என்னைப் பற்றி

இருபது வருடங்கள் மென்பொருள் துறையில் காலத்தை கழித்தும், சிறுவயது முதல் இருக்கும் எழுத்தின் மீதான எனது காதல் தீர்ந்தபாடில்லை. காதலை மூட்டை கட்டி தோளில் போட்டுக்கொண்டு வேலையைப் பார்த்தாலும், அது விக்கிரமாதித்தனின் வேதாளத்தைப் போல மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது.

நான் இனி ஒருபோதும் வேதாளத்தை என் முதுகில் சுமக்கப் போவது இல்லை.

தன்னை ஓவியனென சொல்லிக்கொள்ளும் என் நண்பன் வரைந்த சித்திரம் ஒன்று ஓவியப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது.

ஓவியத்திற்கான தலைப்பு — குளம்.

ஒரு குளத்தைக்கூட வரையத் தெரியாதவன் என்ன பெரிய ஓவியனென, அவன் வரைந்த சித்திரத்தை தேடிப்போய் பார்த்தேன்.

அதில் குளத்தைச் சுற்றியிருக்கும் பலாசு மரங்கள், கண்மாய், முறிந்த கிளையுடன் நிற்கும் ஆலமரம், அதிலேறி நிற்கும் குரங்கு, கரையிலிருந்து கீழே இறங்கும் சட்டையில்லாத சிறார்கள், தூண்டிலுடன் கரைமேல் ஏறும் மனிதன், சிறுமரமொன்றில் கட்டியிருக்கும் கழுதை, வானத்தில் பறக்கும் மீன்கொத்தி, அதற்கும் மேலே ஒரு பருந்து — என எல்லாமும் இருந்தது… குளத்தைத் தவிர.

என் எழுத்திற்கும் அவன் வரைந்த சித்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்கப் போவதில்லை.

என்னைப் பொறுத்த மட்டில் கதை என்பது சொல்லப்படுவது அல்ல — புரிந்து கொள்ளப்படுவதே.