போய்விடும். ஆனால் இந்த ஆறு மாதமாக இருக்கும் தலைவலி மட்டும் நின்றபாடில்லை. மாத்திரை எடுத்தவுடன் காணாமல் போயிருக்கும் பிறகு இரண்டே நாட்களில் திரும்ப வந்துவிடும்.

நானும் நான்கைந்து முறை துபாய் மெடிக்கல்ஸில் மாத்திரை வாங்கிவிட்டேன். நான் கடைசியாய் மாத்திரை வாங்கியிருந்த போது “எதுக்கும் போய் டாக்டரை பாருங்க சார்!” என்று அறிவுறுத்தியிருந்தார் ஷாநவாஸ்.

ரிசப்ஷன் ஹாலில் காத்திருந்த நோயாளிகளில் சிலர் மொபைல் போனில் மூழ்கியிருந்தனர். எனக்கு முன் வரிசையில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த பெரியவர் ஒருவர் குளிர் ஜுரத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். ஆனால் பலரும் டீவியில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஊமை நாடகத்தை இன்னமும் விடாப்பிடியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

விளம்பர இடைவேளைக்கு பின்னரும் அந்த பெண்மணி தனது அண்ணனின் தியாக புராணத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள். முன்பை விட அதிகமாக ஏதோ நெஞ்சை பிழியும் வகையில் பேசியிருக்க வேண்டும் என நினைக்கிறன். செக்கச்செவேலென்று உதட்டில்  சாயம் பூசி நன்றாக முக அலங்காரம் செய்திருந்த அவ்விரு மகள்களின் கண்கள் தற்போது கலங்கியிருந்தன.

எனக்கு இடது புறம் அமர்ந்திருந்த அறுபது வயதான பெண்மணி  ஒருவர் இதற்கெல்லாம் காரணம் அவர்களின் தாய்மாமன் குணசேகரன் தான் என்றும் இது தெரியாமல் அவர்கள் தன்னுடைய தந்தையை சந்தேகிக்கிறார்கள் என்றும் தன்னுடைய கண்டுபிடிப்பாக ஒன்றை உதிர்த்தார். சுற்றி இருந்தவர்களும் ”ஆமாம். குணசேகரன் ஒன்றும் லேசுப்பட்டவனல்ல” என்று அதையே ஆமோதித்தனர்.

எனக்கு இப்போது அப்பெண்களின் தந்தையுடன் சேர்த்து அந்த குணசேகரனையும் பார்க்கவேண்டும் என்பது போல் இருந்தது. அத்தைக்காரி ஐந்து நிமிடத்திற்கு சளைக்காமல் பேசியிருப்பாள். தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்கு பழகியிராத எனக்கு அந்த பெண்ணின் உதட்டசைவிலிருந்து வார்த்தைகளை பிடிப்பது கடினமாக இருந்தது.

ஆனால் என்னை சுற்றியிருந்த மற்றவர்களோ எந்த  சிரமமும் இல்லாமல் நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். நாடகத்திற்கு பழக்கப்பட்ட அவர்களுடைய மூளை கண்கள் வழியாக அந்த ஊமை நாடகத்தை மொழியாக்கம் செய்து கொண்டிருந்தது.

நாடகத்தில் தற்போது மீண்டும் ஒரு இடைவேளை இந்தியாவின் முன்னணி டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட டூத் பேஸ்ட் ஒன்று புத்துணர்ச்சி மிகுந்த சுவாசத்தை அளிக்கும் என்ற உறுதியுடன் விளம்பரப்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. அதில் ஸ்வெட் ஷர்ட் அணிந்த கல்லூரி மாணவி சக மாணவர்களுடன் உற்சாகமாக எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தாள்.

“ஏம்மா! உள்ள முப்பத்தஞ்சி நாப்பது போய்க்கினு இருக்கு.  நீ இருவதியேழாம்  நம்பர வச்சிக்கினு இப்பதான் வர?” அனைவரின் காதில் விழும்படி கத்தினார் செக்யூரிட்டி. 

சற்று முன்னர் அவ்விரு மகள்களின் சந்தேகத்திற்கு எல்லாம் காரணம் அந்த குணசேகரன் தான் என்று கண்டுபிடித்திருந்தவர் நர்ஸ் அழைத்திருந்ததை தான் கவனிக்கவில்லை என்று அங்கே செக்யூரிட்டியிடம்  விளக்கமளித்து கொண்டிருந்தார்.

“முப்பத்தஞ்சி நம்பருக்கு கம்மியா யாராவது இங்க இருக்கீங்களா? எத்தினி தடவ கூப்பட்றது!” செக்யுரிட்டியின் குரல் அந்த ரிசப்ஷன் ஹாலில் கணீர் என்று கேட்டது.

இரண்டு பேர் கையை உயர்த்திக் கொண்டு நாங்களும் விடுபட்டவர்கள் தான் என்று கேட் அருகே போய் நின்றார்கள். 

“வேறு யாராவது இருக்கீங்களா?” செக்யுரிட்டியின் பார்வை நான் அமர்ந்திருந்த இடம் நோக்கி திரும்பியது.

நான் தலையை பலமாக இல்லை என்பதுபோல் அசைத்தேன். அம்மூவரையும் செக்யூரிட்டி ஒரு சிறிய காத்திருப்புக்கு பின்  அனுமதித்தார்.

அவர் சொல்வதும் சரிதான். நாடகத்தை பார்த்துக் கொண்டே  தனக்கான  அழைப்பு வரும்போது கோட்டை விட்டுவிட்டு பிறகு விளம்பர இடைவேளையில் வந்து நின்றால் யாருக்குத்தான் கோபம் வராது.

புதிதாக மேலும் சிலர் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். ஹாலுக்கு வெளியே டோக்கன் விநியோகிக்கும் பெண்ணொருத்தி ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது போல், சிறிய சிறிய சதுரங்களாக வெட்டி  வைத்திருந்த அட்டையில் அருள் கிளினிக் என்று முத்திரையிட்டு டோக்கன் நம்பரை எழுதி கொடுத்துக் கொண்டிருந்தார்

என்னருகே அமர்ந்திருந்த  தாடிக்கார கிழவர் ஒருவர் இருமிக்கொண்டே “இன்னைக்கு வியாழக்கிழமை, அதான் கூட்டமா இருக்கு“ என்றார்.

உமாவின் கண்மூடித்தனமான நம்பிக்கையில் ஒன்று, உடம்பிற்கு எந்த நோவு வந்தாலும் வெள்ளிக்கிழமையில் மட்டும் டாக்டரை போய் பார்க்கக் கூடாது. ஒரு வேளை அப்படி பார்த்துவிட்டால் நோவு வளர்ந்துகொண்டே போகுமாம்.

“ஒருவேளை இங்கு வந்தவர்களில் பலருக்கும் அந்த ஐதீகம் இருப்பதனால்தான் வியாழக்கிழமையே வந்து விட்டார்களோ?” என்ற சந்தேகம் வந்திருந்தது எனக்கு.

எனக்கு உமா சொல்வதைப்போல வெள்ளிக்கிழமை ஐதீகம் இல்லை என்றாலும் என்னால் அடிக்கடி வரும் இந்த தலைவலியையும் அது தரும் பயத்தையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தென் இந்தியா முழுக்க கிளை பரப்பியிருக்கும் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு செல்ல இருந்த என்னை வலுக்கட்டாயமாக தேவசகாயம் டாக்டரை பார்க்கும்படி சொல்லியிருந்தவள் உமாதான். அப்படியே அவர் ஒரு கைராசிக்காரர் என்ற உபரி தகவலையும் தந்திருந்தாள். இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்த்தால் அது உண்மைதான் என்று தோன்றியது.

இந்த கைராசிக்காரர் அடைமொழி மீதெல்லாம் எனக்கு பெரிய அபிப்பிராயம் ஒன்றும் இல்லை என்றாலும் “முதலில் ஏதாவதொரு சின்ன கிளிக்கில் பார்க்கலாம், விஷயம் பெரியது என்றால் நான் ஏற்கனவே முடிவு செய்து இருந்தபடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு போய் பார்த்துவிட வேண்டியதுதான்!” என்ற முடிவில் இருந்தேன்.

உமாவோ “வெறும் தலைவலிக்கு போய் யாராவது மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு போவாங்களா?” என்று நினைத்திருக்க கூடும். உமாவிடம் என் தலைவலி பற்றி சொல்லியிருந்தேனே தவிர எனக்குள் இருந்த பயத்தை பற்றி சொல்லவில்லை.

Leave a Comment