காரின் முன்னிருக்கையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த என்னை கமலக்கண்ணன் உலுக்கி எழுப்பினார். கண்விழித்து பார்த்தால், கார் ரோட்டிலிருந்து இறங்கி ஏதோ ஒரு ஆல மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்தது.
கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரையிலும் ஒரே வயல் வெளிகளும், அதன் மீது வெண்மையான புகைப் பனியும் பரவியிருந்தது. கண்ணை கசக்கிக்கொண்டே வெளியில் நின்றிருந்த கமலிடம், “இது எந்த இடம்?” என்றேன்.
“நாம பதன்கோட் போற வழியில இருக்குற ஒரு குக்கிராமத்துல இருக்கோம் ஜி. இங்க வந்து பாருங்க,” என்று அருகில் இருந்த ஒரு வாய்க்காலை காட்டினான் கமலக்கண்ணன்.
காரிலிருந்து இறங்கியதும், காலை நேர கடுங்குளிர் உடம்பைத் துளைத்தது. உடனே கார் டிக்கியைத் திறந்து, உள்ளிருந்த எனது கிளிப் பச்சை நிற ஸ்வெட்டரை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. அதற்குள், “இங்க வாங்க ஜி,” என்று கையைப் பிடித்திழுத்துக்கொண்டு போய், அருகிலிருந்த வாய்க்காலை காட்டினான் கமல்.
இருபுறமும் கான்க்ரீட் கரை கட்டப்பட்டிருந்த வாய்க்காலில், பளிங்கு போலத் தூய்மையானதொரு நீர்ப் பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது. அதன் வாய்க்காலின் ஆழத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது; அப்படியொரு தெளிவான வாய்க்காலை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை.
நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே, சில சீக்கிய இளைஞர்கள் வாய்க்காலின் கான்க்ரீட் கரையில் நின்றுகொண்டு, கரணம் அடித்து தண்ணீருக்குள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் கையசைத்து ஆரவாரம் செய்தனர். கூடத்திலிருந்து ஒருவன், “மதராஸி,” என்றான்.
அதற்கு அர்த்தம், “நீங்கள் மெட்ராசிலிருந்து வருபவர்கள்தானே? எப்படி சரியாகக் கண்டுபிடித்தேன் பார்த்தீர்களா?”என்பதாகும். மற்றொருவன், எங்களுக்கு நீச்சல் தெரியும் என்றால் இறங்கி குளித்துப் பாருங்கள் இல்லை என்றால் தள்ளி நில்லுங்கள் என்று பணிவோடு சொன்னான்.
“எங்களுக்கா நீச்சல் தெரியாது? இதோ பாருங்கள்,” என்று நானும் கமலக்கண்ணனும் உடுப்புகளை கழற்றி மடித்து வைத்துவிட்டு, நடுங்கும் குளிரிலும் வாய்க்காலில் கண்ணாடி போல ஓடிக்கொண்டிருந்த தண்ணீருக்குள் பாய்ந்தோம்.
தண்ணீரின் குளிர்ச்சியில், உறை பனியில் மூழ்கியவனைப் போல உணர்ந்தேன் நான். இதயத்துடிப்பு எகிறத் தொடங்கியது. கை கால்கள் விறைத்துப் போகாமல் இருக்க, தேவைக்கதிகமான வேகத்தில் நீரோட்டத்தின் எதிர்திசையில் நீச்சல் அடித்தேன்.
தண்ணீரின் வேகம், கரையிலிருந்து பார்ப்பதைவிட அதிகமாக இருந்தது. வாய்க்காலோ இரண்டு ஆள் மூழ்கும் அளவிற்கு ஆழமாக இருந்தது. தண்ணீரின் வேகத்தின் காரணமாக, ஒன்று கான்க்ரீட் சுவற்றைப் பிடித்துக்கொண்டே குளிக்க வேண்டும்; அல்லது நீரோட்டத்திற்கு எதிர்திசையில் நீச்சல் அடித்தவாறு இருக்க வேண்டும். இல்லையென்றால், நீரின் வேகம் நம்மை அடித்துக்கொண்டு சென்று விடும்.
சீக்கிய இளைஞர்களைப் பார்த்து, “இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது?” என்றேன். துடுக்கான ஒரு பையன், “ஓ, அதுவா… வானத்திலிருந்து வருகிறது,” என்றான். மற்றொருவன் அவன் தலையில் தட்டிவிட்டு, என்னிடம், “இந்த தண்ணீர் எல்லாம் சக்கி ஆற்றில் கட்டப்பட்ட அணை மூலமாக, இங்கிருக்கும் கோதுமை வயல்களுக்கு பாய்கின்ற நீர்,” என்றான்.
நாங்களும் அந்த சீக்கிய இளைஞர்களைப் போல கரைமேல் எழுந்து நின்று, மீண்டும் ஓடும் தண்ணீருக்குள் பாய்ந்தோம். மீண்டும் மீண்டும் இந்த விளையாட்டைத் தொடர்ந்தோம். கொஞ்ச நேரத்தில் வாய்க்கால் நீர் எங்களுக்கு கதகதப்பாக மாறியிருந்தது. அதே சமயம், தண்ணீரை விட்டு எழுந்தால் வெளியே உடலை நடுநடுங்கச் செய்யும் குளிரும் இருந்தது.
தண்ணீருக்குள் குதித்து மீண்டெழுந்து, திரும்பவும் தண்ணீருக்குள் குதிக்கும் இந்த விளையாட்டு போய்க்கொண்டிருக்கும் போது, சரண் சிங் எங்கிருந்தோ ஜர்தாவைத் துப்பிக்கொண்டே வந்தான். “என்ன அண்ணா, மஜாவாக இருக்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே, கான்க்ரீட் கரையின் மேலே குத்தங்காலிட்டு அமர்ந்துகொண்டான்.
எங்கோ தமிழ்நாட்டிலிருந்து மூவாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கும், மொழி தெரியாத ஒரு ஊரில் ஏற்படும் அனுபவம், அப்படியே அச்சு அசல் தமிழ்நாட்டில் நடப்பதைப் போலவே இருந்தது. என்ன, அங்கே நம்ம ஆட்கள் வெறும் தலையுடன் இருப்பார்கள்; இங்கே இவர்கள் டர்பன் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்—அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்தச் சம்பவத்தை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதற்காக, அவர்களுடன் சேர்ந்து நானும் கமலும் போட்டோ எடுத்துக்கொண்டோம். சீக்கிய இளைஞர்கள் எங்களுடன் விதவிதமாய் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்கள். கைகளை மடக்கி புஜபலத்தை காட்டியும், மீசையை முறுக்கிக் காண்பித்தும், பங்கரா நடனம் ஆடுவது போலவும் எங்கள் அருகே நின்றார்கள்.
போட்டோக்களை “போதும், போதும்” என்ற அளவிற்கு சேர்ந்து எடுத்துத் தள்ளியிருந்தோம். பொறுமையாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சரண் சிங், “போதும் அண்ணா; இதைவிட அற்புதமான இடங்கள் போகும் வழியில் உள்ளன. நாம் கிளம்பலாம்,” என்றான்.
சீக்கிய இளைஞர்களுக்கு பிரியாவிடை கொடுத்து புறப்பட்டோம். வெகுநாட்களுக்கு பிறகு, அதுவும் நீரோட்டத்திற்கு எதிர்திசையில் நீச்சல் அடித்ததில், உடம்பெல்லாம் களைத்துப்போன அசதியில் காருக்குள் அமர்ந்ததும் மீண்டும் தூங்கிவிட்டேன்.
இரண்டு மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை. கண்விழித்துப் பார்த்தால், எங்கள் கார் இமாச்சல் மலைப்பாதையில் தம் கட்டி ஏறிக்கொண்டிருந்தது. மலைமேல் ஏற ஏற, காருக்குள்ளே குளிர் கவ்வியது. நல்ல வேலையாக, காருக்குள் அமரும் முன் எனது கிளிப் பச்சை நிற ஸ்வெட்டரை அணிந்துகொண்டேன்.
குளிரை போக்க, இரு கைகளையும் ஒன்றோடொன்று உரசி சூடாக்கி கன்னத்தில் ஒற்றிக்கொண்டேன். இதை இதற்கு முன்பு சரண் சிங் பார்த்ததில்லை என நினைக்கிறேன். “என்ன செய்கிறீர்கள் அண்ணா?” என அப்பாவியாக கேட்டான்.
“இப்படி செய்தால் கைகளில் சற்று சூடு பரவி, குளிருக்கு இதமாய் இருக்கும்,” என்றேன்.
“எங்கே, நானும் கொஞ்சம் சூடேற்றி பார்க்கிறேன்,” என்று ஸ்டியரிங்கிலிருந்து கையெடுத்துவிட்டு, இரு உள்ளங்கைகளையும் ஒன்றாகத் தேய்த்துப் பார்த்தான்.
தூக்கிவாரிப்போட்டது எங்களுக்கு. அடே பாவி! எதிரே ஒரு கார் வந்தாலே, நம் காரின் ஒரு பக்க டயர்கள் தார் ரோட்டிலிருந்து கீழிறங்கி, எந்நேரமும் சரிந்து விழும் நிலையில் இருக்கும் சரளைக்கற்கள் மீதுதான் செல்ல வேண்டும்—அந்த அளவிற்கான சிறிய சாலையில் பயணிப்பதே ஒரு சாகசம்தான். இவன் என்னவென்றால், ஸ்டியரிங்கிலிருந்து கையெடுத்துவிட்டு உடம்பை சூடேற்றி பார்க்கப் போகிறானாம்!
இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம் என்று முறைத்துப் பார்த்தேன். அதை புரிந்துகொண்டவன், “டீகே ஜி, டீகே ஜி,” என்று கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
பாதையெங்கும் எங்களுக்கு வலதுபுறத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. எங்கோ மலைமேலிருக்கும் ரோத்தாங் பாஸ் என்ற இடத்தின் அருகே பனி உருகுவதால் ஒன்று திரளும் நீர்ப் பிரவாகம், புவியீர்ப்பு விசையால் ஆறாக உருமாறி, இமாச்சல் மலையை விட்டு கீழிறங்கி பஞ்சாப்பின் சட்லஜ் நதியில் கலக்கிறது.
சடசடவென பாய்ந்தோடும் பியாஸ் நதியின் இரைச்சல் எனக்குக் கேட்க கேட்க ஆனந்தமாய் இருந்தது. நதி நான்காயிரம் அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து ஓடி வருவதால் ஏற்படும் நுரைகள், இருபக்க கரைகளிலும் ஒதுங்கியிருந்தன.
ஆறு கரை தாண்டி விடக்கூடாது என்பதற்காக, இருபக்க கரைகளிலும் சதுர வடிவில் வெட்டப்பட்ட கருங்கற்களை அடுக்கி பலப்படுத்தியிருந்தார்கள். அந்தக் கற்களின் மீது அமர்ந்து கொண்டு, சில கருப்பு குல்லாய் அணிந்த சிறுவர்கள் தூண்டில் போட்டு, மீன் ஏதாவது சிக்குமா எனக் காத்துக்கொண்டிருந்தனர்.
பியாஸ் நதியின் அழகை ரசித்துக்கொண்டிருக்கும் போதே, எங்களது திட்டத்தின்படி நாங்கள் பார்க்க வேண்டிய முதல் இடமான ஹனோகி தொங்குபாலம் வந்தது. கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் நீளமுள்ள தொங்குபாலம், பியாஸ் நதியின் மேல் கட்டப்பட்டிருந்தது. ஆற்றைக் கடந்து செல்வதற்கு உள்ளூர்வாசிகளுக்கிருக்கும் ஒரே வழி அந்த ஹனோகி பாலம்தான்.
ஹனோகி பாலத்தின் வாயிலை ஒட்டி, பத்துக்கும் மேற்பட்ட கார்களும் நிற்கும் அளவிற்கு ஒரு கார் பார்க்கிங் இருந்தது. மலைப் பிரதேசமாக இருப்பதால், பார்க்கிங் ஏரியா சமதளமாக இல்லாமல் சற்றுச் சாய்ந்தபடி இருந்தது. அங்கு காரை நிறுத்துவதென்பது ஒரு சவாலான காரியம்தான். பார்க்கிங் பகுதியில் ஒரு சிறிய மரத்தால் ஆன கேட் ஒன்று போடப்பட்டிருந்தது. பார்க்கிங் ஏரியாவுக்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்குமான ஒரே வழி அதுதான்.
சரியாக அந்த இடத்தில்தான் சரண் சிங் காரை ரோட்டிலிருந்து சர்ர்ரென இறக்கி நிறுத்தினான். “ஏன் இப்படி வாயிலை அடைத்துக்கொண்டு நிறுத்தி இருக்கிறாய்?” என்று கேட்டதற்கு, “நான் காரிலேயே இருக்கிறேன்; பார்க்கிங் ஏரியா திறந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு வருகிறேன்,” என்றான். அதுமட்டுமல்லாமல், இது ஒரு சிறிய பாலம்தான் என்றும், பார்ப்பதற்கு அதிக நேரம் தேவைப்படாது என்றும் கூடுதல் தகவலும் தந்தான்.
ஹனோகி பாலத்தில் எங்களைத் தவிர, அப்போது வேறு சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை. பாலத்தின் வாயிலை ஒட்டி இரண்டு கடைகளும், அதைத் தள்ளி ஒரு வீடும் இருந்தது. பியாஸ் நதியில் சுற்றுலாப் பயணிகள் எவரும் சாலையிலிருந்து இறங்காமல் இருக்க, இரும்பு வலை வேலி ஒன்று அமைத்திருந்தார்கள். அந்த வேலியில் ஆங்காங்கே பல இடங்களில் மானஸா ரெஸ்டாரண்ட் என்றெழுதப்பட்ட பிளாஸ்டிக் அட்டைகள் மாட்டப்பட்டிருந்தன.
மிகத் தடிமனான இரும்புக் கயிறுகள் கொண்டு கட்டப்பட்ட ஹனோகி பாலம், பியாஸ் ஆற்றின் மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. பாலத்தின் தரைப்பகுதியில் போடப்பட்டிருந்த மரக்கட்டைகள், இரும்பு வளையங்களால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன.
இரு கட்டைகளுக்கு நடுவே இரண்டு இஞ்ச் அளவிற்கு இடைவெளி இருந்தது. மலையில் வீசும் குளிர் காற்றின் வேகத்தில், பாலம் லேசாக இடமும் வலதுமாக அசைந்துகொண்டிருந்தது. காட்டாறு போல கீழே பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த பியாஸ் நதியின் இரைச்சலுக்கு எங்கள் காதுகள் பழகிக்கொள்ள சற்றுநேரம் பிடித்தன.
அதுவரை, முபாரக்கைப் போல நானும் கமலக்கண்ணனும் கத்திக் கத்திப் பேசிக்கொண்டிருந்தோம். பாலத்தின் மீது ஏறி, நாங்கள் குலுங்காமல் சில அடிகளை பயத்துடன் எடுத்து வைத்தோம். பாலம் அங்கும் இங்குமாய் சற்றே நெளிந்ததே தவிர, அதன் ஸ்திரத்தன்மைக்கு ஒரு குறைவும் இல்லாமல் கம்பீரமாய் நின்றது.
தொங்குபாலத்தின் மீது நடந்து, அதன் நடுப்பகுதிக்கு செல்லச் செல்ல, எதோ பியாஸ் நதியின் மீது நாங்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. கீழே சலசலத்து ஓடும் நீரின் வேகத்தில் எழும் நீர்த்துளிகளில் சில மேலே பறந்து எங்கள் மீதும் பட்டன.
ஆளாளுக்கு மாற்றி மாற்றி போட்டோ எடுக்கத் தொடங்கியிருந்தோம். தனித்தனியாக நின்றும், சேர்ந்து நின்றும், பியாஸ் நதி தெரியும் படியாக பல்வேறு கோணங்களில், வெவ்வேறு முகபாவனைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
நான்கு புறமும் பச்சைப் பசேலென்று இருக்கும் மலைகளால் சூழப்பட்ட இடத்தில் தொங்கும் இரும்புப் பாலத்தின் மேல் நின்றுகொண்டிருக்கிறோம். எங்களுக்கு கீழே, ரோத்தாங் பாஸ் என்ற இடத்தில் உருவாகி, சட்லஜ் நதியில் கலந்து, இறுதியில் அரபிக்கடலில் கலக்கும் பியாஸ் நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
தலைக்கு மேலே திக்கு தெரியாமல் மலை முகட்டில் முட்டிக்கொண்டிருக்கும் மேகங்களும், அதிலிருந்து இறங்கும் பனிப்புகையும், சில்லென வீசும் குளிர்காற்றும் தரும் அனுபவத்தை எந்தக் கேமராவாலும் படம் பிடிக்க முடியாது என்றே எங்களுக்கு தோன்றியது.
காரிலிருந்து இறங்கியதும், அருகே இருந்த சிற்றுண்டிக் கடைக்காரர் யாருக்காகவோ பிரட் ஆம்லெட் போட்டுக்கொண்டிருந்தார். அதன் வாசனையில் பசி மெல்ல எட்டிப் பார்த்திருந்தது. பாலத்தை விட்டு புறப்படும் முன், சில ஆம்லெட்டுகளைச் சுடசுட சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என நினைத்திருந்தோம்.
ஆற்றின் நீர்ப் பெருக்கையும், சுற்றி இருக்கும் மலைகளின் பிரம்மாண்டத்தையும் ரசித்துக்கொண்டே பாலத்தின் மறுமுனைக்கு வந்து விட்டோம். அங்கே, மாடர்னாக கட்டப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்று இருந்தது. அதன் மேல் மானசா என்று இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர்பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
அங்கே, முதல் தளத்திலே ஆற்றை ரசித்துக்கொண்டே உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்ட வசதியான பால்கனி ஒன்று எங்களை கவர்ந்தது. அங்கு அமர்ந்துகொண்டே நதி பிரவாகத்தை ரசிப்பதை விட பேரானந்தம் ஒன்றுமில்லை எனத் தோன்றியதால் குறைந்தபட்சம் ஒரு டீயையாவது அங்கே குடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளே சென்றோம்.
உள்ளே, ஊழியர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்த மாத்திரத்தில், அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களை விரட்டுவது போல, “ரெஸ்டாரண்ட் பன்னிரண்டு மணிக்கு மேல்தான் திறக்கும்,” என்று காட்டமாக சொன்னான்—எல்லோரையும் திட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்த மேனேஜர் ஒருவன்.
அதன் பொருள், நாங்கள் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் வெளியேற வேண்டும் என்பதுதான். ஆனால் அது புரியாத கமலக்கண்ணன், “பரவாயில்லை; நாங்கள் அந்த பால்கனியில் சிறிது நேரம் இருந்து விட்டுச் செல்லலாமா?” என்றான்.
யாரோ ஒருவரின் பெயரை கத்தி அழைத்தார் மேனேஜர். ஆஜானுபாகுவான ஒரு மனிதர் ஓடிவந்து, “கடை பன்னிரண்டு மணிக்கு மேல்தான் திறக்கும். இப்ப எங்களை தொந்தரவு செய்யாமல் வெளியேறுங்கள்,” என்று சொல்லி, எங்களை கையைப் பிடித்து இழுத்து வராத குறையாக வெளியில் கொண்டு வந்து விட்டார்.
“தூத்தெறி! இந்த சிடுமூஞ்சி ரெஸ்டாரண்டுக்கு ஒருத்தனும் வரக்கூடாது,” எனச் சபித்துக்கொண்டே, பாலத்தில் திரும்பி நடந்து வந்துகொண்டிருந்தோம் நாங்கள் இருவரும். பாலத்தின் எதிர் முனையில் எங்களைத் தேடி சரண் சிங் வந்து கொண்டிருந்தான்.
வெகு நேரமாக அவன் காருக்குள் அமர்ந்து எங்களுக்காகக் காத்திருக்க வேண்டும்; நாங்கள் வராததால் அவனே எங்களைத் தேடி வந்து விட்டான். தொங்கு பாலம் சற்று ஆடிக்கொண்டிருந்ததால், வரும்போது நாங்கள் சற்று தடுமாறியபடியே நடந்துவந்திருந்தோம்.
ஆனால் இந்த சரண் சிங்—எனக்கு இதெல்லாம் பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்பதுபோல்—எந்த வித தடுமாற்றமும் இல்லாமல், கையில் ஸ்டைலாக கார் சாவியைச் சுழற்றியபடி நடந்து வந்தான். மறுமுனையில் நாங்கள், “சரி, அவனும் இந்த முனைக்கு வந்து விடட்டும்; பிறகு ஒன்றாகத் திரும்பிப் போகலாம்,” என்று அவன் வருவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தோம்.
பாலத்தின் நடுப்பகுதிக்கு வந்தவன், கீழே ஆர்ப்பரித்து செல்லும் நதியைப் பார்த்து உற்சாக மிகுதியில் “ஹேஹே” வெனக் கத்தினான். அப்படியே சற்று எம்பிக் குதித்து பார்த்தான். பாலம் சற்று குலுக்கியதே தவிர, அதன் உறுதித்தன்மைக்கு எந்தக் குறைவும் இல்லாமல் இருந்தது.
இப்படி சலசலத்து செல்லும் நீரின் மேல் ஏதாவது சாகசம் செய்ய நினைத்திருப்பான் போல, விரலில் மாட்டியிருந்த கார் சாவியை தலைக்கு மேலே தூக்கிப் போட்டு பிடித்தான் சரண் சிங். கமலுக்கும் எனக்கும் அவர் செய்வது பேரதிர்ச்சியாக இருந்தது. ஒருவரை ஒருவர் விழி பிதுங்கப் பார்த்துக்கொண்டோம்.
“அடேய் முட்டாள்! நீ ஒன்றும் தரையில் நிற்கவில்லை. தப்பித்தவறி கார் சாவி ஆற்றில் விழுந்தால், அத்தோடு நீ அதை மறந்துவிட வேண்டியதுதான்!” என்று கத்தினேன்.
“அதெல்லாம் ஒன்றும் கீழே விழாது அண்ணா,” என்று சொல்லிக்கொண்டே, சாவியை முன்பைவிட அதிகமான உயரத்தில் தலைக்கு மேலே தூக்கிப் போட்டு பிடிக்கப் பார்த்தான். அது நான் சொன்னதுபோலவே, அவன் கையில் பட்டு கீழே—அதுவும் இரண்டு கட்டைகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளி வழியாக—ஆற்றினுள் விழுந்து ஜலசமாதியானது.
சில வினாடிகள், இது நிஜமா இல்லை கனவா என்று எங்களுக்கு தெரியவில்லை. அங்கே பாலத்தில், தலையில் கையை வைத்துக்கொண்டு, கட்டைகளின் இடைவெளி வழியாக சாவி விழுந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் சரண் சிங்.