அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், வெள்ளை நிற டொயோட்டா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து காதை கிழிக்கும் சத்தத்துடன் தெலுங்கு பாடல் ஒன்று அலறிக் கொண்டிருந்தது. அக்காரிலிருந்து ஒரு இளவட்டக் கூட்டம் இறங்கி, பாலத்தை நோக்கி நடந்து வந்தது.
பார்ப்பதற்கு தென்னிந்திய முகஜாடையுடன் இருந்த அந்தக் கூட்டத்தினரில், தமிழன் யாராவது இருக்க போகிறான். கொடியுடன் நிற்கும் என்னை பார்த்தால், “உண்ட உணவுக்கு காசு கொடுக்காததால், தண்டனையாக இவனை கொடியாட்ட வைத்து விட்டார்கள்” என்று தவறாக நினைத்துவிடக் கூடும் என்று வேறு எங்கோ பார்த்துக்கொண்டு, தீவிர சிந்தனையில் இருப்பது போல நடித்தேன்.
அவர்கள் தங்களுக்குள்ளாகவே லூட்டி அடித்துக் கொண்ட பேச்சைக் கேட்டபோது, அவர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அனுமானித்துக் கொண்டேன். இருப்பினும், தீவிர சிந்தனையாளன் போல நடிப்பதை நான் நிறுத்தவில்லை.
அப்போது, நான் கிட்டத்தட்ட இருபத்திநான்கு மணி நேரமாக மறந்திருந்த ஒரு குரல்—யாரிடமோ போனில் பேசிக்கொண்டே வரும் சத்தம்—அந்தக் கூட்டத்தின் நடுவில் கேட்டது.
ஆஹா! அது முபாரக்கின் குரலாயிற்றே.
“ஒரே முகஜாடையில் இவ்வுலகில் ஏழு பேர் இருப்பதைப் போல, ஒரே குரல் உடையவர்களும் இருக்க வேண்டும், இறைவா!” என்று பிரார்த்தனை செய்துகொண்டே கூட்டத்தின் நடுவில் பார்த்தேன். ஆம்—அது முபாரக்கேதான்.
அந்தக் கூட்டத்திலிருந்து அவனுடைய உருது பேச்சு கணீர் கணீரென கேட்டது. “கியாகர்த்தே…” என யாரிடமோ பேசிக்கொண்டே நடந்து வந்தார். போனின் மறுமுனையில் இருப்பது அவரது மனைவியோ, அல்லது மனைவி வழி உறவினர் யாராவதொருவராகத்தான் இருக்க வேண்டும்.
கொடிக் கம்பை நைசாக சுருட்டி கீழே வைத்துவிட்டேன். என்னை அவர் கவனித்தாரோ இல்லையோ, பிரேக்டவுன் ஆனது போல நிற்கும் எங்களது காரை அவர் அடையாளம் கண்டுகொண்டார்.
அப்படியே சென்று விடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கு மாறாக, என் பெயரை சொல்லி அழைத்தார். பெரிய அதிர்ச்சியெதையும் முகத்தில் காட்டாமல், “என்ன ஆயிற்று காருக்கு?” என்றார்.
யாராவது இப்படிக் கேட்க மாட்டார்களா என நான் எதிர்பார்த்திருந்தவன் போல. அந்நேரம் வரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டி தீர்த்துவிட்டேன்.
“எல்லாம் இந்த பாழாய் போன டிரைவரால்தான் வந்தது!” என்றேன் முபாரக்கிடம்.
அதற்குள், என்னைச் சுற்றிலும் அந்த தெலுங்கு இளைஞர் கூட்டம் சூழ்ந்துகொண்டது. போலீஸ் குற்றவாளியை துருவி துருவி விசாரிப்பது போல, கேள்வி மேல் கேள்வி கேட்டு ஏதாவது ஒரு துப்பு கிடைக்குமா என பார்த்தனர். எல்லாம் எனக்கு உதவி செய்வதற்காகத்தான் என்பதால், எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னேன் நான்.
அவர்களில் ஒருவன் “மீரூ தெலுகா?” என்று கேட்டதற்கு, “இல்லை; ஆனால் என்னால் தெலுங்கை ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும்,” என்று சும்மா சொல்லிவைத்தேன்.
முபாரக் கடகடவென காரியத்தில் இறங்கினார். அவர் கேட்டுக்கொண்டபடியே, பாலத்தில் எந்த இடத்தில் சரண்சிங் சாவியை தலைக்குமேல் தூக்கி போட்டு நழுவ விட்டானோ, அந்த இடத்தை காட்டினேன்.
அந்த இடத்தில் நின்றுகொண்டு, பியாஸ் நதியின் போக்கையே கவனித்துக்கொண்டிருந்த முபாரக், இடது பக்க கரையை காட்டி, “சரி வாங்க; எல்லோரும் அங்கே போய் தேடுவோம்,” என்றார்.
“ஜி, அது இந்நேரம் கடலுக்கே அடிச்சிட்டு போயிருக்கும்,” என்று நான் சொன்னதை, முபாரக் காதில் வாங்கவில்லை.
அவருடன் வந்திருந்தவர்கள், ஆற்றில் இறங்கி சாவியை தேடுவது ஒரு சாகசமாக இருக்கும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். எல்லோரும் முபாரக் சொன்னதையே ஆமோதித்தார்கள்.
எனக்கும் திடீரென ஒரு குருட்டு நம்பிக்கை பிறந்தது. “அட… முயற்சி செய்துதான் பார்ப்போமே!” என்று நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்.
சரசரவென பாலத்தின் மறுமுனைக்கு சென்று, அங்கிருந்து ஆற்றின் கரைக்கு இறங்க ஏதேனும் வழியிருக்கிறதா என தேடிப் பார்த்தோம். பாலத்தைத் தாண்டி, மற்றொரு மலைக்கு ஏறுவதற்கான ஒரு மண் சாலையும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த சில வீடுகளையும் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் அடர்த்தியான செடிகளும் முட்புதர்களும் தான் இருந்தன.
ஆராய்ந்து பார்த்ததில், கீழிறங்க ஒரே ஒரு வழியைத்தான் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அது மானஸா ஹோட்டலிலிருந்து பின்புறமாக கீழிறங்கும் ஒற்றையடிப்பாதை. அதை அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அமைத்திருப்பார்கள் என தோன்றியது. நான் நேராக ஹோட்டலுக்குள் சென்றேன்.
உள்ளே யாரிடமோ வேலை வாங்கிக்கொண்டிருந்த ஆஜானுபாகுவானவரை கண்டுபிடித்து, எங்கள் நோக்கத்தை கூறினேன். அவருக்கும் அங்கே சாவி கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் என தோன்றியிருக்க வேண்டும். வேலைக்காரர்களிடம் பஹாரி மொழியில் ஏதேதோ பேசினார்.
பிறகு, “கரையில் நின்று மட்டும் தேடிப் பாருங்கள். எந்த காரணத்தையும் கொண்டு நதியில் இறங்கக்கூடாது,” என்று அன்பு கட்டளையுடன் கூறி, கூடவே சில ஹோட்டல் ஊழியர்களையும் எங்களோடு சாவி தேடும் பணிக்கு அனுப்பி வைத்தார்.
சரளை கற்களால் ஆன பாதையில் இறங்குவது எங்களுக்கு சிரமமாக இருந்தது. ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் இறங்கி, எங்களுக்கு முன்பாகவே சென்றுகொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவன், “மணி ஐந்து ஆகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்,” என்று எங்களை துரிதப்படுத்தினான்.
பனிப்புகையுடன் குளிர் காற்றும் சேர்ந்து கொண்டது. நான் கைகளை ஒன்றோடு ஒன்று உரசி கன்னத்தில் வைத்துக்கொண்டேன். முபாரக்கின் நண்பர்களில் சிலர் சிகரெட் புகையை ஊதி, உடம்பை சூடேற்றிக்கொண்டே இறங்கினார்கள்.
ஆற்றங்கரையை அடைந்ததும், முபாரக் அனைவரையும் வரிசையாக, இரண்டடிக்கு ஒருவரென, கரையில் கொட்டியிருந்த கற்களின் மீது நிற்கச் சொன்னார். அவரின் திட்டம் தெளிவாக இருந்தது.
நாங்கள் பன்னிரண்டு பேர் ஒரே சமயத்தில், சரியாக இரண்டு நிமிடங்கள், அவரவர் இடத்தில் தேட வேண்டும். இரண்டு நிமிடம் முடிந்ததும், அப்படியே எல்லோரும் நகர்ந்து, பன்னிரெண்டாவது ஆள் நின்ற இடத்திலிருந்து மீண்டும் தேடலை ஆரம்பிக்க வேண்டும்.
அதனால், எல்லோரும் ஒரே இடத்தில் தேடுவதை தவிர்க்க முடியும்; அப்படியே முடிந்த அளவு பெருவாரியான இடத்தில் தேடிப்பார்க்கலாம். எங்களுடன் வந்திருந்த ஹோட்டல் ஊழியர்களும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.
திட்டமிட்டபடியே தேடுதல் வேட்டை தொடங்கியது. பியாஸ் நதிக்கரையில் புதையலை தேடும் மனிதர்களைப் போல, நாங்கள் அனைவரும் சாவியை தேடத் தொடங்கினோம்.
கரையெங்கும் கொட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான பாறாங்கற்கள் மீது எங்களால் வழுவாமல் நிற்க முடிந்தது. அருகில் பியாஸ் நதி பெரும் இரைச்சலுடன், நீர்திவலைகளை எங்கள் மீது வாரித் தெளித்தபடி, சடசடவென ஓடிக்கொண்டிருந்தது.
“பானி மேன் மாத் ரகோ!” என்று எல்லோருக்கும் கேட்கும்படி, மானஸா ஊழியர் ஒருவர், ஆஜானுபாகுவானவரின் கட்டளையின்படி, எங்களை ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரித்துக்கொண்டே இருந்தார்.
பியாஸ் ஆற்றுத் தண்ணீர் உறையவைக்கும் குளிர்ச்சியோடு இருக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் வருடம் முழுவதும் சதா ஓடிக்கொண்டே இருக்கும் நதி என்பதாலோ என்னவோ, அந்த நீர்திவலைகளில் ஓர் இளஞ்சூடு இருப்பதை உணர்ந்தேன்.
ஒரு இடத்தில் தேடலை ஆரம்பிக்கும் போதும், தேடல் முடிந்து அடுத்த இடத்திற்கு நகரும் போதும், உரக்க குரல் கொடுத்து எல்லோரையும் ஒருங்குபடுத்தினார் முபாரக்.
கூட்டத்தில் ஒருவன், “யார் முதலில் சாவியை கண்டுபிடிக்கிறார்களோ, அவர்களுக்கு நான் ஒரு கிராம் தங்க காசு கொடுக்கப் போகிறேன்,” என்று என்னை கிண்டல் செய்தான்.
“அதென்ன! வெறும் ஒரு கிராம் தங்க காசு? ஒரு பவுன் தங்க செயினே போட்டு விடுகிறேன்,” என்றேன் நான் பதிலுக்கு.
நாங்கள் எதோ பரிசுப் பொருட்களைப் பற்றித்தான் பேசி சிரிக்கிறோம் என்பது ஹோட்டல் ஊழியர்களுக்கும் புரிந்து போனது. ஒருவேளை அவர்கள் அதை உண்மையென்று நம்பினார்களா, இல்லையா என்று தெரியவில்லை; ஆனால் அதன் பின்னர் சாவியை தேடுவதில் அவர்கள் ஒரு வேகம் காட்டினார்கள்.
எல்லோரும் மிகுந்த சிரத்தையுடன் தேடிக்கொண்டிருந்தார்கள். என்னைத் தவிர, மற்ற எல்லோருக்கும் சாவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது போலத் தோன்றியது.
ஆனால், பிரபஞ்ச ஈர்ப்பு விதியைப் பற்றி எத்தனையோ புத்தகங்களை புரட்டி புரட்டி படித்த எனக்கு, சாவியை கண்டுபிடிப்பது என்பது முடியவே முடியாத காரியம் என்றே தோன்றியது. அது இந்நேரம் இந்த பியாஸ் நதியால் அடித்துச் செல்லப்பட்டு, எங்கோ போய் தொலைந்திருக்கும் என மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
“கீ டொரிக்கிண்டி!”
வெள்ளை ஸ்வெட்டர் அணிந்த முபாரக்கின் நண்பன் ஒருவன் உரக்கக் கத்தினான். ஆற்றின் வெள்ளம், சாவியை அவன் நின்ற இடத்திற்கு அருகிலிருந்த இரண்டு பாறைகளின் இடுக்கில் கொண்டு வந்து சொருகி வைத்திருந்தது. அதை அப்படியே கையிலெடுத்து, விஷ்ணுவின் சக்கராயுதம் போல சுழற்றி காட்டினான்.
ஆம்—அது சரண்சிங் தூக்கிப்போட்டு பிடித்த, மஞ்சள் நிற ஸ்மைலி பொம்மை இணைக்கப்பட்ட அதே சாவிதான்.
“இதி நீ கீயா… காடோ, சூடு ப்ரோ!” என்று அதை என்னிடம் தூக்கிப் போட்டான் அந்த வெள்ளை ஸ்வெட்டர்காரன்.
பறந்து வந்த சாவியை பிசிறு தட்டாமல் பிடித்தேன். தண்ணீரில் நனைந்திருந்ததால் அது நன்கு குளிர்ச்சியாக இருந்தது. சாவியோடு இணைக்கப்பட்ட ஸ்மைலி பந்து, “மடையா… இவ்வளவு நேரம் என்னை தேடாமல் என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று சிரிப்பது போல இருந்தது.
பாறைமேல் நின்றிருந்த வெள்ளை சொக்காய் காரனிடம் சென்று கைகுலுக்கி நன்றி சொல்லி, கட்டியணைத்துக்கொண்டேன். முபாரக் என்னை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். நேராக அவர் முன் சென்றேன்.
எத்தனை முறை நன்றி சொல்லியிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் அவர் சிரித்துக்கொண்டே, “இதற்குப் போய் நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட தேவையில்லை,” என்றார்.
நாங்கள் பியாஸ் நதியில் எதை தவறவிட்டோமோ, அதை அந்த நதியே எங்களுக்கு திருப்பித் தந்துவிட்டது. இந்த ஊருக்கு விருந்தினராக வந்தவன் ஏமாந்து போகக்கூடாது என்று நினைத்திருக்கும் போல.
தேடுதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடாமல், தேடித்தேடி கைகுலுக்கி நன்றி தெரிவித்தேன். முபாரக்கின் நண்பர்களில் சிலர், “நல்லவேளையாக மிதக்கக்கூடிய ஸ்மைலி பொம்மை சாவியோடு இணைக்கப்பட்டிருந்ததால், சாவி மூழ்குவதிலிருந்து தப்பிடிச்சு,” என்று பேசிக்கொண்டார்கள்.
முதல் வேலையாக கமலுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தேன். அவன் முதலில் நான் சொல்வதை நம்பவில்லை. பிறகு, “எங்கே? எப்படி? யாரால் சாவி கிடைத்தது?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை துளைத்தெடுத்தான்.
“நீங்க இருவரும் அப்படியே குல்லுவின் தி கிரேட் ஹிமாலயன் பார்க்கில் காத்திருங்கள். ஒரு மணி நேரத்தில் உன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை தருகிறேன்,” என்று சொல்லிவிட்டேன்.
அதற்குள் சூரியன் மறைந்து, இருள் மெல்ல எட்டிப் பார்த்தது. நல்லவேளையாக, சூரிய அஸ்தமனத்திற்குள் சாவியை கண்டுபிடித்து விட்டோம் என்று ஹோட்டல் ஊழியர் ஒருவர் நிம்மதி அடைந்தார். அனைவரும் மொபைல் போன் வெளிச்சத்தின் உதவியோடு ஹோட்டலை வந்தடைந்தோம்.
விஷயம் கேள்விப்பட்டு, ஆஜானுபாகுவானவர் குஷியாகிவிட்டார். நதியோடும் திசையை நோக்கி கைகூப்பி நமஸ்கரித்து, “அதிதி தேவோ பவ! தேவி விபாஷா ஒருபோதும் தன்னை நாடி வந்தவர்களை கைவிடமாட்டாள்,” என்றார்.
பியாஸ் நதி முன்னொரு காலத்தில் தேவி விபாஷாவின் பெயரால் அழைக்கப்பட்டது என்றும், விபாஷா என்றால் சமஸ்கிருதத்தில் பந்தம் அறுப்பவள் என்றும், சில வேதகால சமாசாரங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ஹனோகி பாலத்தில் நானும் முபாரக்கும் காரை நோக்கி போய்க்கொண்டிருந்தோம். முபாரக்கின் நண்பர்கள், மானஸா ஹோட்டலில் இரவு உணவிற்கான ஆர்டரை கொடுத்துவிட்டு, பியாஸ் நதியை பார்த்தபடி பால்கனியில் போய் அமர்ந்துகொண்டார்கள்.
ஆஜானுபாகுவானவர் எத்தனையோ முறை என்னை உணவருந்த சொல்லி வற்புறுத்தியும், நான் தவிர்த்துவிட்டேன். அங்கே குல்லுவில் கமலும் சரண்சிங்கும் என் வருகைக்காக காத்துக் கொண்டிருப்பதால், இப்போது நான் சாப்பிடும் மனநிலையில் இல்லை என்பதை வணக்கத்துடன் தெரிவித்திருந்தேன்.
இறுதியாக அவர் தன் பெயர் தனஞ்செய் எனவும், மணாலியிலிருந்து திரும்பும் போது கட்டாயம் இங்கு வந்து உணவருந்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். “அப்படியே ஆகட்டும்” என்று தனஞ்செய்யிடம் கைகுலுக்கி விடை பெற்றேன்.
நல்லவேளையாக, வெள்ளை சொக்காய்காரன் ஒரு பவுன் செயின் பரிசு தருவது பற்றி எதுவும் கேட்கவில்லை. தொங்கு பாலத்தில் நடந்து வரும் போதும் கூட, யாரிடமோ முபாரக் போனில் கிசுகிசுவென பேசிக்கொண்டே வந்தார்.
காரைச் சுற்றிலும் நான் ஜோடனை செய்து வைத்திருந்த கற்களையும் செடியையும், கொடியசைப்பவர் அகற்றியிருந்தார். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்.
காருக்குள் அமரும் முன், முபாரக்கிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு, “ரங்லா ஹவேலியில் சந்திக்கலாம்; அதற்கு முன் முடிந்தால் மணாலியில் பார்க்கலாம்,” என்றேன்.
“அங்கும் போய் சாவியை தவறவிட்டு விடாதீர்,” என்று கிண்டலடித்தார் முபாரக்.
சிரித்துக்கொண்டே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தேன்.
கார் கிளம்பும் தருவாயில், கொடியசைப்பவன் கைகளை நீட்டி என்னை போகவிடாமல் தடுத்தான். இவன் என்ன, இன்னும் தனஞ்செய் சொன்னபடி என்னை போகவிடாமல் தடுக்கிறானா என்று புரியாமல் பார்த்தேன்.
அப்போது ஓட்டல் ஊழியக்காரன் ஒருவன் ஓடிவந்து, “தனஞ்செய் ஜீயின் உத்தரவு… உங்களிடம் இதை கொடுத்து விட்டு வர வேண்டும்,” என்று கார் ஜன்னல் வழியாக ஒரு கனமான பையை என்னிடம் திணித்தான்.
அதில் குறைந்தது ஐந்து பேர் சாப்பிடக்கூடிய அளவிற்கு, வட இந்திய மற்றும் சைனீஸ் உணவு வகைகள் சுடசுட டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
என்ன செய்வது என்று தெரியாமல், முபாரக்கை பார்த்து விழித்தேன். “அதான் தனஞ்செய் சொன்னாரே—‘அதிதி தேவோ பவ’ன்னு. வாங்கிக்கொள்ளுங்கள்,” என்றார் முபாரக்.
அங்கிருந்த ஒருவரையும் விடாமல் ஹனோகி பாலம் உட்பட எல்லோருக்கும் பலமாய் போய் வருகிறேனென கையசைத்தேன். தேவி விபாஷா இந்த அடியேனுக்கு வழிநெடுக காவலாய் இருக்க வேண்டும் என்று வணங்கி குல்லு நோக்கி புறப்பட்டேன்.
—•◦ முற்றும் ◦•—