இந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் ஏன்தான் வருகின்றனவோ? ஏன் எல்லா நாட்களும் வேலை நாட்களாகவே இருக்கக் கூடாதா? என தோன்றும் அளவிற்கு என்னை வெறுப்படையச் செய்தவர், என்னுடைய அறைவாசியும் பக்கத்து படுக்கைக்காரருமான முபாரக். உருது பேசும் இஸ்லாமியரான முபாரக்கின் சொந்த ஊர் ஐதராபாத். ரங்லா ஹவேலி என்று அழைக்கப்படும் அந்த ஆண்கள் விடுதியில் நாங்கள் தங்கியிருந்த முதல் இரண்டு வாரங்களில், அவர் என்னிடம் சேந்தார் போல பத்து வார்த்தைகள் பேசி இருந்தால் அதுவே அதிகம். என்னிடத்தில் மட்டுமல்ல, வேறு யாரிடத்திலும் அவர் பேசுவதை நான் பார்த்ததில்லை. அவர் யாரிடமாவது பேசுகிறார் என்றால், எனக்குத் தெரிந்து அது அவருடைய போனில் மட்டுமே. முபாரக் ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் நெட்வொர்க் துறையின் மேனேஜராக வேலை பார்க்கிறார் என்று, எங்களின் அறிமுகப் பேச்சின் போது சொல்லியிருந்தார்.
நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் மாலை ஆறு மணிக்கெல்லாம் எங்கள் அலுவலக வாகனங்கள் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிடும். ஆறு மணி ட்ரிப்பை விட்டுவிட்டால், அடுத்த ட்ரிப் ஏழரை மணிக்குத்தான். எனக்கு ஏழரை மணி வரை வேலை பார்ப்பது பற்றியோ அல்லது அலுவலகத்தில் நேரம் செலவிடுவது பற்றியோ ஒரு கவலையும் இல்லை. மணி ஆறு ஆனதும் என்னுடைய டீமில் இருக்கும் அனைவரும் வீட்டிற்கு பறந்து விடுவார்கள். எல்லோரும் கிளம்பிய பின்னர், நான் தனி ஆளாக அங்கு கணினியைத் தட்டிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டிவரும். அதுமட்டுமன்றி, எங்கள் அலுவலகத்தின் மனிதவளப் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில், ஆறு மணிக்கு மேல் அனைத்து குளிர்சாதன வசதிகளும் நிறுத்தப்பட்டுவிடும்.
அலுவலக நேரம் முடிந்ததும் நாங்கள் வேளையோடு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு ஏற்பாடு அது என்றாலும், அலுவலகம் ஒன்றே கதி என இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அது சங்கடத்தைத் தந்தது. ஆதலால் நானும் ஆறு மணி காரைப் பிடித்து ரங்லா ஹவேலி விடுதிக்கு வந்து விடுவேன். முபாரக்கும் சரியாக ஆறரை மணிக்கு விடுதிக்கு வருவார். அவருடைய அலுவலகம் டெல்லி வஸந்த் விஹார் அருகே அமைந்திருந்தது. அங்கே ஊழியர்களை இப்படி காரில் கொண்டு போய் வீட்டில் விடும் வசதியெல்லாம் இல்லை என நினைக்கிறேன். ஒருநாளும் அவர் காரில் வந்திறங்கி நான் பார்த்ததில்லை.
விடுதியில் ஐம்பதுக்கும் குறையாத நபர்கள் தங்கியிருந்தனர். என்னுடைய அறையில் மொத்தம் மூன்று பேர் நான், முபாரக் மற்றும் வருண். இதில் வருண் நாசிக் நகரத்தைச் சேர்ந்தவன். முதல் முறை நான் அவனைப் பார்க்கும் சமயம், “வேர் ஆர் யூ ஃப்ரம்?” என்று கேட்டதற்கு, நாசிக் என்று ரூபாய் நோட்டுகளை எண்ணுவது போல் சைகை செய்தான். அலுவலகம் முடிந்து விடுதிக்கு வந்ததும், மடிக்கணினியை வைத்துக்கொண்டு இரவு பன்னிரண்டு மணி வரை யாரிடமோ சாட் செய்து கொண்டிருப்பான். ஏதாவது தொலைபேசி அழைப்பு வந்தது என்றால், போனை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விடுவான். யாரிடம் பேசுகிறோம் என்பது வெளியில் தெரியக் கூடாது என்பதில் கருத்தாக இருப்பவன். எதேச்சையாகக் கூட அவனது கணினித் திரையை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, அருகில் இருக்கும் சுவரில் சாய்ந்தபடி அவனுடைய கட்டிலில் அமர்ந்திருப்பான்.
என்னுடைய பிரச்சனையெல்லாம் இந்த முபாரக் தான். மாலை சரியாக ஏழரை மணிக்கு அறைக்கு வருவார். அப்போது நான் ஏதாவதொரு புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். பொதுவாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு “ஹாய்” சொல்லிக்கொள்வது வழக்கமாக இருந்தது. அறைக்குள் வந்த சிறிது நேரத்தில், அவருடைய நீல நிற சோனி ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு தன்னுடைய போன் உரையாடலைத் தொடங்கிவிடுவார். பெரும்பாலும் தன் மனைவி வழி உறவினர்களிடமே தான் அவர் நீண்ட நேரம் பேசி வருவதை நான் பார்த்திருக்கிறேன். பேச்சு என்றால் சாதாரண பேச்சு அல்ல; காட்டு கத்தலாக இருக்கும். ஒரு மனிதன் இவ்வளவு சத்தமாக பேச முடியும் என்று அன்று தான் நான் பார்த்தேன். ஆரம்ப நாட்களில் என்னால் புத்தகத்தில் கவனத்தை செலுத்த முடியாமல், ‘சரி, அவர் பேசி முடிக்கட்டும்’ என காத்திருப்பேன். அவர் பேச்சில் சுவாரஸ்யம் கூட்டுவாரே தவிர, பிறருக்காகத் தன் போன் உரையாடலை முடிவுக்கு கொண்டு வருவதோ அல்லது வெளியில் சென்று பேசுவதோ அவரால் முடியாத காரியம்.
போன் உரையாடலின் போது அவரது பேச்சின் வீரியம் மெல்லக் குறைந்து கொண்டே வரும். அப்படி வீரியம் குறைகிறது என்றால், மறுமுனையில் இருக்கும் அந்த நபருடனான உரையாடல் முற்றுப் பெறப் போகிறது என்று அர்த்தம். மறுமுனையில் பேசி முடித்தவர்கள் போனை அடுத்த ஆளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவார்கள் போலிருந்தது. அடுத்த நபருடன் முபாரக் மீண்டும் பழைய வீரியத்துடன் உரையாற்றுவார். இந்த உரையாடல் ஒன்பது மணி வரை—அதாவது அவர் பக்கத்திலிருக்கும் ஆந்திரா மெஸ் ஹோட்டலுக்கு சாப்பிட எழுந்து செல்லும் வரை—தொடரும்.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த போன் உரையாடலுக்கு இடையில் தனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் மல்டி டாஸ்கிங் முறையில் முடித்துக்கொண்டே இருப்பார். போனில் பேசிக்கொண்டிருக்கும் அந்த இரண்டரை மணி நேரத்தில், பேண்ட்-ஷர்ட்டிலிருந்து லுங்கிக்குத் மாற்றலாகி, ஒரு தேங்காய் பூ துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூம் வேலைகளை முடித்துவிட்டு, கை, கால், முகம் கழுவி அப்படியே தன்னுடைய சூட்கேசில் இருக்கும் ரெக்ஸோனா ரோல்ஆனை எடுத்து கண்ணாடி முன் நின்று இரண்டு அக்குள்களிலும் தடவிக்கொண்டு புத்துணர்வு அடைவார். பிறகு, அழுக்கு துணிகளை அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் சலவை கூடையில் போட்டுவிட்டு, அவருடைய சலவை செய்த துணிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அயர்ன் செய்யத் தொடங்குவார்.
விடுதியின் நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு, விடுதியின் உரிமையாளரான விகாஸ் சிங் செய்திருந்த ஏற்பாடு அது. அஃதாவது, விடுதியில் ஒருவன் குளியலுக்காக பயன்படுத்தும் நீரின் அளவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை; ஆனால் துணி துவைக்க வேண்டும் என்றால், அதை அவரால் அங்கீகரிக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்களிடமே கொடுக்க வேண்டும். துணி துவைப்பதற்குப் போதுமான அளவு தண்ணீர் விடுதியில் இல்லை என்பதால்தான் இப்படி ஒரு ஏற்பாடு. துணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வார இறுதியில் சலவைத் தொகையை கணக்கிட்டு கொடுத்துவிட வேண்டும்.
உருதுவும் கிட்டத்தட்ட இந்தியைப் போலவே இருந்தாலும், என்னால் முபாரக் ஆற்றும் தொலைபேசி உரையாடல் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாததொன்றாகவே இருந்தது. அவருடைய தொலைபேசி உரையாடலிலிருந்து எனக்குப் பரிச்சயமாகிப் போன வாக்கியம் ஒன்று உண்டு என்றால், அது ‘கியாகர்த்தே’ தான். அதை ஒரு ராகத்துடன் அவர் சொல்லும் விதமே தனித்துவமானது.
பின்னாளில், அவை இரண்டும் தனித்தனி வார்த்தைகள் என்றும், அதனுடைய அர்த்தம் “என்ன செய்கிறாய்” என்பதையும் தெரிந்து கொண்டேன். எல்லோரிடமும் அவர் போன் உரையாடலை ‘கியாகர்த்தே’ என்ற வார்த்தையுடன்தான் தொடங்குவார்—நாம் “எப்படி இருக்கே?” என்று தமிழில் தொடங்குவதுபோல. மனைவியிடம் தொடங்கும் ‘கியாகர்த்தே’ விசாரிப்பு, அப்படியே மைத்துனி, மைத்துனர், மாமியார் என்று போய், கடைசியாக மாமனாரிடம் முடிவடையும் என்று நினைக்கிறேன். கால் மணி நேரத்தில் ஒரு முறையாவது இந்த ‘கியாகர்த்தே’ என்ற வார்த்தை என் காதில் விழுந்துகொண்டே இருக்கும்.
நான் தங்கியிருந்த விடுதியின் கீழ்த்தளத்தில் தஞ்சாவூர்காரர் ஒருவர் புதிதாக வந்திருந்தார். பெயர் கமலக்கண்ணன். அவருடன் அறிமுகம் ஏற்பட்ட சில நாட்களிலேயே நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். என்னதான் விடுதியில் நாங்கள் மற்றவர்களிடம் ஆங்கிலத்திலும் அரைகுறை இந்தியிலும் பேசிக்கொண்டிருந்தாலும், அந்த உரையாடல் எப்போதும் எங்களுக்கு நிறைவைத் தந்ததில்லை.
எனவே ஒன்று அவர் என்னுடைய அறைக்கு வந்து விடுவார், அல்லது நான் அவருடைய அறைக்குச் சென்று விடுவேன். விடுதி உரிமையாளரான விகாஸ் சிங், அப்போது ஒரு கடுமையான விதிமுறை ஒன்றை விதித்திருந்தார். அதன்படி, எக்காரணம் கொண்டும் யாரும் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையைத் தவிர வேறு அறைக்குச் செல்லக் கூடாது. பொருட்கள் அடிக்கடி திருடுபோகிறது என தொடர்ந்து எழுந்த புகார்களின் அடிப்படையில், விடுதியில் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. அதாவது, உங்கள் அறைக்கு வேறு அறைக்காரர்கள் வரமாட்டார்கள்; ஆதலால், உங்கள் அறையில் காணாமல் போகும் பொருட்களுக்கு நீங்களே பொறுப்பு. நண்பர்களாகவே இருந்தாலும், வேறு அறைவாசியாக இருந்தால் வெளியே சென்றுதான் பேச வேண்டும்.
ஆனால் இந்த ஷரத்துகளை நானும் கமலக்கண்ணனும் மதிப்பதே இல்லை. நாங்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பேச்சுத் துணைக்கு எனக்கு கமலக்கண்ணனையும், கமலக்கண்ணனுக்கு என்னையும் தவிர அங்கு வேறு ஆட்கள் இல்லை. அதனால் விகாஸ் சிங் எங்களின் இந்த விதிமீறல்களை கண்டும் காணாதது போல விட்டுவிடுவார்.
சில சமயங்களில் எனக்கு இந்த முபாரக்கின் காட்டு கத்தலிலிருந்து எங்காவது தப்பி ஓட வேண்டும் போலிருக்கும். அந்த மாதிரியான நேரங்களில் ஏதாவதொரு புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு கமலக்கண்ணனின் அறைக்குச் சென்று விடுவது வழக்கம். அவர் அறையில் புதுதில்லியில் வேலை பார்க்கும் லக்னோவைச் சேர்ந்த இரட்டையர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் வேற்று அறைவாசியான நான் வந்து போவதைப் பற்றி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
பெரும்பாலும் அவருடைய அறைக்கு நான் போவதுதான் வழக்கம். ஆனால் அன்று ஒரு மாறுதலுக்காக, கமலக்கண்ணன் என்னுடைய அறைக்கு வந்து எனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் படுக்கையின் ஒரு முனையில் அமர்ந்துகொண்டார். அப்போது வழக்கம் போல் யாரிடமோ போனில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த முபாரக், கமலக்கண்ணனைப் பார்த்தும் பார்க்காதது போல வேறு எங்கோ திரும்பிக்கொண்டார். எதைப் பற்றியோ என்னிடம் சொல்ல வருகிற கமலக்கண்ணன், அதை முபாரக்கின் காட்டு கத்தலுக்குள் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, முபாரக்கை கையால் சீண்டி, “ஜி, கொஞ்சம் மெதுவா பேசுங்க” என்றான் தமிழில்.
ஆனால், அதை புரிந்து கொள்வதற்கு அவர் ஒன்றும் தமிழ் முபாரக் இல்லை; அவர் ஒரு உருது முபாரக். பேசுவதை நிறுத்திவிட்டு, என்ன? என்பது போல் முறைத்தார்.
இந்த முறை கமலக்கண்ணன், “மெதுவாக பேசுங்கள்; நாங்கள் எல்லோரும் அருகில்தானே இருக்கிறோம்” என்று ஆங்கிலத்தில் மரியாதை கலந்த வேண்டுகோளொன்றை வைத்தார்.
ஆனால் வேற்று அறைவாசி ஒருவன் தன்னைத் தொட்டு பேசியது, தன்னுடைய தன்மானத்திற்கு விடப்பட்ட அறைகூவல் என அவர் நினைத்துவிட்டார் போலும். “நீ இந்த அறைக்குள் வந்ததே தவறு. விகாஸ் சிங் பார்க்கும் முன் வெளியே சென்று விடு” என்று உரக்கக் கத்திவிட்டு, தன்னுடைய தொலைபேசி உரையாடலை மீண்டும் தொடர்ந்தார்.
நானும் கமலக்கண்ணனும் திருதிருவென விழித்தோம். யாரடா இவன், “கத்தி பேச வேண்டாம்” என்றதற்கு “வெளியே போங்கள்” எனச் சொல்கிறான். அவன் யார் எங்களை வெளியே போக சொல்லுவதற்கு என்று அங்கேயே உட்கார்ந்திருக்க ஆசைதான்.
அதன் மூலம் முபாரக்கிற்கு நாங்கள் உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல என்று நிரூபித்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக எங்கள் பொன்னான நேரத்தையும், கூடவே கிழியும் காது சவ்வையும் விலையாகக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதால், மறுபேச்சு ஏதும் பேசாமல், இருவரும் அறையை விட்டு வெளியே சென்றோம்.
அன்றிலிருந்து நான் முபாரக்கை முகம் கொடுத்துக் கூட பார்ப்பதில்லை. எங்களுக்குள் இருந்த அந்த ஹாய்–பாய் பரிமாற்றங்கள் கூட நின்றுபோனது.
மறுநாள் காலை குளித்து முடித்து, படுக்கையில் ஏறி அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டேன். எப்போதெல்லாம் நான் ஏதாவது கோபமாக எதிர்வினையாற்ற நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் முடிந்த அளவுக்கு தியானத்தில் ஈடுபடுவது என் வழக்கம். என்னுடைய தியானம் என்பது புத்தர் வழியில், மூச்சுக் குழலில் கவனத்தைக் குவித்து தியானிக்கும் முறை. என்னதான் நான் மூச்சில் கவனம் செலுத்தினாலும், என் மனம் முழுவதும் முபாரக் பற்றியே—அவன் யார் எங்களை வெளியே போகச் சொல்ல?—என்று பொருமிக்கொண்டிருந்தது.